செய்திகள் :

நீட் போராட்டத்தில் போலீஸாரின் செயல்: `சட்டம் தன் கடமையைச் செய்யும்' - அதிரடி காட்டிய உச்ச நீதிமன்றம்

post image

நீட் தேர்வு வினாத்தாள் கசிவைக் கண்டித்து நாடு தழுவிய அளவில் நடந்த மாணவர்கள் போராட்டத்தின் போது, காவல்துறையினர் மிதமிஞ்சிய பலத்தைப் பயன்படுத்தியதாகத் தொடரப்பட்ட வழக்கில், உச்ச நீதிமன்றம் மிக முக்கிய இடைக்கால உத்தரவுகளைப் பிறப்பித்து அதிரடி காட்டியுள்ளது.

தலைமை நீதிபதி சூர்யா காந்த் தலைமையிலான அமர்வில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, "அரசியலமைப்புச் சட்டத்தின்படி அமைதியான வழியில் போராட மாணவர்களுக்கு முழு உரிமை உள்ளது" என்பதை நீதிபதிகள் ஆணித்தரமாகச் சுட்டிக்காட்டினர்.

அத்துடன், மாணவர்கள் மீது நடத்தப்பட்ட அத்துமீறல்கள் மற்றும் காவல்துறையினர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் குறித்து முழுமையாக விசாரிக்க, உச்ச நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற தலைமை நீதிபதி தலைமையில் சிறப்பு விசாரணைக் குழு (SIT) அமைப்பது குறித்து பரிசீலிக்கப்படும் என்றும் அமர்வு தெரிவித்தது.

டெல்லி ஜந்தர் மந்தர், பீகார், மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம் மற்றும் மேற்கு வங்கம் உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளில், போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது தடிஅடி, பெல்லட் துப்பாக்கிகள் மற்றும் எலக்ட்ரிக் லத்திகளைப் பயன்படுத்தித் தாக்குதல் நடத்தியதாகக் கூறி ஏராளமான மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

மனுக்களை விசாரித்த தலைமை நீதிபதி சூர்யா காந்த், "காவல்துறை நடத்திய பெல்லட் குண்டு வீச்சில் இளைஞர் ஒருவரின் உடல் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கிறது. மற்றொருபுறம் உயிருக்கே பேராபத்தை ஏற்படுத்தக்கூடிய மின்சார லத்திகளைக் கொண்டு தாக்கியிருக்கிறார்கள். ஒரு மூத்த காவல்துறை அதிகாரி, இளம் பெண் என்றும் பாராமல் கன்னத்தில் அறைகிறார். சில இடங்களில் பெண்களிடம் காவல்துறையினர் அத்துமீறியும் நடந்து கொண்டுள்ளனர்.

இத்தனைக்கும் மாணவர்கள் மிகவும் அமைதியான முறையில்தான் போராடியிருக்கிறார்கள்! அப்படிப்பட்ட அமைதியான போராட்டத்திற்குப் பாதுகாப்பு அளிக்க வேண்டிய காவல்துறையினரே, அவர்களைக் கொடூரமாகத் தாக்கியிருப்பது ஏன்? எனவே, இந்த விவகாரத்தில் ஒரு சுதந்திரமான தனி அமைப்பின் மூலம் ஏன் விசாரணை நடத்தக் கூடாது?" என்று மிகவும் காரசாரமாகக் கேள்வி எழுப்பினார்.

மனுதாரர்கள் சார்பில் நீதிமன்றத்தில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கோபால் சங்கரநாராயணன் தனது காரசாரமான வாதங்களை முன்வைத்தார். "இந்த அத்துமீறல்கள் ஏதோ ஒரு இடத்தில் மட்டும் நடக்கவில்லை; நாடு முழுவதிலும் நடந்துள்ளது. பீகார், மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கம் எனப் பல மாநிலங்களில் மாணவர்களுக்கு எதிராகக் காவல்துறையினர் தங்களின் அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்துள்ளனர்.

கூட்டத்தைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக ஏற்கனவே தெளிவான வழிகாட்டு நெறிமுறைகள் உள்ளபோதிலும், அவற்றை அதிகாரிகள் முற்றிலுமாகப் புறக்கணித்துள்ளனர். பல காவல் அதிகாரிகள் சீருடைகளும், அடையாளப் பேஜ்களும் இல்லாமலேயே தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் உண்மையிலேயே காவல்துறையினர்தானா என்ற பலத்த சந்தேகமே எழுகிறது!

