``அந்தப் பாடல் என்னை விடாமல் துரத்திக்கொண்டே இருக்கிறது'' - `ஒய் திஸ் கொலவெறி' க...
"அமெரிக்க அதிரபரையே எதிர்க்கும் துணிவு கொண்டவர் மோடி" - நயினார் நாகேந்திரன்
நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக பா.ஜ.க மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், “தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறை, குற்றச்சம்பவங்கள் அதிகரித்துள்ளது. இதனை காவல்துறை கட்டுப்படுத்த வேண்டும். கோவையில் நடந்த விவசாயிகள் மாநாட்டில் பிரதமர் மோடி, ரூ.18 ஆயிரம் கோடியை விவசாயிகளுக்கு வழங்கியுள்ளார். இருப்பினும் பிரதமர் மீது குறை கூறுவது ஏற்புடையதல்ல.

கோவை, மதுரை நகரங்களுக்கான மெட்ரோ ரயில் திட்டத்தை மத்திய அரசு நிராகரிக்கவில்லை. அந்த திட்டத்தை மறு ஆய்வு செய்து விரிவாக அனுப்பக்கோரியுள்ளது. ஆனால், அந்தத்திட்டம் குறித்து தவறாக பரப்புரை செய்யப்பட்டு வருகிறது. கோவை ரயில் நிலையத்திற்கும் பேருந்து நிலையத்திற்கும் உள்ள இடைப்பட்ட தூரம் குறைவாக உள்ளது. மெட்ரோ ரயில்திட்டத்தை அமைப்பதற்கு குறைந்தபட்ச தூரம் இருக்க வேண்டும் என மத்திய அரசு கூறியுள்ளது.
ஆனால், அந்த திட்டத்தை நிராகரித்ததாகக்கூறி கோவைக்கு வந்த பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றது. இது பொதுமக்களை ஏமாற்றும் வேலையாக உள்ளது. அமெரிக்க அதிரபரையே எதிர்க்கும் துணிவு கொண்டவர் மோடி. தூத்துக்குடி விமான நிலைய விரிவாக்கம், பல்வேறு சாலைகள் விஸ்தரிப்பு, அனைத்து கிராமங்களுக்கான ஜல் ஜீவன் குடிநீர் திட்டம், ரேசன் கடைகளில் இலவச அரிசி பல நலத்திட்டங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

வரும் 2026-ல் தமிழகத்தில் மெட்ரோ ரயில் திட்டத்தை நாங்கள் செயல்படுத்துவோம்” என்றார். அவரிடம், நெல் கொள்முதல் ஈரப்பதத்தை 22 சதவீதமாக அதிகரிக்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் முன் வைத்த கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்தது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. ஆனால், இதற்கு பதில் கூறாமல் பின்னர் பார்க்கலாம் என மழுப்பலாக பதில் கூறி கிளம்பிச் சென்றார்.













