பாண்டியன் ஸ்டோர்ஸ்: "அந்த இரண்டு திறமையும் இருக்க நிரோஷா ஸ்பெஷலான பொண்ணு" - பூர்...
Bhgayashri Borse: 'டைரி மில்க் விளம்பரம் டு டோலிவுட்'; புதிய சென்சேஷன் 'காந்தா' பாக்யஶ்ரீ போர்ஸ்
துல்கர் சல்மானின் 'காந்தா' திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது. துல்கர் சல்மான், சமுத்திரகனி, ரானா, பாக்யஶ்ரீ போர்ஸ், பிஜேஷ், ரவீந்திர விஜய் எனப் படத்தில் நடித்த அனைவரும் தங்களின் அசாத்திய நடிப்பிற்காக பெரும் பாராட்டுகளை அள்ளி வருகின்றனர்.
முக்கியமாக, 1950-களின் சினிமாவைப் பற்றிய இந்த சினிமாவுக்குத் தேவைப்படும் மிகை நடிப்பையும் துல்கர் சல்மான், பாக்யஶ்ரீ போர்ஸ் கச்சிதமாக வெளிப்படுத்தி அசத்தியிருக்கிறார்கள்.
தற்போதைய தென்னிந்திய சினிமாவில், இளம் நடிகைகள் பலர்தான் டாப் இடத்தில் மிளிர்ந்து வருகிறார்கள்.

எப்போதும், தென்னிந்திய சினிமாவுக்கு டோலிவுட்தான் பல கதாநாயகிகளையும் அறிமுகப்படுத்தும். அப்படி பாக்யஶ்ரீயையும் கதாநாயகியாக அறிமுகப்படுத்தியதும் டோலிவுட்தான்.
டோலிவுட்டில் பிரேக் கிடைத்த பல நடிகைகளும் அடுத்தடுத்து தமிழ், மலையாளம், இந்தி என ரவுண்ட் வருவார்கள். அப்படி டோலிவுட்டில் அறிமுகமான பாக்யஶ்ரீ போர்ஸ் தற்போது புதிய சென்சேஷனாக உருவெடுத்து நிற்கிறார்.
'காந்தா'தான் பாக்யஶ்ரீயின் முதல் தமிழ்த் திரைப்படம். துல்கர் சல்மான், சமுத்திரகனி, ராணா ஆகியோர் நடிக்கும் படம், நம்முடைய முதல் தமிழ் திரைப்படம் என கவனமாக குமாரி கதாபாத்திரத்திற்கு உடல்மொழி, பாவனை என அத்தனை விஷயங்களிலும் முழுமையாகத் தயாராகி நடிப்பில் தன்னை நிரூபித்திருக்கிறார் பாக்யஶ்ரீ.
அதுவும், குமாரியாக, கோபம், வஞ்சகம், அப்பாவித்தனம், சோகம், பயம் என அத்தனையையும் ஒரே நேரத்தில் அடுத்தடுத்து தனது முகபாவனைகளில் வெளிப்படுத்தும் காட்சிகளில் கைதட்டல்களை அள்ளுகிறார்.
அந்தக் காட்சியைப் படம்பிடித்து ரசிகர்கள் பலரும், சமூக வலைதளப் பக்கங்களில் பதிவிட்டு அதை பெரும் வைரலாக்கி வருகின்றனர்.

