DMK vs Congress: டெல்லி டு சென்னை... கே.சி வேணுகோபால் வருகையின் அஜெண்டா என்ன? | ...
UGC:`கல்விக்கூடங்களில் கண்ணுக்குத் தெரியாத சாதி' ரோஹித் வெமுலா முதல் UGC 2026 வரை| விரிவான அலசல்
ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழகத்தில் பி.ஹெச்டி படித்து வந்த ரோஹித் வெமுலா, அம்பேத்கர் மாணவர் சங்கத்திலும் (ASA) உறுப்பினராக இருந்தார். ஆகஸ்ட் 2015-ல், அம்பேத்கர் மாணவர் சங்கத்துக்கும் - அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் (ABVP) என்ற இந்துத்துவ மாணவர் அமைப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் சிலர் தாக்கப்பட்டனர்.
இந்த விவகாரத்தில் ரோஹித் வெமுலா மீது தவறு இல்லை எனக் கூறிய பல்கலைக்கழக விசாரணைக்குழு, சில முக்கியப் புள்ளிகளின் தலையீட்டால் ரோஹித் வெமுலா உட்பட 5 பட்டியலின மாணவர்கள் மீது நடவடிக்கை எடுத்து, விடுதியிலிருந்து வெளியேற்றியது. அவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய ரூ.1.75 லட்சம் கல்வி உதவித்தொகையும் நிறுத்தப்பட்டது. தொடர்ந்து கல்லூரியில் நடந்த பல அவமானங்களால் ஜனவரி 17, 2016 அன்று "எனது பிறப்பு ஒரு விபத்து (My birth is a fatal accident)" என எழுதி வைத்துவிட்டு உயிரை மாய்த்துக்கொண்டார் ரோஹித் வெமுலா.

இதேப் போன்ற சாதியக் கொடுமையால், மகாராஷ்டிராவின் தட்வி பில் (Tadvi Bhil) என்ற பழங்குடிச் சமூகத்தைச் சேர்ந்த பயல் தட்வி என்ற மருத்துவ கல்லூரியின் இரண்டாம் ஆண்டு மாணவியும், மே 22, 2019 அன்று இந்த உலகைவிட்டு விடைப்பெற்றுக்கொண்டார். இந்த இரண்டு வழக்குகளும் இந்தியாவையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
இதற்கிடையில், 2023-ம் ஆண்டு மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர்,`` 2018 - 2023 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் மத்திய பல்கலைக்கழகங்கள், ஐஐடி, ஐஐஎம் ஆகியவற்றிலிருந்து எஸ்சி, எஸ்டி மற்றும் ஓபிசி பிரிவுகளைச் சேர்ந்த 19,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிப்பைப் பாதியிலேயே நிறுத்தியுள்ளனர்." எனக் குறிப்பிட்டிருந்தார்.
நாடாளுமன்றத்திலும், உச்ச நீதிமன்றத்திலும் சமர்ப்பிக்கப்பட்ட தரவுகளின்படி, உயர்கல்வி நிறுவனங்களில் சாதிப் பாகுபாடு தொடர்பான புகார்கள் கடந்த ஐந்து ஆண்டுகளில் 118.4 சதவீதம் அதிகரித்துள்ளன. 2019-20-ல் 173 புகார்களே பதிவு செய்யப்பட்ட நிலையில், 2023-24-ல் இந்த எண்ணிக்கை 378 ஆக உயர்ந்துள்ளது. இந்த காலகட்டத்தில், 704 பல்கலைக்கழகங்கள் மற்றும் 1,553 கல்லூரிகளில் இருந்து மொத்தம் 1,160 புகார்கள் பெறப்பட்டிருக்கிறது.
