"மம்மூட்டிக்கு விருது கொடுக்க அவர்களுக்கு தகுதியில்லை" - தேசிய விருதுகள் குறித்த...
BB Tamil 9 Day 28: ரகசியமாக சண்டை போட்டுக்கொள்ளும் ஜோடி; சென்ட்டியில் உருகிய விசே
“இது வரைக்கும் என்ன செஞ்சு கிழிச்சீங்க?” - வைல்ட் கார்டு என்ட்ரியில் நுழைபவர்கள், ஏற்கெனவே பிக் பாஸ் வீட்டில் இருப்பவர்களை நோக்கி வைக்கும் வழக்கமான கேள்விதான் இது. ஆனால் சில நாட்களிலேயே இவர்களும் ஜோதியில் ஐக்கியமாகி ‘மந்தை ஆடாக’ மாறுவதும் வழக்கம்தான்.
விதிவிலக்காக, வைல்ட் கார்ட் என்ட்ரியில் நுழைந்து ஆட்டத்தின் போக்கை மாற்றியவர்கள் உண்டு. ஏன், டைட்டில் அடித்தவர் கூட உண்டு.
இந்த வகையில் இந்த சீசனின் புது என்ட்ரிகள் என்ன செய்வார்கள்?
பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? - நாள் 28
மேடைக்கு வந்து நேரடியாக வீட்டிற்குள் நுழைந்த விசே “நேத்து ஒரு முக்கியமான விஷயத்தை பேச மறந்துட்டோம்” என்று சொல்ல, பிரவீனை மாட்டிக் கொடுப்பதற்காக கொலை வெறியில் இருந்த போட்டியாளர்கள் ‘கேப்டன்சி டாஸ்க்’ என்று கோரஸாக சொன்னார்கள்.

“என்னோடது ஆர்மி ஃபேமிலி. அதை முயற்சி செய்து பார்த்தேன். 65 சதவிகிதம் சக்ஸஸ்” என்று விறைப்பாக சொன்னார் பிரவீன். ஆனால் ஏறத்தாழ எல்லோருமே அதை மறுத்தார்கள். “சீரியஸ் காமெடியா இருந்தது. கை, காலை உதறி என்னெ்னனமோ ரூல்ஸ். நமக்கு சரிப்பட்டு வரலை” என்று பாரு சொல்ல “நீங்க எந்த ரூல்ஸைதான் மதிச்சிருக்கீங்க?” என்கிற கேள்வியோடு விசே விட்டு விட்டார். கம்ருதீன், திவாகரை கேள்விக்கணைகளால் திணறடிக்கும் விசே, பாருவை சரியாக விசாரிக்கவில்லை.
அடுத்து எழுந்த கம்ருதீன் “கேப்டன் சூப்பர் வீட்டுக்கு ஃபேவரா நடந்தாரு’ என்று குழப்பமான உதாரணத்தைச் சொல்ல, விசே தன்னுடைய வழக்கமான வசனத்தை எடுத்துவிட்டார். யெஸ்.. அதேதான் “உக்காருங்க கம்ருதீன்”.
ஆர்மி கேப்டனை ரவுண்டு கட்டி அடித்த போட்டியாளர்கள்
“உறுதிமொழி எடுத்த அடுத்த நிமிடமே சண்டை வந்துச்சு. இதுவா ஆர்மி கேம்ப்?” என்று கிண்டலடித்தார் வியன்னா. “அவர் நடத்திய பரேடெல்லாம் பார்த்தா கைல துப்பாக்கி கொடுப்பாருன்னு நெனச்சேன். கொடுத்திருந்தா அவரையே முட்டிக்கு கீழே சுட்டிருப்பேன்” என்று வழக்கமான பாணியில் வினோத் சொல்ல சபை கலகலத்தது.
“இவன் நமக்கு நண்பன்.. இவன் நமக்கு வேண்டாதவன்.. இந்த விளையாட்டுல்லாம் வேணாம். உங்களோட நியாயமான கோபத்தை ரசிச்சிருக்கேன்” என்று வினோத்திடம் சொல்லிய விசே “என்ன .. திவாகர்.. நேத்து பேசினதெல்லாம் புரிஞ்சுதா.. இனிமே அதையே பண்ண மாட்டீங்களே?” என்று உறுதி மொழி வாங்கி விட்டு கேப்டன் பற்றி கேட்க “பாரபட்சமா நடந்துக்கிட்டாரு” என்று சொல்லி விட்டு சம்பந்தமில்லாமல் வியன்னாவை பிரவீன் முறைத்த கதையை இங்கு கோர்த்து விட்டார். “அதை வியன்னால்ல சொல்லியிருக்கணும்?” என்று விசே கேட்டது சரியான பாயின்ட்.