உச்சநீதிமன்றம்

பொதுமக்கள் சட்டத்தைக் கையில் எடுக்கக் கூடாது என்பது எந்த அளவிற்கு முக்கியமோ, அதே விதிமுறைகள் காவல்துறையினருக்கும் பொருந்தும்! எனவே, வரம்பு மீறிச் செயல்பட்ட அதிகாரிகள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இந்த விவகாரத்தில் தனி விசாரணை நடத்தப்பட வேண்டும்; ஆனால், அந்த விசாரணைக்கு ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஒருவர் மட்டுமே தலைமை தாங்க வேண்டும்" என்று அவர் வலியுறுத்தினார்.

மனுதாரர் தரப்பின் மற்றொரு மூத்த வழக்கறிஞரான ஷியாம் திவான் வாதிடுகையில், "நாட்டின் பல்வேறு இடங்களில் இளைஞர்களைக் காவல்துறையினர் அச்சுறுத்தும் பாணியில் நடந்து கொண்டுள்ளனர். குறிப்பாக மும்பையில், இளைஞர் ஒருவர் மீது போலி போதைப்பொருள் வழக்குப்பதிவு செய்து வாழ்க்கையை சீரழித்து விடுவதாக அதிகாரி ஒருவர் மிரட்டியுள்ளார்!

பீகார் மாநிலத்தில் இன்னும் ஒருபடி மேலே சென்று, ஏகே-47 (AK-47) ரகத் துப்பாக்கிகளைப் பயன்படுத்தியுள்ளனர். 13 வயதேயான சிறுவனைக் கூட விட்டுவைக்காமல் சிறையில் அடைத்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களை 40 மணி நேரத்திற்குப் பிறகே நீதிபதி முன் ஆஜர்படுத்தியுள்ளனர். இது அப்பட்டமான சட்ட மீறல்!

பீகார்: காவலர் கையில் AK-47
பீகார்: காவலர் கையில் AK-47

அதுமட்டுமின்றி, போராட்டக்களத்திற்குச் சென்ற வழக்கறிஞர்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. யாருடைய அறிவுறுத்தலையும் கேட்கும் நிதானமான மனநிலையில் டெல்லி காவல்துறை இல்லை" என்று பகிரங்கமாகக் குற்றம்சாட்டினார்.

மேலும், அமைதி வழியில் போராடிய பெண் போராட்டக்காரரை மூத்த அதிகாரி ஒருவர் கன்னத்தில் அறைந்த சம்பவத்தையும், டெல்லியில் போராட்டம் முடிந்து திரும்பிக்கொண்டிருந்த மாணவர்களை வழக்கறிஞர்கள் முன்னிலையிலேயே காவல்துறையினர் விரட்டி விரட்டித் தாக்கிய கொடூரத்தையும் வழக்கறிஞர்கள் அமர்வின் கவனத்திற்குக் கொண்டு வந்தனர்.

இந்தக் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளித்து மத்திய அரசின் சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா வாதிட்டார்: "போராட்டத்தில் பங்கேற்ற மாணவர்கள் எந்த வன்முறையிலும் ஈடுபடவில்லை. ஆனால், இந்த போராட்டத்தை முதலீடாக வைத்து உள்ளே புகுந்த குற்றப்பின்னணி கொண்ட சமூக விரோதிகளும், பாலியல் குற்றங்கள் மற்றும் போதைப்பொருள் வழக்குகளில் தொடர்புடையவர்களுமே வன்முறையைத் தூண்டிவிட்டனர்" என்று சுட்டிக்காட்டினார்.

தொடர்ந்து பேசிய அவர், "இந்தச் சம்பவங்களில் 250-க்கும் மேற்பட்ட காவல் துறையினர் படுகாயமடைந்துள்ளனர். காவல்துறையின் மனஉறுதியைக் குலைக்கும் வகையில் எந்த உத்தரவும் அமைந்துவிடக் கூடாது. இந்த விவகாரத்தில் உண்மையைக் கண்டறிய அரசே முன்வந்து அனைத்துத் தரவுகளையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யும்" எனத் தெரிவித்தார்.

உச்சநீதிமன்றம்

அனைத்துத் தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், வழக்கில் பல முக்கிய உத்தரவுகளைப் பிறப்பித்தனர். உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ள முக்கிய உத்தரவுகள் இதோ:

சம்பவம் நடந்த பகுதிகளில் பதிவான அனைத்து சிசிடிவி (CCTV) காட்சிகள், ட்ரோன் (Drone) வீடியோக்கள், பாடி கேமரா (Body Camera) பதிவுகள் மற்றும் பிசிஆர் (PCR) அழைப்பு விவரங்களை எவ்விதச் சேதமுமின்றிப் பாதுகாக்க வேண்டும்.

போராட்டத்தில் பங்கேற்ற மாணவர்களின் புகைப்படங்கள், முகவரி உள்ளிட்ட தனிநபர் விவரங்கள் மற்றும் டிஜிட்டல் தரவுகளைப் பொதுவெளியில் கசியவிடக் கூடாது.

