திருப்பரங்குன்றம் விவகாரம்: ``இன்னொரு இடத்தில் தீபம் எதற்கு?'' - அமைச்சர் சேகர் ...
Doctor Vikatan: அனீமியா, பிறப்புறுப்புக் கசிவு, மெனோபாஸுக்கு பிறகும் தொடருமா?
Doctor Vikatan: என் வயது 47. எனக்குக் கடந்த சில வருடங்களாக தீவிர அனீமியா (ரத்தச்சோகை) பிரச்னை இருக்கிறது. மருந்துகள் எடுத்துக்கொண்டிருக்கிறேன். பீரியட்ஸின்போது ப்ளீடிங் அதிகமிருப்பதுதான் காரணம் என்றும், பீரியட்ஸ் நின்றுவிட்டால், அதாவது மெனோபாஸுக்கு பிறகு இது சரியாகிவிடும் என்றும் சொல்கிறார்கள். அது எந்த அளவுக்கு உண்மை? அதேபோல, அவ்வப்போது படுத்தும் பிறப்புறுப்புக் கசிவும், மெனோபாஸ் வந்துவிட்டால் சரியாகிவிடுமா?
பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவர் நித்யா ராமச்சந்திரன்.

பீரியட்ஸ் வந்துகொண்டிருக்கும்வரை, அளவுக்கதிக ப்ளீடிங் பிரச்னை உள்ளவர்களுக்கு அனீமியா எனப்படும் ரத்தச்சோகை பாதிப்பு வரலாம். அதிக ப்ளீடிங்கிற்கான காரணத்தைச் சரிசெய்யாதவரை அனீமியாவும் சரியாகாது.
மெனோபாஸுக்கு பிறகு அனீமியா தொடர்ந்தால், பீரியட்ஸின் மூலம் ப்ளீடிங் இல்லாத காரணத்தால், வேறு எங்கே ரத்த இழப்பு ஏற்படுகிறது என்பதைக் கண்டுபிடிக்க வேண்டும்.
நம் உடலில் இரும்புச்சத்தானது ஃபெரிட்டின் (Ferritin) என்ற பெயரில் சேமித்து வைக்கப்படும். இப்படி சேமித்து வைக்கப்பட்ட இரும்பானது முழுவதும் காலியான பிறகுதான் 'அயர்ன் டெஃபிஷியன்சி அனீமியா' (Iron deficiency anemia ) என்ற ரத்தச்சோகை நிலை வரும். இதை சப்ளிமென்ட்டுகள் கொடுத்துதான் சரிசெய்ய வேண்டியிருக்கும்.
அடுத்து ஊட்டச்சத்துகள் உறிஞ்சப்படாத (Malabsorption) நிலையால் ஏற்படும் அனீமியா. வயிற்றிலோ, குடல் பகுதியிலோ ஏதோ பிரச்னை காரணமாக, இரும்புச்சத்தானது சரியாக கிரகிக்கப்படாத நிலையே இது. அதைக் கண்டுபிடித்து சரி செய்தால்தான் இந்த வகை அனீமியா சரியாகும்.
எனவே, மெனோபாஸுக்கு பிறகு அனீமியா பாதிப்பு இருந்தால், அதற்கான காரணத்தைக் கண்டுபிடித்து குணப்படுத்த வேண்டியது மிக அவசியம்.

பெரிமெனோபாஸிலும் சரி மெனோபாஸிலும் சரி, பிறப்புறுப்பில் திரவக்கசிவு இருக்கும். 'வெஜைனல் எட்ரோஃபி' (Vaginal atrophy) என்ற பிரச்னையாலும் இப்படி இருக்கலாம்.
ஈஸ்ட்ரோஜென் சுரப்பு குறைவதால் வெஜைனா பகுதியில் வறட்சி அதிகமாகும். அந்த நிலையில் தாம்பத்திய உறவில் ஈடுபட்டால் வெஜைனாவிலிருந்து கசிவு ஏற்படலாம்.
அந்தக் கசிவானது நீர்த்து, மஞ்சள் அல்லது சாம்பல் நிறத்தில் வெளிப்பட்டால் வெஜைனா பகுதி ஆல்கலைனாக மாறிவிட்டதாக அர்த்தம். அதன் விளைவாக அங்கே பாக்டீரியா கிருமிகள் வளர்வது அதிகரிக்கும்.
அது வெஜைனா பகுதியில் இன்ஃபெக்ஷன் ஏற்படவும் காரணமாகும். அதற்கு சிகிச்சை அவசியம். தாம்பத்திய உறவு வைத்துக்கொண்டதன் விளைவாக ஏற்பட்ட கசிவு என்று தெரிந்தால் வெஜைனல் லூப்ரிகன்ட் அல்லது வெஜைனல் மாய்ஸ்ச்சரைசர் உபயோகிக்கலாம்.
மருத்துவரின் ஆலோசனையோடு ஹார்மோன் க்ரீம், ஹார்மோன் தெரபி போன்றவற்றையும் எடுத்துக்கொள்ளலாம்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.















