"அன்புமணிக்கும், பாமக-வுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என உறுதியாகிவிட்டது" - எம்...
திருப்பதி: `ரூ.100 கோடி காணிக்கையை திருடியது உண்மைதான்' - தேவஸ்தான கிளர்க் வாக்குமூலம்!
திருப்பதி தேவஸ்தானத்தின் திருமலை பெத்த ஜீயர் மடத்தில் கிளார்க்காக பணியாற்றிக் கொண்டிருந்தவர் ரவிக்குமார். இவர் 2023-ம் ஆண்டு ஏப்ரல் 29-ம் தேதி இந்திய மதிப்பில் 72,000 அமெரிக்க டாலரை திருட முயன்றபோது கையும், களவுமாக பிடிப்பட்டார். அதே ஆண்டு ஜூன் மாதம் ரவிக்குமார் ரூ.14 கோடி மதிப்பிலான சொத்துகளை திருப்பதி தேவஸ்தானத்துக்கு நன்கொடையாக அளித்தார்.
அதைத் தொடர்ந்து திருப்பதியின் லோக் அதாலத் நீதிமன்றம் ரவிக்குமார் - அப்போதைய திருப்பதி தேவஸ்தானத்தின் உதவி பாதுகாப்பு அலுவலர் சதீஷ் குமார் இடையேயான சமரசத்தின் அடிப்படையில் 2023 செப்டம்ரம் மாதம் ரவிக்குமாரை விடுதலை செய்து அந்த வழக்கை முடித்து வைத்தது.

ஆனால், திருப்பதியைச் சேர்ந்த பத்திரிகையாளர் மாச்செர்லா ஸ்ரீனிவாஸ் நீதிமன்றத்தில் ரிட் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதன் அடிப்படையில், ஆந்திரப் பிரதேச உயர் நீதிமன்றம் அக்டோபர் மாதம் இந்த வழக்கை மீண்டும் விசாரிக்க சிஐடி மற்றும் ஆந்திரா கிரைம் பிரான்ச் அமைப்புகளுக்கு உத்தரவிட்டது.
தங்களது விசாரணை முடிவுகளை டிசம்பர் 2-ம் தேதிக்குள் மூடிய கவரில் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டது. இந்த வழக்கின் முக்கிய புகார்தாரரும், தேவஸ்தானத்தின் உதவி பாதுகாப்பு அலுவலருமான சதீஷ் குமார், 2023 நவம்பர் 10 அன்று மர்மமான முறையில் சடலமாக மீட்கப்பட்டார். அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் எனக் காவல்துறை முதற்கட்ட தகவலில் தெரிவித்திருக்கிறது.
இதற்கிடையில், விசாரணை அமைப்புகளும் தங்கள் விசாரணை முடிவுகளை டிசம்பர் 2 அன்று உயர் நீதிமன்றத்தில் மூடிய கவர்களில் சமர்ப்பித்தன. இந்த வழக்கின் அடுத்த விசாரணை டிசம்பர் 9-ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ரவிக்குமார் வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில், ``கடந்த 2023 ஆம் ஆண்டு திருப்பதி ஏழுமலையான் கோயில் உண்டியல் காணிக்கையில் ரூ. 100 கோடியை திருடியது உண்மைதான். நீதிமன்றம் எத்தகைய ஆய்வுக்கு உத்தரவிட்டாலும் அதற்கு நான் முழு ஒத்துழைப்பு தருவேன். என்னை மேலும் துன்புறுத்தாதீர்கள். நானும் என் குடும்பத்தினரும் கடும் மன உளைச்சலில் இருக்கிறோம்.
எனது தவறை உணர்ந்து நான் கேபிள் தொழிலும் ரியல் எஸ்டேட் வியாபாரமும் செய்து சம்பாதித்த மொத்த சொத்தில் 90 சதவீத சொத்துகளை தேவஸ்தானத்திற்கு எனது குடும்பத்தினர் சம்மதத்துடன் எழுதி வைத்து விட்டேன். நான் முழு மனதுடன் சுவாமிக்கு எழுதி கொடுத்தேன்.
நான் மிகப் பெரிய பாவம் செய்ததை நினைத்தும் எனது மனைவி, பிள்ளைகள் படும் துயரத்தை நினைத்தும் நான் கவலைப்படாத நாளே இல்லை. வேறு சிலருக்கு நான் பணம் கொடுத்ததாகவும் வேறு வகைகளில் எதையோ கொடுத்ததாகவும் கூறும் தகவல்களில் உண்மையில்லை.
அது போல் காணிக்கை பணத்தை திருட அந்தரங்க பகுதியில் அறுவை சிகிச்சை செய்து கொண்டேன் என பரவும் தகவலிலும் உண்மை இல்லை. இந்தக் குற்றச்சாட்டுகள் முற்றிலும் பொய்யானவை என்பதை நிரூபிக்க எந்த மருத்துவப் பரிசோதனைக்கும் நான் தயாராக இருக்கிறேன்" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.



