குற்றப்பின்னணி எதுவும் இல்லாத மாணவர்கள் மீது எவ்விதக் கடுமையான நடவடிக்கையோ அல்லது பழிவாங்கும் நடவடிக்கையோ எடுக்கப்படக் கூடாது.

பீகார் உள்ளிட்ட அனைத்து மாநிலங்களிலும் காவலில் அடைக்கப்பட்டுள்ள 18 வயதிற்குட்பட்ட சிறுவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்.

டெல்லி, மகாராஷ்டிரா, பீகார், கேரளா, மத்தியப் பிரதேசம் மற்றும் உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களின் தலைமைச் செயலாளர்களுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.

இறுதியாக, "ஜனநாயக நாட்டில் போராட்டம் நடத்துவதற்கான உரிமை அரசியலமைப்பால் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது. காவல்துறை தனது வரம்பை மீறிச் செயல்பட்டிருந்தால், சட்டம் தன் கடமையைச் செய்யும்" என தலைமை நீதிபதி திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

அனைத்து மாநில அரசுகளின் அறிக்கைகளும் வரப்பெற்ற பிறகு, ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையில் உயர்மட்ட விசாரணைக் குழு அமைப்பது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என்று கூறி, வழக்கை வரும் திங்கட்கிழமைக்கு ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம்.!

கரப்பான் பூச்சி: ``என் பேச்சு தவறாகத் திரிக்கப்பட்டுவிட்டது" - தலைமை நீதிபதி சூர்யா காந்த் விளக்கம்

நீட் வினாத்தாள் கசிவு, அரசுத் தேர்வுகள் குளறுபடி உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து, டெல்லி ஜந்தர் மந்தரில் காக்ரோச் ஜனதா கட்சி (சிஜேபி) தலைமையிலான இளைஞர் போராட்டம் நடந்தது.போராட்டம் தீவிரமட... மேலும் பார்க்க

"எங்கள் நேரத்தை வீணாக்காதீர்கள்!" - டெல்லி தடியடி வழக்கை அவசரமாக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

நீட் (NEET) தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரம் தொடர்பாக மத்திய கல்வி அமைச்சர் பதவி விலக வலியுறுத்தி, இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் தொடர் பேரணி நடத்தினர். இதனால் கடந்த சில நாள்களாக டெல்லியே ஸ்தம்பித்துப் ப... மேலும் பார்க்க

'கிராம மயானத்தை வேறு உள்ளாட்சியைச் சேர்ந்தவர்கள் உரிமை கோர முடியாது' - உயர்நீதிமன்றம் உத்தரவு

தேனி பொம்மையகவுண்டன்பட்டியைச் சேர்ந்த அன்பழகன், தவராஜா, ரகுநாதன் ஆகியோர், மதுரை உயர்நீதிமன்ற அமர்வில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தனர்.அதில். “எங்கள் கிராமத்தில் இறந்து போனவர்களின் உடல்களை சுக்குவாடன்... மேலும் பார்க்க

தமிழகத்தில் நவோதயா பள்ளிகள்: `புதிய அரசின் நிலைப்பாடு என்ன?' - உச்ச நீதிமன்றம் | விசாரணை முழு விவரம்

தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஜவஹர் நவோதயா வித்யாலயா பள்ளியை நிறுவ தமிழக அரசுக்கு உத்தரவிட கோரி குமாரி மகா சபா என்ற அமைப்பு தாக்கல் செய்த மனுவை விசாரித்து சென்னை உயர் நீதிமன்றம், ஒவ்வொரு மாவட்டத்... மேலும் பார்க்க

எ.வ.வேலு விவகாரம் : `நீங்க ஆளுங்கட்சியாக இருந்தபோதும் இதை தானே.!' - நீதிபதிகள் சுவாரஸ்ய கமெண்ட்

தமிழ்நாட்டில் கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் ஒருங்கிணைந்த சாலை உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், 5,000 கோடி ரூபாய் மதிப்பில் சாலைகளை மேம்படுத்தும் பணிகளில் முறைகேடு நடந்ததாக எழுந்த புகாரில்,... மேலும் பார்க்க

தமிழகப் பசு வதைத் தடை விவகாரம் – சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை!

தமிழகத்தில் பெரும் அரசியல் மற்றும் சமூக விவாதங்களை ஏற்படுத்தியிருந்த பசு வதைத் தடை விவகாரத்தில், தற்பொழுது உச்ச நீதிமன்றம் அதிரடியான உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.பக்ரீத் பண்டிகை உள்ளிட்ட எந்தவொரு நா... மேலும் பார்க்க