Suriya: `ரசிகர்களிடம் கொடுத்த வாக்கு' 2026-ல் சூர்யாவின் டார்க்கெட் இதுதான்
`மஞ்சு வாரியர் கூறியதைத் தொடர்ந்துதான் எனக்கு எதிரான கூட்டுச் சதி' -தீர்ப்பு குறித்து நடிகர் திலீப்
கேரளாவைச் சேர்ந்த பிரபல நடிகை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட திலீப் உள்ளிட்ட 10 பேரும் வழக்கு நடைபெற்றுவரும் எர்ணாகுளம் பிரின்சிபல் செஷன்ஸ் கோர்ட்டில் ஆஜராகினர்.
இதில், நடிகர் திலீப் உள்ளிட்ட 4 பேர் குற்றவாளிகள் அல்ல எனக் கூறி கோர்ட் விடுவித்தது. அதேசமயம் பல்சர் சுனி உள்ளிட்ட 6 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பளித்த கோர்ட், வரும் 12-ம் தேதி தண்டனை அறிவிப்பதாக தெரிவித்துள்ளது.

கோர்ட்டிலிருந்து வெளியே வந்த திலீப் செய்தியாளர்களிடம் கூறுகையில், "சர்வசக்திவாய்ந்த தெய்வத்துக்கு நன்றி. சத்தியம் வென்றுள்ளது. இந்த வழக்கில் கிரிமினல் கூட்டுச் சதி உள்ளதாகவும், அதைப் பற்றி விசாரிக்க வேண்டும் என மஞ்சு வாரியர் கூறியதைத் தொடர்ந்துதான் எனக்கு எதிரான கூட்டுச் சதி தொடங்கியது.
அன்றைய போலீஸ் உயர் அதிகாரி, ஒரு கிரிமினல் போலீஸ் டீமை ஏற்படுத்தினார். அந்த போலீஸ் டீம், சிறையில் இருந்த குற்றவாளிகளுடன் சேர்ந்து பொய்க் கதையை புனைந்தது. அவர்கள் சில செய்தி நிறுவனங்கள் மூலம் பொய்க் கதைகளை சமூக வலைத்தளங்களில் பரப்பினார்கள்.
போலீஸ் டீம் ஏற்படுத்திய பொய்க்கதை கோர்ட்டில் தகர்ந்து விட்டது. இந்த வழக்கில் என்னை குற்றவாளி ஆக்குவதற்காக கூட்டுச் சதி நடந்துள்ளது.
சமூகத்தில் என் கேரியர், என் இமேஜ், என் வாழ்க்கையையும் இல்லாமல் செய்வதற்காக இந்த வழக்கை புனைந்துள்ளனர். கடந்த 9 ஆண்டுகளாக எனக்காக ஆத்மார்த்தமாக துணை நின்ற நண்பர்கள், உறவினர்கள், என் மீது அன்பு கொண்ட கோடிக்கணக்கான மனதுகளுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.
எனக்காக ஆத்மார்த்தமாக கோர்ட்டில் வாதாடிய வழக்கறிஞர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்" என்றார்.

தீர்ப்புக்குறித்து கருத்து தெரிவித்த நடிகை பாக்கியலட்சுமி, "பாதிக்கப்பட்ட நடிகை இதற்கு மேல் அனுபவிக்க வேண்டிய கஷ்டம் எதுவுமே இல்லை. நடிகை அனுபவித்த மிகப் பெரிய கொடுமைக்கு என்னச் செய்யப் போகிறார்கள்? கண்ணால் காண்பதை எல்லாம் பரிகசிக்கவும், ட்ரோல் செய்யவும் செய்பவர்கள் - அவர்களுடைய வீட்டில் உள்ள பெண்களுக்கு இது போன்ற பிரச்சனை ஏற்படும் போதே பாடம் படிப்பார்கள்.
திலீப்பின் பெயரை கூறியது பாதிக்கப்பட்ட நடிகை அல்ல; முதல் குற்றவாளியான பல்சர் சுனிதான் அவரது பெயரைச் சொன்னார். சினிமா இண்டஸ்ட்ரியில் எத்தனையோ பேர் இருக்கும் போது ஏன் அவரது பெயரை கூற வேண்டும்? பல்சர் சுனிக்கு கொட்டேஷன் கொடுத்தது யார் என்பது பற்றி விசாரணை நடத்த வேண்டும்" என்றார்.

