“பர்சனல் விஷயத்தை சொன்னதா என் மேல அபாண்டமா பழி போடறாரு” என்று பிரவீன் குறித்து திவாகர் சொல்ல “அது என்னோட தவறான புரிதல்” என்று பிரவீன் வாக்குமூலம் வழங்க “இதுக்கு நீங்க அப்பவே மன்னிப்பு கேட்டிருக்கலாமே?” என்றார் விசே. “நீங்க ஆர்மி கேம்ப்ன்னு ஆரம்பிச்சவுடனே பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. ஆனா அரோரா சொன்ன மாதிரி அது பிளே ஸ்கூல் மாதிரி ஆயிடுச்சு. வருங்கால கேப்டன்கள் இதைப் பத்தி அனலைஸ் பண்ணுங்க” என்று பிரேக்கில் சென்றார். “உங்களுக்கு ஒரு சர்ப்ரைஸ் இருக்கு” என்கிற பின்குறிப்புடன்.
வீட்டில் உள்ளவர்கள் பெரும்பாலும் தன்னைக் குத்தியதால் கோபமடைந்த பிரவீன் “அடுத்த முறை டாஸ்க்ல ஜெயிச்சு.. கேப்டனாகி.. ஆர்மி கேம்ப்னா என்னன்னு காட்டறேன்” என்று கண்ணாடி முன் சபதம் எடுத்துக் கொண்டார். விசேவிடம் தொடர்ந்து சான்றிதழ் வாங்குவதால் வியன்னா மீது பாருவிற்கு வயிற்றெரிச்சல் ஏற்பட்டிருக்கிறதுபோல. “எப்படி சரியா அடிக்கறா பாரு” என்று கம்முவிடம் புறணி பேசினார். “நாம இனி இந்த வீட்ல பேச வேண்டாம். விலகியே நிற்போம்” என்று துஷாரும் அரோராவும் ஒப்பந்தம் போட்டுக் கொண்டார்கள். (பின்னணியில் சோக வாத்தியங்கள் ஒலிக்கின்றன!)
வைல்ட் கார்ட் என்ட்ரி - வீட்டை பினாயில் ஊத்தி கழுவணும் - சாண்ட்ரா அதிரடி
வைல்ட் கார்ட் என்ட்ரியில் முதல் நபர். தன்னம்பிக்கையுடன் மேடையில் ஏறினார் பிரஜின். விசேவுடன் சீரியலில் இணைந்து நடித்தவர். எனவே ‘எப்படி இருக்க மச்சி?” என்று விசே கேட்க “நல்லாயிருக்கேன் மச்சான்” என்று இவர் பதிலளிக்க ஒரே நட்பு மழைதான். “வெளில நான் ஸ்ட்டிரிக்ட்டா இருப்பேன்” என்று பாதுகாப்பாக சொல்லிக்கொண்டார் விசே.
தன்னுடைய சீரியல் வெற்றி, திரைப்பட தோல்விகள் குறித்து பேசிய பிரஜின், “இந்த மேடையை சரியாகப் பயன்படுத்துவேன்” என்று உறுதிமொழி ஏற்றார். (முன்னாடி போனவங்களும் இதையேதான் சொன்னாங்க!). அடுத்து நுழைந்தவர் பிரஜினின் மனைவி சாண்ட்ரா. ‘பிக் பாஸ் தமிழ் சீசனில் நுழையும் முதல் ஜோடி” என்றார் விசே. (அப்ப தாடி பாலாஜி?!) “எல்லோரையும் தரதரன்னு இழுத்து வெளியே போட்டு வீட்டை பினாயில் ஊத்தி வாஷ் பண்ணணும்” என்றார் சாண்ட்ரா அதிரடியாக.
