`தமிழ் பிச்சை எடுக்கக்கூட உதவாதாம்; உண்மைதான், ஏனெனில்...' - நாடாளுமன்றத்தில் கம...
Tamilnadu State Awards: திருத்தப்பட்ட விருது பட்டியல் - 'சுந்தரி' சீரியலுக்கான அந்த விருது யாருக்கு?
2014 முதல் 2022ம் ஆண்டு வரைக்கான தமிழ்நாடு அரசின் சின்னத்திரை விருதுகள் கடந்த வாரம் அறிவிக்கப்பட்டன. வரும் 13ம் தேதி சென்னையில் இந்த விருதுகளை வழங்கவிருக்கிறார் துணை முதல்வர் உதயநிதி
முன்னதாக ஒன்பது ஆண்டுகளுக்கும் மொத்தமாகச் சேர்ந்து அதுவும் தேர்தலை கருத்தில் கொண்டு அவசர கோலத்தில் வழங்கப்பட்ட விருதுகளில் பல குழப்பங்கள், சர்ச்சைகள் இருப்பதாக பலரும் விமர்சித்திருந்தனர்.
'பூவே பூச்சூடவா' சீரியலுக்கு சிறந்த தொடருக்கான விருதும், தொடரை இயக்கிய ரத்னம் வாசுதேவனுக்கு சிறந்த இயக்குநர் விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது. பூவே பூச்சூடவே தொடர் 1149 எபிசோடுகள் ஒளிபரப்பான நிலையில், முதல் எழுநூறு எபிசோடு வரை இயக்கியது மணிகண்டன். இவருக்கு விருது அறிவிக்காமல், கடைசி 400 எபிசோடுகளை இயக்கியவருக்கு விருதை அறிவித்திருக்கிறார்கள். சாம்பிளுக்கு இந்த ஒன்று. இதேபோல் இன்னும் ஏகப்பட்ட குழப்பங்கள் நிலவுவதாக குற்றம்சாட்டுகின்றனர் துறையில் இருப்பவர்கள்.

இந்த நிலையில் ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட விருது பட்டியலில் தற்போது ஒரு திருத்தம் செய்யப்பட்டு விருது பெற்றதாக பட்டியலில் இடம் பிடித்திருந்த ஒருவரது பெயர் நீக்கப்பட்டு, அதற்குப் பதில் வேறொருவர் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது.
2021ம் ஆண்டுக்கான விருதுகளில் 'சுந்தரி' சீரியலுக்காக சிறந்த திரைக்கதையாசிரியர் விருது விஜயலட்சுமி என்பவருக்கு அறிவிக்கப் பட்டிருந்தது.
இந்நிலையில் தற்போது இதில் மாற்றம் செய்யப்பட்டு அந்த விருது ராதாகிருஷ்ணன் என்பவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏன் இந்தக் குழப்பம்? - ராதாகிருஷ்ணனிடமே பேசினோம்.

''கிளெரிக்கல் எரர்னு சொல்வாங்க இல்லையா, அந்த மாதிரியான ஒரு சின்னத் தவறு காரணமாக இப்படி நிகழ்ந்துடுச்சு. விஜயலட்சுமி சீரியலுக்கு வசனம் எழுதறாங்க. ஆனா விருதுக்கு விண்ணப்பிக்கிற போது அவங்களுடைய பெயர் தவறுதலா திரைக்கதை ஆசிரியர்னு குறிப்பிடப்பட்டு அனுப்பப்பட்டிருக்கு. அதிகாரிகளைப் பொறுத்தவரை விண்ணப்பத்திலிருக்கிற தகவல்களின் அடிப்படையில் பரிசீலனை செய்து அறிவிச்சதாச் சொன்னாங்க.
பட்டியல் வெளியானதும் தவறைச் சுட்டிக்காட்டினோம். முதல்ல ஏற்றுக் கொள்ள மறுத்தாங்க. ஆனா பிறகு உரிய ஆதாரங்களைச் சமர்ப்பிச்சதும் திருத்தி அரசாணை வெளியிடச் சம்மதிச்சாங்க.
அதனால இப்ப விஜயலட்சுமிக்குப் பதில் என்னுடைய பெயர் விருது பட்டியல்ல இடம் பெற்றிருக்கு. நிகழ்ந்த தவறைச் சுட்டிக்காட்டியதும் புரிஞ்சு சரி செய்த அதிகாரிகள் உள்ளிட்ட தமிழக அரசுக்கும், என் தயாரிப்பாளருக்கும், 'இந்த விருது அவங்களுக்கு அறிவிக்கப்பட்டதுமே, அது அவருக்கான விருது' என முதல் ஆளாகக் குரல் கொடுத்த விஜயலட்சுமிக்கும் சேர்த்தே என்னுடைய நன்றியை, இந்த தருணத்தில் தெரிவிச்சுக்க விரும்பறேன்" என்றார்.
சீரியல்களில் தான் 'இவருக்குப் பதில் இவர்' கார்டு வருமென நினைத்தால் சீரியல்களுக்கான விருதுகளிலுமா, என்னத்த சொல்ல?

















