தூத்துக்குடி: `தவறுதலாக விடுவிக்கப்பட்ட சிறைக்கைதி; மறுநாளே மீண்டும் கைது!' - தவ...
``அரசின் முன்னேற்பாட்டால் மழை பாதிப்பு இல்லை, பாசன நீர் உறுதி'' - அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்
விருதுநகர் மாவட்டம் பிளவக்கல் பெரியாறு மற்றும் கோவிலாறு அணைகளில் இருந்து தண்ணீரை, மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா தலைமையில், வருவாய்த்துறை அமைச்சர் கே. கே. எஸ். எஸ். ஆர். இராமச்சந்திரன் திறந்து வைத்தார்.
வத்திராயிருப்பு மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள பிளவக்கல் அணை மூலம் 17 வருவாய்க் கிராமங்களில் உள்ள 40 கண்மாய்கள் நிரம்பி, 7,219 ஏக்கர் விவசாய நிலங்களும், பெரியாறு பிரதானக் கால்வாய் மூலம் 960 ஏக்கர் விவசாய நிலங்களும் பாசன வசதி பெறுகின்றன.

இந்த நிலையில், நீர்ப் பிடிப்பு பகுதிகளில் பெய்த தொடர்மழையால் 47.56 அடி உயரம் கொண்ட பிளவக்கல் பெரியாறு அணை கடந்த மாதம் 20-ஆம் தேதி 41 அடியை தாண்டியது.
இதையடுத்து, அணையிலிருந்து வினாடிக்கு 500 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டது. பின்னர், அணைக்கு நீர்வரத்து குறைந்ததால் நீர் திறப்பு நிறுத்தப்பட்டது.
இந்நிலையில், கடந்த 2 நாள்களாக பெய்த மழையால் மீண்டும் அணையின் நீர்மட்டம் 41 அடியை தாண்டியது.
இதையடுத்து, முதல்போக சாகுபடிக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, தண்ணீர் திறந்த பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கே. கே. எஸ். எஸ். ஆர். இராமச்சந்திரன் கூறுகையில்,
விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று பிளவக்கல் திட்டத்தில் பாசன வசதி பெறும் கண்மாய்களுக்கு வினாடிக்கு 150 கனஅடி வீதம் இன்று முதல் 7 நாட்களுக்கு, பெரியார் கால்வாய் நேரடி பாசனத்திற்கு வினாடிக்கு 3 கனஅடி வீதம் இன்று முதல் 28.02.2026 வரை தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளதையடுத்து அணை திறக்கப்பட்டதாகவும்,
அணைக்கு அருகில் உள்ள பூங்காவை சீரமைக்க ஏற்கனவே ரூ. 10 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு, அடுத்த மாதம் டெண்டர் விட உள்ளதாகவும் தெரிவித்தார்.

நவீன வசதிகளுடன் இந்த பூங்கா பராமரிக்கப்பட்டு விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என்றும், 3 மாதங்கள் தொடரும் வடகிழக்கு பருவமழையால் தற்போது வரை தமிழகத்தில் எந்தப் பாதிப்பும் ஏற்படாத வகையில் அரசு சிறப்பான முன்னேற்பாடுகளை செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும், SIR (எஸ்.ஐ.ஆர்)-ல் குளறுபடிகள் உள்ளதாகவும், மத்திய அரசும் தேர்தல் கமிஷனும் சேர்ந்து இதைச் செய்வதாகவும் நாம் சொல்வதை அவர்கள் காதில் வாங்கக்கூடிய அளவுக்கு அவர்கள் இல்லை எனவும், அவர்கள் போக்கிலேயே போகிறார்கள்; நாம் முடிந்த அளவுக்கு வாக்காளர்களை சேர்க்க வேண்டும் என்ற எண்ணத்தில் பணிகளை செய்து வருகிறோம் எனவும் அவர் தெரிவித்தார்.




