இந்தப் புள்ளி விவரங்கள், இந்தியாவில் கண்ணுக்குத் தெரியாத சாதியும், அதனால் அரங்கேற்றப்பட்ட கொடுமைகளும் எவ்வளவு அருவறுப்பானது என்பதை உலகுக்கு எடுத்துக்காண்பித்தன. ஆனால், இந்தத் தற்கொலைகளும், கல்வி இடை நிறுத்தல்களும் நடப்பதற்கு முன்பே, 2012-ம் ஆண்டு கல்வி நிறுவனங்களில் சாதி பாகுபாடுகளுக்கு எதிராக பல்கலைக்கழக மானியக் குழு (UGC) சட்டங்களை வகுத்திருந்தது.

அந்த சட்டத்தில்...
ஒரு மாணவர் சாதி ரீதியிலான பாகுபாட்டிற்கு உள்ளானார் என்றால் அதில் விசாரணைகள் நடத்தப்படும்.
ஒவ்வொரு கல்லூரியிலும் சாதி பாகுபாட்டை களைய ஒரு அதிகாரி நியமிக்கப்பட்டு இருப்பார்.
சாதிப் பாகுபாடு உள்ளிட்ட புகார்களை அளிக்க அதற்கான மையம் இருக்க வேண்டும்.
இந்த சட்டத்தின் அடிப்படை யில் எஸ்சி மற்றும் எஸ்டி மாணவர்களுக்கான பாதுகாப்பை முக்கியமாக கருதப்பட்டது.
ஒரு புகார் அளிக்கப்பட்டால், அதன் மீது 60 நாட்களுக்குள் முடிவு எடுக்கப்பட வேண்டும்.
ஆனால், இந்த அமைப்பிடம் நிறுவன ரீதியான கடும் நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் பெரிய அளவில் இல்லை. எனவே, சட்டம் இருந்தும் பெரிதாக எந்தச் செயல்பாடும், மாற்றமும் இல்லை. இதைக் கருத்தில்கொண்டு, ரோஹித் வெமுலாவின் அம்மா ராதிகா வெமுலா, பயல் தட்வின் அம்மா அபேதா தட்வி ஆகியோர், ``கல்லூரி வளாகங்களில் சாதியப் பாகுபாட்டை முடிவுக்குக் கொண்டு வர சரியான வழிகாட்டுதலுடன் கூடிய வலுவான கட்டமைப்பு தேவை. 2012-ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட யுஜிசி சட்டம் முறையாக அமல்படுத்த வேண்டும்" என உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், இது குறித்து மத்திய அரசு மற்றும் யுஜிசி-யும் விளக்கம் அளிக்கக் கோரி நோட்டீஸ் அனுப்பியது. நீதிமன்றம் இந்த வழக்கை வெறும் தற்கொலை வழக்காகப் பார்க்காமல், "அமைப்பு ரீதியான தோல்வி" (Institutional Failure) எனக் கருதியது. 2023-ம் ஆண்டு நடந்த விசாரணையின் போது, பல்கலைக்கழகங்களில் சாதி பாகுபாட்டைத் தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விரிவான அறிக்கையை சமர்ப்பிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.
அதன் பிறகு தொடர்ந்து நீதிமன்ற ஆலோசனையின் அடிப்படையில், யுஜிசி பல்வேறு நடவடிக்கையை மேற்கொண்டு வந்தது. அதன் இறுதி வடிவமாகவே இந்த மாத தொடக்கத்தில் நீதிமன்ற ஆலோசனையின் பேரில் யுஜிசி 'உயர்கல்வி நிறுவனங்களில் சமபங்கை மேம்படுத்துதல் (Promotion of Equity) ஒழுங்குமுறை 2026' என்ற விதிமுறைகளை வெளியிட்டது. இந்த விதிகள் இந்தியாவின் அனைத்து உயர்கல்வி நிறுவனங்களுக்கும் பொருந்தும் எனவும் அறிவித்தது.
ஒவ்வொரு உயர்கல்வி நிறுவனமும் Equal Opportunity Centre அமைக்க வேண்டும். ஒரு மூத்த பேராசிரியர் அல்லது தகுதியான ஆசிரியர் இந்த சம வாய்ப்பு மையத்தின் ஒருங்கிணைப்பாளராக இருப்பார்.
