ChatGPT-யை கேட்டு பங்குச்சந்தையில் முதலீடு செய்யலாமா? - நிபுணர் விளக்கம்
UN: 1.5 பில்லியன் அமெரிக்க டாலர் நிலுவை; ரூ.5000 கோடி பட்ஜெட் கட்; நிதிப் பற்றாக்குறை ஐநா சபை
ஐக்கிய நாடுகள் சபை கடந்த சில ஆண்டுகளில் இல்லாத அளவு கடுமையான நிதி நெருக்கடியை எதிர்கொள்வதாக அதன் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் தெரிவித்துள்ளார்.
2024ஆம் ஆண்டின் முடிவில், ஐநா சபைக்கு 760 மில்லியன் அமெரிக்க டாலர் நிலுவைத் தொகையாக உள்ளது.
மேலும், 2025ஆம் ஆண்டுக்கான 877 மில்லியன் அமெரிக்க டாலரும் செலுத்தப்படாமல் இருப்பதால், மொத்த நிலுவைத் தொகை சுமார் 1.586 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.

ஐ.நா.வின் 193 உறுப்பு நாடுகளில் வெறும் 145 நாடுகள் மட்டுமே 2025ஆம் ஆண்டுக்கான தங்கள் நிலுவைத் தொகையை முழுமையாகச் செலுத்தியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலுவைக் காரணமாக, ஐ.நா. தனது வருடாந்திர பட்ஜெட்டில் கணிசமான குறைப்புகளை மேற்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
பட்ஜெட் குறைப்பு மற்றும் அதன் தாக்கங்கள்
ஏற்கெனவே UN80 சீர்திருத்த முயற்சியின் கீழ் ஐ.நா. சபை செலவினங்களைக் குறைக்க முயலும் சூழலில், பெரும்பாலான பணிகள் நிதிப் பற்றாக்குறையால் தடைபடுவதாக பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் தெரிவித்துள்ளார்.
"உறுப்பு நாடுகள் தங்கள் பங்களிப்புகளை முழுமையாகவும் சரியான நேரத்திலும் செலுத்துமாறு நான் பலமுறை வேண்டுகோள் விடுத்துள்ளேன்" என்று வருந்தியுள்ளார்.

திருத்தப்பட்ட திட்டத்தின்படி, 2026ஆம் ஆண்டுக்கான ஐ.நா.வின் வழக்கமான பட்ஜெட் 3.238 பில்லியன் டாலராக இருக்கும். இது 2025 உடன் ஒப்பிடும்போது 577 மில்லியன் டாலர் (சுமார் 5,200 கோடி ரூபாய்) அல்லது 15.1% குறைவாகும்.
வேலை இழப்புகள் மற்றும் பணிகளில் தாக்கம்
இந்த நிதி நெருக்கடியின் காரணமாக 2,681 வேலைகள் நீக்கப்படும். இது ஐ.நா. அதிகாரிகளில் சுமார் 18.8% ஆகும். சிறப்பு அரசியல் பணிகளில் 2025 உடன் ஒப்பிடுகையில் 21% குறைப்பு மேற்கொள்ளப்படும்.
இதன் விளைவாக, ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு மற்றும் உலகின் அரசியல் நிலைத்தன்மை இல்லாத நாடுகளில் ஐ.நா.வின் பணிகள் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றன.
செலவினங்களைக் கட்டுப்படுத்துவதற்காக, ஐ.நா.வின் முக்கிய நிலையங்களைச் செலவு குறைவான நகரங்களுக்கு மாற்றுவது, ஊழியர்களின் விருப்ப ஓய்வை ஊக்குவிப்பது உள்ளிட்ட பல்வேறு மாற்றங்களைச் செயல்படுத்த ஐ.நா. திட்டமிட்டுள்ளது.