உள்ளே நுழைந்த சாண்ட்ரா, “எப்படி இருக்கு இந்த ஷோ?” என்று போட்டியாளர்கள் கேட்டதற்கு “செம கேவலமா இருக்கு. கன்னெட்ன்ற பெயர்ல கண்றாவியா பண்றீங்க” என்று சொல்லி அனைவரையும் வாயடைத்தார்.

பிறகு அனைவரையும் கார்டன் ஏரியாவிற்கு வரவழைத்து “எதுக்கு இந்த பிக் பாஸ் ஷோவிற்கு வந்தீங்க?” என்று பேப்பரில் எழுத வைத்து, பதில் தவறாக இருந்தால் அந்தப் பேப்பரை கிழித்து எறிந்தார்கள்.
“நான் யார்ன்னு காட்ட வந்தேன். ரியலா இருக்கேன்” என்று பாரு சொல்ல, அவருடைய ஆன்ஸர் பேப்பர் உடனடியாக கிழிக்கப்பட அதிர்ச்சியடைந்தார் பாரு. அரோராவிற்கும் இதே நிலைமைதான். ஒழுங்காகவும் நேர்மையாகவும் பதில் சொன்னவர்களின் பேப்பர்கள் தப்பின. “டைட்டில் வின் பண்ண வந்திருக்கேன்” என்றார் சுபிக்ஷா.
திருமண வீட்டின் சந்தடிகளுக்கு இடையே ரகசியமாக சண்டை போட்டுக்கொள்ளும் ஜோடி மாதிரி பாருவும் கம்ருதீனும் சண்டை போட்டுக்கொண்டார்கள். தன்னையும் கம்முவையும் இணைத்து வில்லங்கமாக ஏதாவது வெளியே தெரிகிறதா என்பது பாருவின் கவலையும் கோபமும் போலிருக்கிறது. “நான் ஒதுங்கிட்டேனே” என்று கம்ருவும் ஆத்திரத்துடன் சண்டையிட்டார்.
“எனக்காக பேசிய ஒரே ஜீவன் திவ்யாதான்’ - சென்ட்டியில் உருகிய விசே
அடுத்த வைல்ட் கார்ட் என்ட்ரி, திவ்யா. சீரியல் நடிகை. “இந்த ஆட்டத்தை மாத்துவேன். சபை நாகரிகம், ஒழுங்குல்லாம் இல்லவே இல்லை. உங்க முன்னாடியே சண்டை போடறாங்க. என்ன நியாயம் இது?” என்று திவ்யா பொங்க “அடடா.. பிக் பாஸ் டீம் கூட எனக்காக பேசலை. எனக்காக பேசுகிற ஒரே ஜீவன் நீங்கதான்” என்று பாசத்தில் பொங்கினார் விசே. “அடுத்த வீக்கெண்ட் நான் லீவ் எடுத்துக்கறேன், நீங்க பார்த்துக்கங்க” என்கிற நக்கல் வேறு.

இந்தி சீரியல் நடிகர் மாதிரி பளபளப்பாக வந்த அடுத்த வைல்ட் கார்ட் என்ட்ரி அமித் பார்கவ். “என்னா ஹைட்டு சார்?!” என்று வியந்தார் விசே. இவருக்கும் இவரது மகளுக்குமான இன்ட்ராக்ஷன் க்யூட். “பிக் பாஸ் மேடையை சூப்பர் சிங்கர் மேடையா மாத்திட்டீங்க” என்று கிண்டலடித்தார் விசே. “சொல்ல மாட்டேன், செஞ்சு காட்டுவேன்” என்கிற சபதத்துடன் உள்ளே சென்றார் அமித்.
வைல்ட் கார்ட் என்ட்ரிகள் உள்ளே வந்தாலும், இனனொரு புறம் கம்ருதீனுடன் ஆக்ரோஷமாக சண்டை போட்டுக் கொண்டிருந்தார் பாரு. “இந்த சனியனுங்க தொல்லை வேற” என்கிற மாதிரி வைல்ட் கார்ட் என்ட்ரிகள் குறித்து எரிச்சலடைந்தார்.