சம வாய்ப்பு மையத்தின் செயல்பாட்டை நிர்வகிக்கவும் பாகுபாடு தொடர்பான புகார்களை விசாரிக்கவும், கல்வி நிறுவனத் தலைவரால் Equity Committee அமைக்கப்படும்.
இதில் ஆசிரியர்கள், ஊழியர்கள், சிவில் சமூகப் பிரதிநிதிகள் மற்றும் மாணவர்கள் இடம்பெறுவர்.
இக்குழுவில் ஓபிசி, எஸ்.சி, எஸ்.டி, மாற்றுத்திறனாளிகள் மற்றும் பெண்களுக்குக் கட்டாயம் பிரதிநிதித்துவம் அளிக்கப்பட வேண்டும்.
பிற்படுத்தப்பட்ட ஆசிரியர்கள், ஊழியர்கள் கூட தங்களுக்கு சாதிய பாகுபாடு காட்டப்பட்டால் புகார் அளிக்கலாம்.

அனைத்து உயர்கல்வி நிறுவனங்களிலும் 24 மணிநேரமும் செயல்படும் உதவி எண் இருக்க வேண்டும்.
புகார் கிடைத்த 24 மணி நேரத்திற்குள் குழு கூடி விவாதிக்க வேண்டும். 15 வேலை நாட்களுக்குள் விசாரணையை முடித்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். அதன் பிறகு 7 நாட்களுக்குள் நிறுவனம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சேர்க்கையின் போது மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் தாங்கள் எந்தவிதப் பாகுபாட்டிலும் ஈடுபட மாட்டோம் என உறுதிமொழி அளிக்க வேண்டும்.
குழுவின் முடிவில் அதிருப்தி இருந்தால், 30 நாட்களுக்குள் குறைதீர்ப்பாளர் முன்னிலையில் மேல்முறையீடு செய்யலாம். குறைதீர்ப்பாளர் 30 நாட்களுக்குள் அதைத் தீர்க்க முயற்சி செய்வார்.
கல்வி நிறுவனங்கள் தங்கள் செயல்பாடுகள் குறித்து ஆண்டுக்கு இருமுறை (ஜனவரி மற்றும் ஜூலை) அறிக்கையை இணையதளத்தில் வெளியிட வேண்டும். இதில், மாணவர் சேர்க்கை விவரம் மற்றும் இடைநிற்றல் விகிதங்கள் இடம்பெற வேண்டும்.
6 மாதங்களுக்கு ஒரு முறை யுஜிசி தேசிய அளவிலான கண்காணிப்புக் குழுவை அமைத்து இந்த விதிகள் முறையாகப் பின்பற்றப்படுகிறதா என்பதை ஆய்வு செய்யும்.
இந்த விதிகளுக்குக் கீழ்ப்படியாத கல்வி நிறுவனங்களின் நிதி முடக்கப்படலாம் அல்லது அவற்றின் அங்கீகாரம் ரத்து செய்யப்படலாம்.

இந்தப் புதிய யுஜிசி சட்ட விதிகள், 2012-ம் ஆண்டின் பழைய முறையைப் போல வெறும் ஆலோசனை அமைப்பாக இல்லாமல், அதிக அதிகாரம் கொண்ட சட்டப்பூர்வ அமைப்பாக மாற்றப்பட்டுள்ளது. மேலும், புதிய விதிமுறைகளின்படி, 'சாதி அடிப்படையிலான பாகுபாடு' என்பது பட்டியல் சாதிகள், பட்டியல் பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்புகளைச் சேர்ந்தவர்களுக்கு எதிராக சாதி அடிப்படையில் பாகுபாடு காட்டுவதை மட்டுமே குறிக்கிறது. பொருளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவினர் (EWS), 'சாதி' என்ற வரையறைக்குள் வராவிட்டாலும், அவர்கள் மீதான பாகுபாடும் தண்டனைக்குரியது தான், ஆனால் அது 'சாதி பாகுபாடு' என்ற வரையறைக்கு கீழ் வராமல் 'பொதுவான பாகுபாடு' என்ற பிரிவின் கீழ் கொண்டுவரப்பட்டது.
