பங்குச் சந்தை இனி ஏறுமா அல்லது இறங்குமா?- ஷேர் மார்க்கெட் எக்ஸ்பர்ட் வ.நாகப்பன்...
ஒரு சிறுமியை வன்கொடுமை செய்துவிட்டு மற்றொரு சிறுமியுடன் எஸ்கேப் - கேரள வாலிபரை தூக்கிய குமரி போலீஸ்
கன்னியாகுமரி மாவட்டம் மணவாளக்குறிச்சி அருகே உள்ள ஒரு மீனவர் கிராமத்தை சேர்ந்த 17-வயது சிறுமி குடும்ப வறுமை காரணமாக படிப்பை கைவிட்டுவிட்டு அந்த பகுதியில் உள்ள கடையில் வேலை செய்து வந்தார்.
கடந்த நவம்பர் 10-ம் தேதி கடைக்கு செல்வதாக கூறி சென்ற அந்த சிறுமி பின் மாயமானார். பெற்றோர் சிறுமியை தேடி வந்த நிலையில், மறுநாள் வீடு திரும்பினார் சிறுமி. எங்கு சென்றாய் என பெற்றோர் கேட்டதற்கு, தனது இன்ஸ்டாகிராம் காதலன் பீட்டர் என்பவர் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பைக்கில் கன்னியாகுமரிக்கு அழைத்து சென்றதாகவும், கன்னியாகுமரியில் ஒரு அறையில் அடைத்து வைத்து பாலியல் வன்கொடுமை செய்ததோடு அடுத்த நாள் காலை தான் அணிந்திருந்த தங்க கம்மல், மோதிரம் ஆகியவற்றை கழற்றி வாங்கிகொண்டதாகவும் தெரிவித்தார்.
மேலும் தன்னை பைக்கில் அழைத்துவந்து அம்மாண்டிவிளை பகுதியில் இறக்கி விட்டுவிட்டு சென்றுவிட்டதாகவும், காதலன் ஏமாற்றியதை உணர்ந்து வீடு திரும்பியதாகவும் அந்த சிறுமி தெரிவித்தார். மேலும் வாலிபரின் முகவரி உள்ளிட்ட விபரங்கள் தெரியாது எனவும் சிறுமி கூறியுள்ளார். சிறுமி கூறியதை கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் இதுகுறித்து குளச்சல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இன்ஸ்டா வாலிபர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்த போலீஸார் தலைமறைவான அவரைத் தேடிவந்தனர்.

அந்த வாலிபரின் செல்போன் எண்ணை ட்ரேஸ் செய்ய முயன்றும் போலீஸாரால் கண்டுபிடிக்க முடியாத நிலை ஏற்பட்டது. அந்த வாலிபரின் இன்ஸ்டாகிராம் கணக்கும் லாக் அவுட் செய்யப்பட்டிருந்தது. கன்னியாகுமரியில் அவர்கள் தங்கியிருந்த விடுதியை அடையாளம் கண்டு அங்கு சென்று விசாரணை நடத்தினர். அங்கு கண்காணிப்பு கேமரா இல்லை. மேலும், அந்த விடுதியில் போலியான ஆதார் எண் கொடுத்து அறை எடுத்ததும் தெரியவந்தது. இதையடுத்து சைபர் கிரைம் போலீஸாரின் உதவியுடன் வாலிபர் அந்த சிறுமியை தொடர்பு கொண்ட செல்போன் எண்ணை ஆய்வு செய்தனர். அந்த எண் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.
இதையடுத்து அந்த சிம் பயன்படுத்தப்பட்ட செல்போனின் ஐ.எம்.இ.ஐ எண்ணை ஆய்வு செய்தபோது, அதில் வேறு புதிய சிம் போடப்பட்டிருந்தது தெரியவந்தது. அந்த புதிய சிம் தேனி மாவட்டம் கூடலூரில் ஒரு வீட்டில் பயன்படுத்தியதும் தெரியவந்தது. இதையடுத்து டவர் லொக்கேஷன் மூலம் தேனி மாவட்டம் கூடலூர் விரைந்த போலீஸார் செல்போன் பயன்பாட்டில் இருந்த வீட்டிற்கு சென்றனர். அங்கு இருந்த பெண்ணிடம் நடத்திய விசாரணையில் இன்ஸ்டாகிராம் வாலிபர் கேரளா மாநிலம் இடுக்கி கட்டப்பனை பகுதியை சேர்ந்த பினு (24) என்பது தெரியவந்தது.
