SIR: "ஒன்றுமே புரியவில்லை, நாங்கள் மட சாம்பிராணியாக இருக்கிறோம்" - செல்லூர் ராஜூ...
SIR: "ஒன்றுமே புரியவில்லை, நாங்கள் மட சாம்பிராணியாக இருக்கிறோம்" - செல்லூர் ராஜூ ஆதங்கம்
SIR பணியில் நடைபெறும் குழப்பங்கள் குறித்து மதுரை மாவட்ட ஆட்சியர் பிரவீன்குமாரிடம் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ மனு அளித்தார். பின்பு செய்தியாளர்களிடம் பேசியவர், "SIR கணக்கெடுப்பில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் முழுமையாகச் செயல்படவில்லை, ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் கணக்கெடுப்பில் ஈடுபடுத்தப்பட்டு வருகிறார்கள், சத்துணவுப் பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள் கணக்கெடுப்பில் ஈடுபடுத்தப்பட்டு வருகிறார்கள்.
மதுரையில் பல பகுதிகளில் SIR கணக்கெடுப்பு படிவம் வழங்கப்படவில்லை, வாக்காளரிடம் வழங்கப்பட்ட SIR படிவங்கள் பல இடங்களில் திரும்பப் பெறவில்லை, மதுரை மேற்கு சட்டமன்றத் தொகுதியில் 284 வாக்குச்சாவடிகளிலும் SIR படிவங்கள் வழங்கப்பட்டுள்ளதாக அப்லோட் செய்துள்ளனர். இதில் எவ்வளவு படிவங்கள் திரும்ப பெற்றுக்கொள்ளப்பட்டது என்பதைத் தெரிவிக்கவில்லை.
பல வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு SIR ஆப் செயல்படுத்த தெரியவில்லை. சிலருக்கு நெட் வசதி இல்லை, பலருக்கு ஆப் பயன்படுத்தும் வகையில மொபைல்போன்கள் இல்லை. கட்சி முகவர்கள்தான் அவர்களுக்கு உதவி செய்கிறார்கள். இறந்து போனவர்களையும், இரண்டு வாக்கு உள்ளவர்களையும் நீக்க வேண்டும் என்பதுதான் வாக்காளர் திருத்தப் பட்டியலின் நோக்கம். கணக்கெடுக்கும் பணி இப்படி நடந்தால் அந்த நோக்கமே நிறைவேறாது.

மதுரை மாவட்டத்தில் நடைபெற்று வரும் SIR பணிகள் குறித்து எங்களுக்கு ஒன்றுமே புரியவில்லை, நாங்கள் மட சாம்பிராணியாக இருக்கிறோம், ஒரு சில வாக்குகளை மட்டும் எடுத்துவிட்டு அத்தனை வாக்குகளையும் வாக்காளர் பட்டியலில் பதிவேற்றம் செய்வதற்காக மாவட்ட நிர்வாகம் செயல்படுகிறதோ என்கிற அச்சம் வருகிறது. மதுரை மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்றத் தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் என அமைச்சர் மூர்த்தி கூறி வருகிறார்.
போலி வாக்காளர்களை வைத்து திமுக வெற்றி பெறத் திட்டமிட்டுள்ளது, SIR கணக்கெடுப்பில் மாவட்ட நிர்வாகம் குழப்பங்களை ஏற்படுத்திவருகிறது, தேர்தல் ஆணையத்தின் நோக்கத்தை சிதைக்கும் வண்ணம் ஆளும் கட்சி மோசடியில் ஈடுபட்டு வருகிறது" என்றார்.