யுஜிசி-யின் இந்தப் புதிய சட்டத்துக்கு நாடாளாவிய அளவில் வரவேற்பு கிடைத்தது. தமிழ்நாட்டின் முதல்வர் ஸ்டாலின், பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி போன்றத் தலைவர்களும் வரவேற்றிருக்கின்றன.
அதே நேரம், யுஜிசி-யின் இந்தப் விதிகள் பொதுப் பிரிவு மாணவர்களுக்கு எதிராக இருப்பதாகக் குறிப்பிட்டு, 'இந்த விதிகளை வாபஸ் பெற வேண்டும்' என்பதை வலியுறுத்தி உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட சில மாநிலங்களில் ஒரு தரப்பினர் போராட்டத்தையும் நடத்தினர். உத்தரப் பிரதேசத்தில் மாக் மேளாவில் கூடிய சாமியார்களும் புதிய யுஜிசி சட்டம் மீது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர். அகில இந்தியத் தண்டி சன்யாசி பரிஷத்தின் தேசியத் தலைவரான பிதாதிஷ்வர் சுவாமி பிரம்மாஷ்ரம் போன்ற சாமியார்களும், வலதுசாரி அமைப்புகளும் இந்த சட்டத்துக்கு எதிராக கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்து, போராட்டங்களை முன்னெடுத்தன. சில அரசு அதிகாரிகளும் இந்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தங்கள் பதவிகளை ராஜினாமா செய்தனர்.

இந்த நிலையில்தான் உச்ச நீதிமன்றம், ``புதிய விதிமுறைகளின் மொழி மிகவும் தெளிவற்றதாக உள்ளது. இந்த விதிகள் தவறாகப் பயன்படுத்தப்படக்கூடிய சாத்தியக்கூறுகள் அதிகம் உள்ளன. இந்தப் புதிய வழிகாட்டுதல்கள் சமூகத்தைப் பிளவுபடுத்தும் தன்மை கொண்டவை. இதில் நீதிமன்றம் தலையிடாவிட்டால், அது சமூகத்தில் ஒரு ஆபத்தான மற்றும் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும். எனவே, புதிய யு.ஜி.சி விதிகளுக்கு இடைக்காலத் தடை விதிக்கப்படுகிறது." எனத் தடை விதித்திருக்கிறது.
இந்த விவகாரம் குறித்து விரிவாகப் பேச, திராவிடர் மாணவர் கூட்டமைப்பு அமைப்பின் தேசிய ஒருங்கிணைப்பாளர் இளையபெருமாளை தொடர்புகொண்டோம். நம்மிடம் விரிவாகவும், விளக்கமாகவும் பேசத் தொடங்கிய அவர், ``கல்வி நிறுவனங்களில் ஒடுக்கப்பட்ட மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் எதிர்கொள்ளும் நெருக்கடிகள் நீண்ட காலமாக நடந்து வருகிறது.
குறிப்பாக ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிராகத் திட்டமிட்டு நடத்தப்படுகிறது. அதனால்தான், ரோஹித் வெமுலாவின் மரணத்தைத் தொடர்ந்து, கல்வி நிறுவனங்களில் நடக்கும் "அமைப்பு ரீதியான கொலைகளை" (Institutional Murders) தடுக்க 'ரோஹித் சட்டம்' வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. அதன் அழுத்தத்தால் தான் இந்த புதிய விதிகள் வந்துள்ளன.
2012 விதிகள் காங்கிரஸ் ஆட்சியில் கொண்டு வரப்பட்டது. இது குறிப்பாக எஸ்.சி, எஸ்டி மாணவர்களுக்கானது மட்டுமே. இதில் ஓ.பி.சி சேர்க்கப்படவில்லை. இப்போது கொண்டுவந்த புதிய விதியில் ஓ.பி.சி, பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினர் (EWS), பெண்கள், மாற்றுத்திறனாளிகள் எனப் பலரும் கொண்டுவரப்பட்டிருக்கின்றனர்.
