திருநெல்வேலி: நெல்லையப்பர் திருக்கோயில் 'நெல்லுக்கு வேலியிட்ட திருவிளையாடல் காட்...
``அதிக சம்பளம் கேட்டேனா? இதுதான் உண்மை" - தொடர் விமர்சனங்களுக்கு 'பளீச்' பதில் சொன்ன லோகேஷ் கனகராஜ்!
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூலி திரைப்படத்தைத் தொடர்ந்து நடிகர் அல்லு அர்ஜுனை வைத்து புதிய படம் எடுப்பதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில், லோகேஷ் கனகராஜ், இன்று செய்தியாளர்களைச் சந்தித்து உரையாற்றினார்.
அப்போது, ``கூலி திரைப்படத்துக்குப் பிறகு நான் ஊடகங்களிடம் சரியாக பேசவில்லை. என் குறித்து சில விஷயங்கள் சமூக ஊடகங்களில் பேசப்படுகிறது. அதுகுறித்து விளக்கமளிக்கவே இந்த சந்திப்பு. கூலி திரைப்படம் 35 நாள்களுக்குமேல் திரையரங்கில் ஓடியது. அதற்கு மக்களுக்கு நன்றி. அந்தப் படத்தை விமர்சித்தவர்களுக்கும் நன்றி. அதிலிருந்துதான் என்னிடம் மக்கள் என்ன எதிர்பார்க்கிறார்கள் என்பதைப் புரிந்துகொண்டேன். என்னுடைய அடுத்தடுத்தப் படங்களில் அதை சரிசெய்ய முயற்சிப்பேன்.
கூலி படத்துக்குப் பிறகு கைதி 2 படம்தான் என்னுடைய திட்டம். கூலி திரைப்படம் வெளியாகும்போது ரஜினி - கமல் என இருவரையும் சந்தித்தேன். இருவரும் சேர்ந்து வரும்படியான ஒருபடம் பண்ணலாம் எனக் கூறினார்கள். இந்த வாய்ப்பு அடுத்து எப்போது கிடைக்குமோ எனக் கருதி, கைதி 2 நிறுத்திவிட்டேன். மேலும், ரஜினி - கமல் இணைந்து நடிப்பதற்கான கதையை எழுதினேன்.
இருவரிடமும் தனித்தனியே கதைக் கூறினேன். இருவருக்கும் கதை பிடித்திருந்தது, ஆனால் இருவரும் தொடர்ந்து ஆக்ஷன் படமாகவே நடித்து வருகிறார்கள் என்பதால், ஆக்ஷன் படம் இல்லாமல் லைட் ஹார்ட் படமாக கேட்டிருந்தார்கள். அப்படியான கதை எனக்கு வராது என்பதால் அதை அவர்களிடம் கூறி, அதிலிருந்து வந்துவிட்டேன். நிறைய சம்பளம் கேட்டேன், அதற்கு மறுத்ததால் நான் விலகிவிட்டேன் என்றெல்லாம் பேசப்பட்டது. ஆனால், இதுதான் உண்மை.
இதற்கிடையில், கைதி 2 படக் குழுவினர் வேறு படங்களில் ஒப்பந்தமாகியிருந்தார்கள். இந்த சூழலில்தான், 6 வருடங்களுக்கு முன்பு மைத்ரி பிக்சர்ஸ் எனக்கு அட்வான்ஸ் கொடுத்திருந்தார்கள். அதனால், அந்த நிறுவனத்துக்கு அல்லு அர்ஜூன் வைத்து படம் எடுக்கிறேன். இப்படித்தான் எல்லாமே அமைந்து வந்தது.
இதற்கு அடுத்தப்படம் கண்டிப்பாக கைதி2-வாகதான் இருக்கும். எல்.சி.யு முடிந்துவிட்டது என்றெல்லாம் பேசினார்கள். இது ரசிகர்கள் கொடுத்தது. அதனால், அது முடியாது. கைதி 2, விக்ரம் 2, ரோலக்ஸ் இதெல்லாம் என்னுடைய க் கமிட்மென்ட்ஸ் சோ இத நான் பண்ணாம போக முடியாது இது எல்லாமே என்னோட வாக்குறுதி.
எல்.சி.யு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதே தவிர, அது இன்னும் முடிவுக்கு வரவில்லை. நடிகர் அல்லு அர்ஜுனின் படத்தை முடித்த பிறகு, எல்.சி.யு மீண்டும் முழு வீச்சில் தொடங்கும் என்று நினைக்கிறேன். அதற்கு முன்பாக, தயாரிப்பு நிலையில் உள்ள 'பென்ஸ்' (Benz) திரைப்படமும் எல்.சி.யு-வின் ஒரு பகுதியாகவே உருவாகிறது. எனவே, ஏதேனும் ஒரு காலகட்டத்தில் எல்.சி.யு தொடர்பான திரைப்படங்கள் தொடர்ந்து வெளிவந்து கொண்டே இருக்கும்.
நடிகர் அமீர்கான் மற்றும் நான் இணைந்து ஒரு படம் பண்ணுவதாக இருந்தது. அது குறித்து இப்போதும் நாங்கள் பேசிக்கொண்டுதான் இருக்கிறோம். எனக்கும் அவருக்கும் தற்போது நிறையப் பணிச்சுமைகளும், ஒப்பந்தங்களும் இருப்பதால், அந்தப் படம் எப்போது தொடங்கும் என்று இப்போதைக்குச் சொல்ல முடியாது. ஆனால் அதற்கான பேச்சுவார்த்தைகள் இன்னும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன." என்றார்.















