"அன்புமணிக்கும், பாமக-வுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என உறுதியாகிவிட்டது" - எம்...
நெல்லை: `லஞ்ச புகாரில் சிக்கவைக்க சதி' - அலுவலகத்தில் பணம் வைத்தவர் கைது; விசாரணையில் அதிர்ச்சி
நெல்லை என்.ஜி.ஓ காலனியில் தீயணைப்புத்துறை மண்டலம் இயங்கி வருகிறது. இங்கு துணை இயக்குனராக சரவண பாபு பணிபுரிந்து வருகிறார். கடந்த மாதம் 18-ம் தேதி லஞ்ச ஒழிப்பு போலீஸார் இந்த அலுவலகத்தில் திடீர் சோதனை நடத்தினர்.
அப்போது துணை இயக்குனரின் அறையிலுள்ள அலமாரியில் இருந்து ரூ.2.22 லட்சம் மற்றும் அவரது கார் ஓட்டுநர் செந்தில்குமாரிடம் இருந்து ரூ.27,400 கைப்பற்றப்பட்டது. இதுதொடர்பாக சரவண பாபு மற்றும் செந்தில்குமார் ஆகியோருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்த சம்பவத்திற்குப் பிறகு, லஞ்ச ஒழிப்பு சோதனைக்கு முன் நள்ளிரவில் மர்மநபர் ஒருவர் பைக்கில் வந்து, கையில் பையுடன் துணை இயக்குனர் அலுவலகத்திற்குள் செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
துறை சார்ந்தவர்களே பழிவாங்கும் நோக்கில் இந்த சதிச்செயலில் ஈடுபட்டிருக்கலாம் என சந்தேகித்த சரவண பாபு இதுகுறித்து நெல்லை மாநகர காவல் ஆணையாளர் சந்தோஷ் ஹதிமாணியிடம் புகார் அளித்தார்.
அந்த புகாரின் அடிப்படையில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதில், தூத்துக்குடி மாவட்ட தீயணைப்பு அலுவலகத்தில் பணியாற்றும் ஏரல் பகுதியைச் சேர்ந்த ஆனந்த் என்பவருக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்தது.
இதனையடுத்து ஆனந்த் மற்றும் அவருக்கு உதவியாக இருந்த அவரது உறவினரான சுடலை ஆகியோரை கடந்த 26-ம் தேதி போலீஸார் கைது செய்தனர்.
ஆனந்த் மீது துறை சார்ந்த நடவடிக்கையாக அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இந்த லஞ்ச புகார் துணை இயக்குனருக்கு எதிரான சதிச்செயல் என்பது தெரிய வந்தது.

இச்சம்பவம் தமிழக தீயணைப்புத் துறையையே உலுக்கியது. இதற்கிடையில் துணை இயக்குனர் அலுவலகத்திற்குள் நுழைந்த பணத்தை வைத்த அந்த நபர் யார் என்பது குறித்து தனிப்படை போலீஸார் தீவிரமாக தேடி வந்தனர்.
விசாரணையில் அந்த நபர் வெளிமாநிலத்திற்கு தப்பிச் சென்றது தெரிய வந்தது. அவரது செல்போன் சிக்னலை வைத்து கண்காணித்த போது, அவர் மும்பை-தாராவியில் பதுங்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
மும்பைக்கு விரைந்த தனிப்படை போலீஸார், தாராவியில் பதுங்கியிருந்த நெல்லை மேலப்பாளையத்தைச் சேர்ந்த விஜய் என்பவரை சுற்றிவளைத்து கைது செய்து நெல்லைக்கு அழைத்து வந்தனர்.
போலீஸாரின் விசாரணையில், “துணை இயக்குனர் அலுவலகத்திற்குள் பணத்தை வைப்பதற்காக எனக்கு ரூ.50 ஆயிரம் பேரம் பேசப்பட்டது. அதில் ரூ.40 ஆயிரம் எனது வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டது” என கூறி தவறை ஒப்புக்கொண்டார்.

விஜய்க்கு அலுவலகத்தின் சாவி எப்படி கிடைத்தது? இந்த சதித்திட்டத்தில் வேறு யாரெல்லாம் தொடர்பு உள்ளனர்? என்பது குறித்தும் போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தீயணைப்பு வீரர் ஆனந்தை போலீஸார் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆனந்த் விசாரணையில் கூறும் தகவல்களின் அடிப்படையில் மேலும் பலர் சிக்க வாய்ப்பு இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது.



