டீ மாஸ்டரான அவர் திருவிழா கடைகளுக்கு சென்று குலுக்கி சர்பத் வியாபாரம் செய்து வந்ததும் தெரியவந்தது. மேலும் இன்ஸ்டாகிராமில் காதலித்த ஒரு சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக கூறி அந்த வீட்டுக்கு அழைத்து வந்து தன்னிடம் ஒரு நாள் தங்க அடைக்கலம் கேட்டதாகவும், இரவு தங்கியவர் காலையில் சொந்த ஊரான கேரளா மாநிலம் இடுக்கி அருகே உள்ள கட்டப்பனை கிராமத்திற்கு செல்வதாக கூறி சிறுமியுடன் சென்று விட்டதாகவும் தெரிவித்த அந்த பெண் பினுவின் புகைப்படத்தையும் போலீஸாரிடம் கொடுத்துள்ளார்.

ஏற்கனவே ஒரு சிறுமியை ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு எஸ்கேப் ஆனவர் மற்றொரு சிறுமியையும் ஏமாற்றி அழைத்து வந்துள்ளதை அறிந்து அதிர்ச்சியடைந்த குமரி போலீஸார் கேரளா மாநிலம் இடுக்கி கட்டப்பனை கிராமத்திற்கு சென்றனர். நூற்றுக்கணக்கான விடுதிகள் உள்ள சுற்றுலாதலம் என்பதால் கட்டப்பனையில் அவரை தேடி கண்டு பிடிக்க வசதியாக அங்குள்ள விடுதி உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகளை தொடர்பு கொண்டு விபரத்தை கூறி பினுவின் புகைப்படத்தை கொடுத்து கண்டு பிடிக்க உதவுமாறு கேட்டனர்.
உடனடியாக விடுதி உரிமையாளர் சங்கத்தினர் அவர்களது வாட்ஸ் ஆப் குரூப்பில் பினுவின் புகைப்படத்தையும், தகவலையும் பகிர்ந்தனர். ஒரு விடுதி மேலாளர் இந்த நபர் சிறுமி ஒருவருடன் தங்களது விடுதியில் தங்கியிருப்பதாக தகவல் தெரிவித்தார். அந்த விடுதிக்குச் சென்ற போலீஸார் பினுவை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையின் போது பினு அழைத்துச் சென்ற சிறுமி கன்னியாகுமரி மாவட்டம் கோட்டார் பகுதியை சேர்ந்தவர் என தெரியவந்தது. பினுவைக் கைதுசெய்து குளச்சல் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், "பினு போலி இன்ஸ்டாகிராம் மூலம் தனது பெயர்களை மாற்றி ஏற்கனவே சில பெண்களை ஏமாற்றியுள்ளார். கேரளாவில் அவருடன் இருந்த கோட்டாறு பகுதியைச் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக ஏற்கனவே போக்சோ வழக்கில் கைதுசெய்யப்பட்டு சிறைக்குச் சென்று ஜாமீனில் வெளியே வந்துள்ளார். அதன் பிறகு சாத்தான்குளம் பகுதியில் தங்கியிருந்த பினு மணவாளக்குறிச்சி அருகே உள்ள மீனவ கிராமத்தை சேர்ந்த 17-வயது சிறுமியிடம் பீட்டர் என்ற பெயரில் அறிமுகம் ஆகி, திருமணம் செய்து கொள்வதாக கூறி அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
அந்த சிறுமியின் நகைகளை பறித்து கொண்டு கேரளா செல்லும்போது, கோட்டாறு பகுதியைச் சேர்ந்த பழைய இன்ஸ்டாகிராம் காதலியான சிறுமியை தொடர்பு கொண்டு, பழைய நிகழ்வுகளை மறந்து அவரை திருமணம் செய்வதாகக்கூறி இடுக்கி கட்டப்பனைக்கு அழைத்துச் சென்றுள்ளான். அங்கு தங்கி டீ-க்கடையில் மாஸ்டர் வேலைக்கு முயற்சி செய்துவந்த நிலையில் கைது செய்யப்பட்டார். அவரது, இன்ஸ்டாகிராம் கணக்கு போலி என்பதால் தன்னை யாரும் கண்டுபிடிக்க முடியாது என நினைத்து சொந்த ஊருக்கே சென்றுள்ளான். அவருடன் இருந்த கோட்டாறு பகுதியைச் சேர்ந்த சிறுமியை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்துள்ளோம். பினு பத்துக்கும் மேற்பட்ட போலி இன்ஸ்டாகிராம் கணக்குகளை உருவாக்கி வைத்துள்ளான். அவரை நாகர்கோவில் போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளோம்" என்றனர்.


