இந்த விதியில் முக்கியமான அம்சம், ஒரு புகார் அளிக்கப்பட்டால் 15 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்ற காலக்கெடு விதிக்கப்பட்டிருக்கிறது. 2012 விதிகளில் இந்தத் தெளிவான கால வரையறை இல்லை. மேலும், விசாரணை கமிட்டியில் ஒரு மாணவரையும் உறுப்பினராகச் சேர்க்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
ஏற்கனவே நாட்டில் வன்கொடுமை தடுப்புச் சட்டம் இருக்கும்போது, யுஜிசி மூலம் தனியாக ஒரு விதிமுறை வருவது அந்தச் சட்டத்தை பலவீனப்படுத்திவிடுமா என்ற சந்தேகம் எழுவது இயல்பு. பல்கலைக்கழகங்கள் ஒரு 'பாதுகாக்கப்பட்ட இடமாகப்' பார்க்கப்படுகின்றன. ஒரு மாணவரைப் பல்கலைக்கழகத்திற்குள் வந்து காவல்துறை கைது செய்ய வேண்டும் என்றால் கூட, அந்தப் பல்கலைக்கழகப் பதிவாளர் அனுமதி அளிக்க வேண்டும். இந்தத் தன்னாட்சி அதிகாரம் சில நேரங்களில் குற்றவாளிகளைக் காப்பாற்றவோ அல்லது நீதியைத் தாமதப்படுத்தவோ வாய்ப்பாக அமைந்துவிடுகிறது. வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் ஒரு FIR பதிவு செய்வது சாதாரண விஷயமல்ல. கடும் போராட்டங்களுக்குப் பிறகே அது சாத்தியமாகிறது.

அதேநேரம், வெளியில் நடக்கும் வன்கொடுமைகளை விட, கல்வி நிறுவனங்களுக்குள் நடக்கும் பாகுபாடுகள் மறைமுகமானவை. ஒரு எஸ்சி - எஸ்டி மாணவர் பிஎச்.டி சேர்ந்தும் அவருக்கு வழிகாட்டும் பேராசிரியர் ஒதுக்காமல் இழுத்தடிப்பது, மாணவர்களின் ஸ்காலர்ஷிப்பை நிறுத்தி வைப்பது அல்லது தாமதப்படுத்துவது, மாணவர்களின் முன்னேற்றத்தைத் தடுக்கும் விதமான நிர்வாகச் சிக்கல்களை உருவாக்குவது, இட ஒதுக்கீட்டில் வரும் மாணவர்கள் மீது "உனக்குத் தகுதி இல்லை" என்ற பிம்பம் கட்டமைக்கப்படுகிறது. ஐ.ஐ.டி மும்பையில் நடந்த தர்ஷன் சோலங்கி போன்ற மாணவர்களின் மரணங்கள் இதற்குச் சான்று.
கல்லூரி விடுதிகளில் அசைவ உணவுகள் தவிர்க்கப்படுவதும், அப்படியே இருந்தாலும் அவை ஒரு திரைக்குப் பின்னால் மறைத்து வைக்கப்படுவதும், ஒரு குறிப்பிட்ட பிரிவினரின் கலாச்சாரம் மற்றவர்கள் மீது திணிக்கப்படுவதும், மாணவர்களுக்கு வளாகத்துக்குள்ளேயே சுதந்திரமின்மை போன்ற சூழலை உருவாக்குகிறது.
இது போன்ற நுணுக்கமான வன்கொடுமைகளை வெளியில் இருக்கும் பொதுவான வன்கொடுமை தடுப்புச் சட்டம் நேரடியாகக் கையாள முடியாது. அதனால்தான் பல்கலைக்கழகங்களுக்கெனத் தனித்துவமான விதிகள் தேவைப்படுகின்றன.
