Jana Nayagan release ஆவதில் சிக்கல், நீதிமன்றத்தில் இன்று நடந்தது என்ன? | PMK | ...
"மாணிக்கம் தாக்கூர் சொன்னது அவருடைய சொந்தக் கருத்து; திமுக-வைத் தவிர..." - செல்வப்பெருந்தகை
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில் பேரணி, பிரசாரம், பொதுக்கூட்டம், தொகுதிப் பங்கீடு, கூட்டணி குறித்த பேச்சுவார்த்தைகளை கட்சிகள் தொடங்கிவிட்டன.
இதனிடையே தமிழ்நாட்டில் திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையிலான கூட்டணியில் கருத்து வேறுபாடு எழுந்துள்ளதாகத் தொடர்ந்து பேசப்பட்டு வருகிறது.

தவெக தலைவர் விஜய்யுடன் காங்கிரஸ் நிர்வாகி பிரவீன் சக்ரவர்த்தி சந்திப்பு நடத்தினார். அதேபோல காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாக்கூர், "அதிகாரம் மட்டும் அல்ல – அதிகாரப் பகிர்வையும் விவாதிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது" என்று பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில் இன்று (ஜன.6) சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த செல்வப்பெருந்தகை காங்கிரஸ் கூட்டணி குறித்துப் பேசியிருக்கிறார்.
"இந்திய கூட்டணி வலிமையாக இருக்கிறது. இதை அசைத்துப் பார்ப்பதற்கு முயற்சிகள் நடக்கின்றன. ஆனால் யாராலும் அசைக்க முடியாது.
ஒவ்வொருவரும் கருத்து சொல்வதற்கு கருத்துரிமை, பேச்சுரிமை, எழுத்துரிமை எல்லாம் இருக்கிறது.
நான் ஒரு தலைவராக இருந்துகொண்டு பொதுவெளியில் பேச முடியாது. சீட் வேண்டும், நினைப்பது கிடைக்க வேண்டும் என்றால் கேட்க வேண்டியவர்களிடம் கேட்க வேண்டும். மீடியா முன்பு கேட்டால் கிடைக்குமா?
மாணிக்கம் தாக்கூர் எங்கள் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர். அதிகாரப் பகிர்வு தொடர்பாக அவருடைய கருத்தை அவர் சொல்லியிருக்கிறார்.

எங்களைப் பொறுத்தவரை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைமை தெளிவாக இருக்கிறது.
நாங்கள் தி.மு.க-வைத் தவிர எந்தக் கட்சியுடனும் கூட்டணி பேசவில்லை. ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, ஸ்டாலின் ஆகியோர் கூட்டணி குறித்துப் பார்த்துக்கொள்வார்கள்.
திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்குத் தேவையான இடங்களை நாகரிகமாகக் கேட்டுப் பெறுவோம்" என்று தெரிவித்திருக்கிறார்.


















