Beauty Tips: சமந்தா, ராஷ்மிகா சொன்ன ரகசியம்! சரும பளபளப்புக்கு உதவும் Apple Cide...
UPSC: `இறுதியில் என்னையே நான் தொலைத்துவிட்டேன்!' - யு.பி.எஸ்.சி தயாரிப்பு குறித்து இளம்பெண் எமோஷனல்
யு.பி.எஸ்.சி (UPSC) தேர்வுக்குத் தயாராகும் கோடிக்கணக்கான இளைஞர்கள் தங்களின் உயரிய இலகுக்காக, பல்வேறு தியாகங்களைச் செய்கின்றனர். சவால்கள் நிறைந்த இந்தப் பாதையில், ஒரு தேர்வரின் மனமும் வாழ்க்கையும் எவ்வளவு ஆழமாகப் பாதிக்கப்படுகின்றன என்பதை, மான்வி ஸ்ரீவஸ்தவா என்ற இளம் பெண்ணின் உணர்வுப்பூர்வமான காணொளி சமீபத்தில் வெளிச்சத்திற்குக் கொண்டுவந்துள்ளது.
ஒரு மகத்தான லட்சியத்துக்காகத் தன்னை வருத்திக்கொள்ளும் ஒவ்வொருவருடைய நெஞ்சிலும் எழும் ஒரு கேள்வியாகவே அவருடைய ஆதங்கம் இன்று பார்க்கப்படுகிறது!
யு.பி.எஸ்.சி தேர்வைத் தன் இலக்காகக் கொண்ட அவர், அந்தப் பயணத்தில் தான் சந்தித்த சிரமங்களைப் பதிவு செய்துள்ளார். "எனது 20-களை இதற்காகவே நான் கொடுத்துவிட்டேன். பிறந்தநாள், நண்பர்கள், உறவுகள் என எல்லாவற்றையும் விட்டுவிட்டு என்னை நானே தனிமைப்படுத்திக் கொண்டேன்" என்று மான்வி கூறுகிறார்.

இந்தக் கடுமையான ஒழுக்கமும், வெளி உலகத்துடனான தொடர்புகளை முழுவதுமாகத் துண்டித்துக் கொண்ட தனிமையும், ஒரு கட்டத்தில் அவரது வாழ்க்கையின் மீதே ஆழமான பாதிப்பை ஏற்படுத்தின. இலக்கை அடைவதற்காகத் தன்னை வருத்திக்கொண்டபோது, அவர் படிப்படியாகத் தன்னுடைய இயல்பான மகிழ்ச்சி மற்றும் அடையாளத்தையே இழந்துவிட்டதாகச் சொல்கிறார்.
தேர்வுப் பாதை முடிவுக்கு வந்தபோதுதான், மான்வி ஒரு பெரிய வெற்றிடத்தை உணர்ந்தார். "எல்லாம் முடிந்த பிறகு, நான் யார் என்றே எனக்குத் தெரியவில்லை. யு.பி.எஸ்.சியைத் துரத்துவதற்கும், தூக்கத்தை இழந்ததற்கும் இடையில், நான் எப்போதோ என்னையே தொலைத்துவிட்டேன்" என்று அவர் மன வேதனையுடன் பேசுகிறார்.
அவருடைய லேப்டாப் திரையில் தன் ரெஸ்யூமை எழுத முற்படும்போது, அது தோல்விகளைப் பற்றி மட்டுமே அறிந்த ஒருவருடையதைப் போல் தோன்றுவதாகவும், 'வாழ்க்கையை எப்படி வாழ வேண்டும்' என்று தெரியாதவராக உணருவதாகவும் அவர் குறிப்பிடுகிறார்.
தன்னுடைய இந்தக் கடுமையான அனுபவத்திலிருந்து, மான்வி மற்ற தேர்வர்களுக்கு ஒரு முக்கியமான கோரிக்கையை வைக்கிறார். தான் அனுபவித்த தனிமையின் வலியைத் தாங்களும் அனுபவிக்காமல், மற்ற தேர்வர்கள் தங்கள் மன ஆரோக்கியத்தைப் பாதுகாக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்துகிறார்.
"நீங்கள் உங்கள் கனவுகளுக்காகத் தனிமைப்படுத்திக் கொண்டிருந்தால், தயவுசெய்து உங்களைத் தொலைத்து விடாதீர்கள். எல்லாம் முடிந்த பிறகு, உங்களுக்கு நீங்களே தேவைப்படுவீர்கள். உங்கள் மன ஆரோக்கியத்தைக் கவனித்துக் கொள்ளுங்கள்" என்பதே அவருடைய அழுத்தமான செய்தியாகும். இலக்கை அடைவதற்கான பாதையில், மனத் தெளிவுக்கும், சுயமகிழ்ச்சிக்கும் சமமான முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதை நினைவூட்டுகிறார்.













