ரஜினிகாந்த்: நடிப்பு கற்றுக்கொடுத்த ஆசிரியர் மறைவு; நேரில் சென்ற சூப்பர் ஸ்டார் ...
SIR: `தவெக எதிர்க்கிறதே தவிர, திமுகவைப் போல் தோல்வி பயத்தில் வேண்டாமெனவில்லை!' - ஜி.கே.வாசன்
சேலம் நெடுஞ்சாலை நகர் இல்லத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் நேரில் சந்தித்து, ஆலோசனை மேற்கொண்டார். இந்த சந்திப்பிற்குப் பிறகு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசியவர், ``'மத்தியில் என்.டி.ஏ கூட்டணி, தமிழகத்தில் அதிமுக தலைமையிலான என்.டி.ஏ கூட்டணி. தமிழகத்தின் கூட்டணி தலைவரான எடப்பாடி பழனிசாமியை, சேலத்திற்கு வந்ததால் மரியாதை நிமித்தமான சந்திப்பு மட்டுமல்லாமல், கூட்டணி கட்சித் தலைவர் என்ற முறையில் அரசியல் ரீதியான சந்திப்பு என்பதிலும் மாற்று கருத்து இல்லை. தமிழகத்தில் 173 சட்டமன்றத் தொகுதிகளுக்கு சென்று, மக்களின் எண்ணங்களை மிக தெளிவாக பிரதிபலித்து வந்து கொண்டிருக்கிறார்கள். திமுக-விற்கு தமிழகத்தில் எதிர்மறை வாக்குகள் அதிகரித்து சென்று கொண்டிருக்கிறது என்றால், 173 தொகுதிகளில் மக்களுக்கு கொடுத்த விழிப்புணர்வு தான் காரணம் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். மண்டல ரீதியாக நான் பணி மேற்கொண்டு இருக்கிறேன். இயக்கப் பணி, மக்கள் பணி, கூட்டணி பணி என உறுதியாக இந்த தேர்தலில் வெல்லக்கூடிய சூழ்நிலையை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறோம். அதன் அடிப்படையில் கூட்டணி கட்சித் தலைவர் என்ற அடிப்படையில் சேலம் வந்ததால் நேரடியாக அவரை சந்தித்து அரசியல் பேசினேன் என்று கூறலாம். தேர்தல் காலம் என்பதால் தேர்தல் வரப்போகிறது, இன்னும் பல கட்சிகள் எங்களுடன் கூட்டணி சேர பிரகாசமாக இருக்கும் நிலையில், அரசியல் பேசாமல் இருக்க முடியாது. எங்களது கூட்டணியை பொறுத்தவரை வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. தமிழகத்தில் அதிமுக முதல் பெரிய கட்சி, மத்தியில் பெரிய கட்சி பாஜக. இரண்டு கட்சிகள் மீதும் தமிழக மக்கள் நம்பிக்கை வைத்துள்ளார்கள். மத்திய அரசு உடன் இணக்கமான சூழலில், அதிமுக-விற்கு இருக்கும்போது, ஒற்றைக் கருத்து உடைய கட்சிகள், மத்திய, மாநில அரசுடன் இணக்கமான கட்சிகள், வெற்றி பெறுவதற்கான சூழல் மேலும் மேலும் பீகார் தேர்தலுக்குப் பிறகு பிரகாசமாக அமைந்துள்ளது.
பீகார் தேர்தலுக்குப் பிறகு எடுத்துக்காட்டான தேர்தலாக சாதி, மதம், மொழி, இனம், இதற்கு எல்லாம் அப்பாற்பட்டு, வளர்ச்சி என்றும், மத்திய, மாநில அரசுடன் இணக்கம் என்ற ரீதியில் பிரதமர் மோடி, அதிமுக தலைவர் எடப்பாடி பழனிசாமி என்ற அடிப்படையில் மக்கள் எங்களுக்கு வாக்களிப்பார்கள் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. இன்னும் பல கட்சிகள் எங்களுடன் கூட்டணி சேருவதற்கு காலம், நேரம் இருக்கிறது பொறுத்திருந்து பாருங்கள்.

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை தமிழகத்தின் பெரிய கட்சி அதிமுக. அந்த கட்சியுடன் கூட்டணியில் உள்ளோம். வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. அதனால் இந்த நிலையை தொடர்ந்து கொண்டிருக்கிறோம். எது தேவையோ அதை மட்டுமே தமிழ் மாநில காங்கிரஸ் வலியுறுத்தும். கூட்டணிக்கு வருகின்ற கட்சியெல்லாம் தொடர்ந்து அதிமுக-வின் செயல்பாடு, எடப்பாடி பழனிசாமி அவர்களின் சுற்றுப்பயணம், மத்திய அரசுகளின் திட்டங்கள், மத்திய அரசுடன் இணக்கம் உள்ளிட்டவைகளை கூர்ந்து கவனித்துக் கொண்டிருக்கிறார்கள். சரியான நேரத்தில், சரியான முடிவை, எந்தக் கூட்டணியிலும் இல்லாத கட்சிகள் முடிவு எடுப்பார்கள் என்று நம்புகிறோம். ஒற்றைக் கருத்து உள்ளவர்கள் எல்லாம் தேசிய ஜனநாயக கூட்டணி, பாஜக, அதிமுகவுடன் ஒன்று சேர்ந்து, ஆட்சியாளர்களை மாற்றவேண்டும் என்று நினைத்தால், பீகாரை விட அதிக இடங்களில் வெற்றிபெற வாய்ப்புள்ளது.
தேர்தல் முறையாக நடத்த வேண்டும் என்றால், தேர்தல் ஆணையத்தின் கோட்பாடுகள் மிக முக்கியமானது. நியாயமாக தேர்தல் நடந்தால் மட்டுமே வாக்குரிமையை முழுமையாக பயன்படுத்த முடியும் என்று மக்கள் நினைக்கிறார்கள். இதற்கு தடையாக திமுக இருந்தால், தோல்வி பயம் என்று தான் கூற வேண்டும். சட்டம் ஒழுங்கு தமிழகத்தில் சீர்குலைந்து உள்ளது என்பதற்கு ஊடகங்களில் வரும் செய்திகள் தான் எடுத்துக்காட்டு. திருட்டு, கொள்ளை போதை பொருள், மதுபானம் இவை தான் குற்றங்களுக்கு காரணம். இவை அடிப்படையில் குற்றங்கள் பெருகி வருகிறது. இதை கட்டுப்படுத்த இயலாத அரசாக தமிழக அரசு செயல்பட்டு வருகிறது. திமுக ஆட்சி முடிவுக்கு வரவேண்டும் என்றால் பெண்கள், மாணவிகள் ஆகியோரால் முடிவுக்கு வரும். எஸ்.ஐ.ஆரை எதிர்க்கிறார்கள் என்றால், சில மாற்றங்கள் இருந்தால் நன்றாக இருக்கும் என்றுதான், தமிழக வெற்றிக் கழகம் எதிர்க்கிறார்களே தவிர, திமுகவைப் போல தோல்வி பயத்தில் எஸ்.ஐ.ஆரை வேண்டாம் என்று கூறவில்லை" என்றார்.














