BB Tamil 9 Day 17: ‘ஏண்டா.. என் சாப்பாட்டை சாப்பிட்டே?” - திவாகரிடம் பாருவின் ரு...
மாதம் ரூ.2,00,000 வருமானம் வேண்டுமா? Retirement Life-ஐ நிம்மதியாகக் கழிக்க இதுதான் ஒரே வழி!
இன்றைய நிலையில் நம்மில் பெரும்பாலானவர்கள் ஓய்வுகாலம் குறித்தும், ஓய்வுகாலத்தில் தேவைப்படும் செளகரியங்களுக்கான செலவுகள் குறித்தும், அதை இப்போதிருந்தே எப்படிச் சேமிக்கலாம் என்பது குறித்தும் யோசிப்பதே கிடையாது.
ஆனால், பெரும்பாலான நிதி ஆலோசகர்கள், ஒருவர் சம்பாதிக்க ஆரம்பிக்கும் முதல் மாதத்தில் இருந்தே, தங்களது சம்பளத்தின் ஒரு பகுதியை ஓய்வுகாலத்துக்காக ஒதுக்கி அதை குறைந்தபட்சம் 12% வருமானம் தருகிற மியூச்சுவல் ஃபண்ட் (Mutual Fund) முதலீட்டுத் திட்டங்களில் முதலீடு செய்ய வேண்டும் என்கிறார்கள்.
ஓய்வுகாலத்தில் தேவைப்படும் நிதியை எப்படி முறையாகச் சேமிப்பது என்பதை நிதி ஆலோசகரும், Future Wealth Investment நிறுவனத்தின் தலைவருமான கே.எஸ்.மகேஷிடம் பேசினோம். அவர் கொடுத்த தெளிவான திட்டம் இங்கே...
40 வயதில்தான் வாழ்க்கை ஆரம்பிக்கிறது!
"இன்றைய நிலையில் பெரும்பாலானவர்கள் கவலை கொள்கிற விஷயமாக மாறியிருக்கிறது ஓய்வுகால நிதி சேமிப்பு. '40 வயசு ஆயிடுச்சு. ஆனா, நான் இன்னும் ஓய்வுகாலத்துக்கான நிதியைச் சேமிக்க ஆரம்பிக்கல. என்ன பண்றதுன்னே தெரியல' என என்னிடம் வருகிற வாடிக்கையாளர்கள் பலர் புலம்புவதைக் கேட்டிருக்கிறேன்.
நான் அவர்களுக்குச் சொன்ன விஷயங்களைத்தான், விகடனின் வாசகர்களுக்கு இங்கே சொல்கிறேன். 40 வயதாகிவிட்டது, இன்னும் என்னால் சேமிக்க முடியவில்லை என யாரும் வருத்தப்படாதீர்கள், 'Life begins at 40'.
58 வயதில் நீங்கள் ஓய்வு பெற போகிறீர்கள் எனில், மீதம் இருக்கும் 18 வருடம் முறையாகச் சேமித்தால் உங்களால் ஓய்வுகாலத்துக்குத் தேவையான நிதியை அடையமுடியும்" என்றவர் நிதி மேலாண்மையின் முக்கியத்துவம் குறித்து விளக்க ஆரம்பித்தார்.
நிதி மேலாண்மை முக்கியம் பாஸூ..!
"சம்பாதிக்க ஆரம்பித்ததில் இருந்தே நிதி மேலாண்மை என்கிற விஷயத்தில் அதிக கவனம் செலுத்த ஆரம்பிக்க வேண்டும். 'கரணம் தப்பினால் மரணம்' என்பது போல, நிதி மேலாண்மை தவறும்பட்சத்தில் நிதி முதலீடு முற்றிலும் பாதிப்புக்கு உள்ளாகும். 40 வயதில் ஒருவர் ஓய்வுகால நிதிக்கான முதலீட்டை ஆரம்பிக்கும் போது, இன்னும் இந்த விஷயத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
இதற்கான முதல் செயல், 40 வயதைத் தொட்டவர்கள், மாதத்தின் முதல் நாள் உங்களது வங்கிக் கணக்கில் சம்பளம் வரவு வைக்கப்பட்டவுடன், அதில் இருந்து ஆட்டோமேட்டிக்காக, ஓய்வுகால நிதி முதலீட்டுக்கான SIP திட்டத்தில் பணம் டெபிட் செய்யப்படுவதற்கான வசதியை ஏற்படுத்திக் கொள்வதுதான்.