'காந்தா' படத்திற்கு நடிகர்கள் தேர்விலும் மிகவும் கவனமாக படக்குழுவினர் செயல்பட்டிருக்கிறார்கள். முன்னணி கதாபாத்திரங்களைத் தாண்டி அனைத்து கேரக்டர்களையும் ஆடிஷன் செய்துதான் தேர்வு செய்திருக்கிறார்கள்.
'காந்தா' படத்திற்குள் தான் வந்தது குறித்து பாக்யஶ்ரீ, " முதலில் என் மீது ராணாவுக்கு நம்பிக்கை இல்லை. சென்னைக்கு நான் லுக் டெஸ்ட்டுக்காக வந்தபோது எப்படி நடிப்பேன் என அவருக்கு சந்தேகம் இருந்தது. பிறகு இயக்குநர் செல்வா சொன்ன விஷயங்களைக் கேட்டேன். உடை, ஒப்பனையில் குமாரியாக மாறி நின்ற பிறகுதான் என் மீது அனைவரும் நம்பிக்கை வந்தது." என புரொமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் தான் படத்திற்குள் வந்த கதையை விவரித்திருந்தார்.
மகராஷ்டிராவில் பிறந்து வளர்ந்த பாக்யஶ்ரீ பிசினஸ் மேனேஜ்மென்ட் படிப்பை முடித்திருக்கிறார். 'நடிப்பின் பக்கம் வருவோம், நம்முடைய கரியர் சினிமாதான்' என பாக்யஶ்ரீ ஒருபோது நினைத்தது கிடையாதாம்.
மும்பையில் கல்லூரிப் படிப்பை படித்துக் கொண்டிருக்கும்போது மாடலிங் துறையின் மீது பாக்யஶ்ரீ-க்கு ஆசை வந்திருக்கிறது. அங்கிருந்து அடுத்தடுத்து அவருக்கு வாய்ப்புகள் வரத் தொடங்கியிருக்கின்றன.
மாடலிங் துறையிலிருந்தவர் அடுத்தடுத்து பல விளம்பரப் படங்களிலும் நடித்திருக்கிறார். அதில், டைரி மில்க் சாக்லேட்டிற்காக அவர் நடித்த விளம்பரப்படம் பெரும் வைரல் என்றே சொல்லலாம்.
அங்கிருந்துதான் பாக்யஶ்ரீயின் ஆக்டிங் கரியர் தொடங்கியிருக்கிறது. அந்த விளம்பரம் பெரிதளவில் வைரலாகிட பலரும் அவருடைய நண்பர்கள் பலரும் பாக்யஶ்ரீயை சினிமாவில் நடிக்கச் சொல்லியிருக்கிறார்கள்.

பாக்யஶ்ரீ-க்கு நடிப்பின் மீது ஆசைகள் இருந்தாலும் அவருடைய பெற்றோர்கள் முதலில் இதற்கு சம்மதிக்கவில்லை.
பல முயற்சிகளுக்குப் பிறகு பெற்றோரிடம் அனுமதி பெற்று நடிக்க வந்திருக்கிறார். ஆனால், பெரும் ஆசைகளோடு வந்தவருக்கு முதலில் கேமியோ வாய்ப்புகளே கிடைத்திருக்கின்றன.
'யாரியன் 2', 'சந்து சாம்பியன்' என இரண்டு பாலிவுட் படங்களில் முதலில் சின்ன சின்ன வேடங்களிலேயே நடித்து வந்திருக்கிறார்.
தொடர்ந்து ஆடிஷன்களில் கலந்து கொண்டிருந்தவருக்கு சன்னி தியோலுடன் 'கதர் 2' படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு வந்திருக்கிறது.
ஆடிஷன் செய்து பெரும் ஆசைகளோடு காத்திருந்திருக்கிறார் பாக்யஶ்ரீ. ஆனால், அந்த வாய்ப்பும் இறுதியில் அவருக்குக் கைகூடி வரவில்லை.
இந்த செயல் ஏமாற்றமளித்தாலும், இதுபோன்ற சவால்களை பாக்யஶ்ரீ லைக் செய்வாராம்! பிறகு, ரவி தேஜாவின் 'மிஸ்டர் பச்சன்' படத்திற்காகவும் அவர் ஆடிஷன் செய்திருக்கிறார்.
முதல் வாய்ப்பு கைகளில் இருந்து நழுவினாலும் இரண்டாவது வாய்ப்பு பாக்யஶ்ரீ நினைத்ததுபோல க்ளிக் ஆனது. அந்தப் படத்தில் பாக்யஶ்ரீ ஆடிய நடனம், புரொமோஷன் நிகழ்வில் அவர் ஆடிய நடனம் என ரிலீஸுக்கு முன்பே ரீல்ஸ்களில் பெரும் வைரலாகி 'யார் இந்த பாக்யஶ்ரீ ?' எனப் பலரையும் கூகுள் சர்ச் பண்ணச் செய்தார்.

அங்கிருந்து விஜய் தேவரகொண்டாவுடன் 'கிங்டம்' பட வாய்ப்பு அவருக்கு வந்திருக்கிறது. இப்படத்தின் ரிலீஸுக்கு முன்பே தமிழ் அறிமுகத்திற்கு கமிட்டாகிவிட்டார் பாக்யஶ்ரீ.
அடுத்து ராம் பொத்தினேனியுடன் ஒரு படத்திலும் கதாநாயகியாக பாக்யஶ்ரீ நடித்து வருகிறார். 'காந்தா' ரிலீஸுக்குப் பிறகு நிச்சயமாக தமிழ் சினிமாவிலும் பாக்யஶ்ரீ ரவுண்ட் அடிப்பார் என ரசிகர்களும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.
வெல்கம் பாக்யஶ்ரீ!


