யுஜிசி கொடுத்த இந்த விதிகளில் அனைத்துப் பிரிவினரையும் உள்ச்சேர்த்து "பொதுப்பிரிவினரை" மட்டுமே குற்றவாளிகளாகச் சித்தரிப்பதாக ஒரு பிம்பம் கட்டமைக்கப்படுகிறது. பல்கலைக்கழகங்களின் அதிகார மையங்களில் இருப்பவர்கள் தங்களுக்கு எதிராகப் புகார்கள் வரும்போது அதைத் தடுக்க முற்படுகின்றனர். ஏற்கெனவே, வழங்கப்பட்ட புகார்களை இந்த புதிய விதிகள் மீண்டும் கிளரும். அப்படி நடந்தால் அடுத்தடுத்த நடவடிக்கைகளை குற்றமிழைத்தவர்கள் எதிர்க்கொள்ள நேரிடும். அதற்காகவே இந்த விதிகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்படுகிறது எனக் கருதுகிறேன்.

நீதிமன்றத்தின் இரட்டை நிலைப்பாடு
விவசாயச் சட்டங்கள் அல்லது சிறுபான்மையினருக்கு எதிரான சட்டங்கள் வரும்போது தடுத்து நிறுத்தாத நீதிமன்றம், ஆதிக்கத் தரப்பினர் போராடும்போது மட்டும் உடனடியாக "கமிட்டி" அமைத்து விதிகளை மறுபரிசீலனை செய்ய முன்வருவது ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
இந்தப் புதிய சட்டத்தில் பொருளாதார அடிப்படையில் பின்தங்கியவர்களை (EWS) இணைத்தது வன்மையான கண்டனத்துக்குறியது. இந்தியாவில் பாகுபாடு என்பது பொருளாதார நிலையில் இல்லை, சாதி அடிப்படையில்தான் இருக்கிறது. அதேப்போல உயர்கல்வி நிறுவனங்களில் ஜாட் போன்ற பல ஓபிசி சமூகங்கள் இன்றும் பேராசிரியர்களாகவோ, உயர் பதவிகளிலோ இல்லை. அட்மிஷன் மற்றும் வேலைவாய்ப்பில் ஓபிசி-க்கான உரிமைகள் முழுமையாகச் சென்றடையாத நிலையில், அவர்களைப் பொதுவான ஒரு பிரிவுக்குள் கொண்டு வருவது சமூக நீதியை நீர்த்துப்போகச் செய்யும். மேலும், பல்கலைக்கழகங்களில் இன்றும் ஆதிக்கச் சாதியினரே உயர் பதவிகளில் உள்ளனர். EWS போன்ற பிரிவுகளைச் சேர்ப்பதன் மூலம், அவர்கள் இந்தச் சட்டத்தைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ளவும் வாய்ப்புள்ளது.

சமூகம் ஏற்கனவே சமமாக இல்லை. வாய்ப்பு மறுக்கப்பட்டவர்களுக்கு அதிக வாய்ப்புகளை வழங்கி, அந்த இடைவெளியை நிரப்புவதன் மூலமே (Equity) அனைவரையும் சமநிலைக்கு கொண்டு வர முடியும். பல்கலைக்கழகங்கள் இந்த மாற்றத்தை முன்னெடுக்கும் இடங்களாக இருக்க வேண்டும். படிக்காதவர்கள் இருக்கும் கிராமங்களில் ஜாதி இருப்பதை விட, படித்து அறிவு பெற்றவர்கள் இருக்கும் பல்கலைக்கழகங்களில் சாதி பாகுபாடு பார்ப்பது அதிக ஆபத்தானது. கல்வி நிறுவனங்களில் சாதி மற்றும் பாகுபாட்டை ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது. அது சமுதாயத்திலிருந்தே ஒழிக்கப்பட வேண்டிய ஒன்று." என்றார் உறுதியான குரலில்.


