Early Retirement Vs Early Investment!
இன்று நிறைய இளைஞர்களுக்கு 50 வயதில் ஓய்வு பெற வேண்டும் என்கிற கனவு இருக்கிறது. அதற்குப் பிறகான காலகட்டத்தை அவர்களுக்குப் பிடித்தமான விஷயங்களுக்காக ஒதுக்கி, ஜாலியாக, சந்தோஷமாக வாழ நினைக்கிறார்கள். இது முற்றிலும் பாராட்டத்தக்க விஷயம்தான்.
ஆனால், சீக்கிரமாக முதலீடு செய்வது மிக மிக முக்கியம். காலம் தாழ்ந்து செய்யும் முதலீடுகளின் மூலமும் பெரும் தொகையை நம்மால் சேர்க்க முடியும் என்றாலும், நிறைய தொகையை முதலீட்டுக்காக ஒதுக்க வேண்டியிருக்கும். ஆனால், குறைவான வயதில் சீக்கிரமாக ஓய்வுகால முதலீட்டை ஆரம்பிக்கும் போது குறைவான முதலீட்டுத் தொகையில் ஓய்வுகாலத்துக்குத் தேவைப்படும் பெரும் நிதியை நம்மால் அடைய முடியும்.
உதாரணத்துக்கு, பாரி தான் வேலைக்கு சேர்ந்த, தனது 21-வது வயதில் இருந்து மாதா மாதம் 2,000 ரூபாயை ஓய்வுகால நிதிக்காக ஒதுக்கி அதை 12% வருமானம் தரக்கூடிய மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டுத் திட்டத்தில் எஸ்.ஐ.பி முறையில் முதலீடு செய்து வருவதாக எடுத்துக் கொள்வோம். விருப்ப ஓய்வுகாலம் 50 வயது என வைத்துக் கொண்டால், பாரிக்கான மொத்த முதலீட்டுக் காலம் 29 ஆண்டுகள். இந்த 29 ஆண்டுகளில் அவர் முதலீட்டுக்காக ஒதுக்கிய மொத்த நிதி ரூ.6,96,000. இந்த முதலீடு 12% வருமானத்தை கொடுத்திருந்தால், கிடைக்கும் வருமானம் மட்டும் ₹47,82,941. இந்த இரண்டையும் சேர்த்தால் மொத்தம் ரூ.₹54,78,941 கிடைக்கும்.
பாரி, தனது நண்பன் காரியிடம் 31-வது வயதில் சந்தித்துப் பேசும் போது ஓய்வுகாலத்துக்காக முதலீடு செய்வது குறித்துப் பேசுகிறார் என வைத்துக் கொள்வோம். அப்போது காரியும் ஓய்வுகாலத்துக்கான முதலீட்டை ஆரம்பித்தால், 10 வருட முதலீட்டுக்கால இடைவெளியில், இப்போதிருந்து காரி மாதா மாதம் ரூ.6,800-ஐ அதே 12% வருமானம் தரக்க்கூடிய வகையிலான மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் SIP முறையில் முதலீடு செய்ய வேண்டியிருக்கும்.
காரி 10 ஆண்டுகள் காலதாமதமாக ஆரம்பித்ததால், பாரியை விட கூடுதலான மாதா மாதம் ரூ.4,800-ஐ ஒதுக்க வேண்டியிருக்கிறது. ரூ.6,90,000 முதலீட்டில் ரூ.54,78,941 ரூபாயை பாரி அடைந்ததை, ரூ.15,39,000 முதலீடு செய்து காரி அடைய வேண்டியிருக்கும். இதைப் புரிந்துகொண்டால் ஏன் ஓய்வுகால நிதியைச் சீக்கிரமாக ஆரம்பிக்கச் சொல்கிறேன் என்பது புரியும்" என்றார்.
ரூ.30 கோடி திட்டம்!
இப்போது விஷயத்துக்கு வருவோம்... "40 வயதில் இருக்கும் நபர் ஓய்வுகாலத் திட்டத்துக்கு முதலீட்டை முன்னெடுப்பதாக வைத்துக் கொள்வோம். இந்த வயதில் அவர், நிச்சயமாக மாதம் 25,000 ரூபாயை முதலீடு செய்வதற்காக ஒதுக்கக்கூடிய அளவுக்கு வருமானம் ஈட்டும் நபராக இருப்பார். இப்போதிருந்து அவருக்கு 18 ஆண்டுகள் ஓய்வுகாலத்துக்கு இருக்கும். இந்த 18 ஆண்டுகளில் அவர் தனது ஓய்வுகால சேமிப்பைக் கவனத்துடன் முன்னெடுக்க வேண்டியது கட்டாயம்.