கனி அரசியல்வாதி - ஆரம்பத்திலேயே ரணகளம் செய்த அமித்
உள்ளே வந்த அமித், கனியை டார்கெட் செய்து “நீங்க அரசியல்வாதி மாதிரி. உங்க ஃபாலோயர்ஸ் மூலமா பலன் அடைஞ்சிருக்கீங்க. ஆனா அவங்களுக்கு ஒண்ணுமே செய்யலை” என்று ஆரம்பித்து “வினோத்.. உங்க திறமையை நீங்க காட்டுங்க.. அடுத்தவங்க திறமையை ஏன் கிண்டலடிக்கறீங்க?” என்று தொடர ‘அப்படிச் சொல்லுங்க பாஸ்’ என்கிற மோடிற்கு சென்றார் திவாகர்.
ஆனால் அடுத்து அமித் வண்டியைத் திருப்பியது, திவாகரிடம்தான். ‘பம்ப்கின் ஸ்டார்’ என்று வேண்டுமென்றே இடக்காக ஆரம்பித்து ‘ஸாரி.. பூசணிக்கும் தர்பூசணிக்கும் வித்தியாசம் தெரியல. மத்தவங்க அடையாளத்தை கொச்சைப்படுத்தற மாதிரி பேசாதீங்க” என்று அட்வைஸ் செய்து “மத்தவங்களுக்காக சண்டை போட்டாதான் ஹீரோ. தனக்காகவே சண்டை போட்டா ஜீரோ” என்று பாரு பக்கம் பாய ‘எல்லாம் என் நேரம்டா’ என்கிற மாதிரியே உட்கார்ந்திருந்தார் பாரு.

“வியன்னா.. நீங்க ரொம்ப பலவீனமா இருக்கீங்க.. முறைச்சுப் பார்த்தாலே அழுதுடறீங்க” என்று அமித் சொல்ல “ஹலோ.. என்னை கார்னர் பண்றப்பதான் அழுதேன்.. மத்தபடி நான் அழலை” என்று வாக்குவாதம் செய்தார் வியன்னா. “நீங்க ஷோவை சரியா பார்த்துட்டு வந்திருக்கணும்” என்கிற நக்கல் வேறு.
அடுத்த வந்த திவ்யா “இந்த வீட்ல decorum இல்ல. பாருங்க. நான் பேசற போது கூட குறுக்க குறுக்க பேசறீங்க” என்று எட்டாம் வகுப்பு ஆசிரியை மாதிரி கோபித்துக்கொண்டார். இவருக்கும் திவாகருக்கும் ஆரம்பத்திலேயே முட்டிக் கொண்டது. “உள்ளே காடு பத்திக்கிட்டு எரியுது. எப்படி போகுதுன்னு பார்ப்போம்” என்ற விசே விடைபெற்றுக் கொண்டு சென்றார்.
‘உபயோகமே இல்லாதவர்களில் விக்ரம், திவாகர் எப்படி?’
“எதுக்குமே உபயோகம் இல்லாத இரண்டு பேரைத் தேர்ந்தெடுக்கணும்” என்பது அமித் - திவ்யாவிற்கு தரப்பட்ட டாஸ்க். அதன்படி அவர்கள் திவாகர், சுபிக்ஷா, விக்ரம் மற்றும் அரேராவை தேர்ந்தெடுத்தார்கள். (துஷாரை எப்படி விட்டார்கள்). அடுத்த அறிவிப்பு வரும் வரை இவர்கள் கார்டன் ஏரியாவில்தான் தூங்கணுமாம்.

தங்களைக் காட்டமாக விமர்சித்த வைல்ட் கார்ட் என்ட்ரிகளை கிண்டலடித்து வினோத் பாட்டுப் பாட “வெல்கம் பண்ணிதானே பாட்டுப் பாடறதா சொன்னீங்க?” என்று திவ்யா கோபித்துக் கொண்டதோடு எபிசோட் நிறைவு. (எனில் நாளை சம்பவம் இருக்கு!).
தன்னை வெறுப்பேற்றிய வைல்ட் கார்ட் என்ட்ரிகளை, பதிலுக்கு பாரு பழிவாங்கும் காட்சி இன்றைய பிரமோவில் வெளியாகியிருக்கிறது. ‘ஒட்ட வந்த பிடாரி, ஊர்ப்பிடாரியை துரத்திச்சாம்’ கதையாக என்ன நடக்கிறதென்று பார்ப்போம்.


