மாதா மாதம் ரூ.25,000-ஐ 18 வருடங்கள் தொடர்ந்து மீயூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் எஸ்.ஐ.பி முறையில் முதலீடு செய்துவர வேண்டும். அதுமட்டுமல்லாமல், ஒவ்வொரு வருடமும் கூடுதலாக முதலீட்டுத் தொகையில் 10%-ஐ சேர்த்துக் கொண்டே வரவேண்டும். இந்த முதலீட்டுக்கு 12% ஆண்டு வருமானம் கிடைத்தால், தனது 58 வயது முடியும் போது ரூ.3.40 கோடி ரூபாய் இந்த முதலீட்டின் மூலம் சேர்க்க முடியும்.
அவர் இதுவரைச் செய்த மொத்த முதலீட்டுத் தொகையின் அளவு ரூ.1.36 கோடியாக இருக்கும். லாபம் மட்டும் ரூ.2.04 கோடி. இந்தச் சமயத்தில் அவர் ஓய்வு பெற்றிருப்பார். இதற்குப் பிறகான ஆயுள்காலத்துக்குத் தேவையான மாதாந்திர செலவுத் தொகையை, இந்த முதலீட்டிலிருந்து தனது 59-வது வயதுக்குப் பிறகு எஸ்.டபிள்.பி (SWP - Systematic Withdrawal Plan) மூலம் மாதா மாதம் ரூ.2,00,000-ஐ எடுத்துக் கொள்ளலாம். இந்தப் பணத்தை வைத்து அவரது ஆயுள்கால தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ள முடியும்.
'ரூ.30 கோடிக்குத் திட்டம் சொல்றேன்னு சொன்னீங்களே ரூ.3.40 கோடியோட முடிஞ்சுடுச்சே' என உங்களுடைய மைண்ட் வாய்ஸ் எனக்கு கேட்கிறது. இதற்கு பிறகுதான் உங்களுடைய பணம் உங்களுக்கான வேலை செய்யும் என்கிற மேஜிக் நடப்பதை நீங்கள் பார்க்கப் போகிறீர்கள்" என்றவர், ரூ.30 கோடி பணம் சேரும் என்று சொன்னதற்கான திட்டத்தைப் போட்டு உடைத்தார்.
"உதாரணத்திற்கு அவர் 85 வயது வரை நலமுடன் இருப்பதாக வைத்துக் கொள்வோம். அதுவரை அவருக்குத் தேவைப்படும் தொகையை மாதா மாதம் வெளியில் எடுத்தது போக, அடுத்த 27 ஆண்டுகளில் அவருடைய முதலீடு தொகை '8th wonder of the world' என்று சொல்லப்படுகிற உலகின் எட்டாவது அதிசயமான 'Compounding Interest' என்கிற பணம் சேரும் வித்தையின் மூலம் ரூ.30 கோடியாகப் பல்கி பெருகியிருக்கும்.

அதற்கு பிறகும், அவர் நலமாக இருக்கும்பட்சத்தில் இந்தப் பணத்தை எடுத்து அவரது குடும்ப உறுப்பினர்களுக்குச் சேரும் வகையில் உயிலாக எழுதி வைக்க முடியும். அல்லது தான் வாழும் காலத்திலேயே ஆண்டு அனுபவிக்க வேண்டும் என நினைத்தாலும் மாதா மாதம் கூடுதல் தொகையை எஸ்.டபிள்யூ.பி மூலம் வெளியில் எடுத்து வாழும் காலத்தை வளமுடமும், நலமுடனும் அமைத்துக் கொள்ளலாம்" என்றார் தெளிவாக.
ஆக, நிதி ஆலோசகர் மேலே சொன்ன ஃபார்முலாவின்படி முதலீட்டை ஆரம்பித்து ஓய்வுகால வாழ்க்கையை வளமுடன் அமைத்துக் கொள்கிறோமா அல்லது ஓய்வுகால முதலீட்டை திட்டமிடாமல் பிள்ளைகளையும், பிறரையும் சார்ந்தே வாழ்க்கையை அமைத்துக் கொள்ளப் போகிறோமா என்பதை இப்போது நீங்களே யோசித்து முடிவெடுங்கள்.