`என் மகள் இறந்த மாதிரியே, நானும் சாகப் போகிறேன்!’ - ஆட்டோ ஓட்டுநரின் விபரீத முடி...
`இணையுடன் சண்டை; மனிதனைப் போலவே கோபித்துக் கொள்ளும் ஆண் கொரில்லா' - இணையத்தை கவர்ந்த வீடியோ
விளையாட்டாகவோ அல்லது கோபமாகவோ சண்டை போட்டுக் கொண்ட பிறகு மனிதர்கள் எப்படி முகத்தைத் திருப்பிக் கொண்டு அமர்ந்திருப்பார்களோ, அதேபோல் ஒரு கொரில்லா செய்திருக்கும் சுவாரசியமான செயல் இப்போது இணையவாசிகளைப் பெரிதும் கவர்ந்து வருகிறது.
மனிதர்களின் உணர்ச்சிகளுக்கும் விலங்குகளின் உணர்ச்சிகளுக்கும் பெரிய அளவில் வித்தியாசம் இல்லை என்பதை நிரூபிக்கும் வகையில், தனது துணையுடன் ஏற்பட்ட சண்டைக்குப் பிறகு ஒரு ஆண் கொரில்லா மனிதரைப் போலவே காட்டிய எதிர்வினை தற்பொழுது சமூக வலைத்தளங்களில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது.
ஜப்பானில் உள்ள உலகப் புகழ்பெற்ற ஹிகாஷியாமா மிருகக்காட்சிசாலையில் வசிக்கும் 'கியோமசா' என்ற கொரில்லாதான் தற்போது இணையத்தின் புதிய நட்சத்திரமாக மாறியுள்ளது.
Famous gorilla Kiyomasa falls into deep contemplation after spat with mate — caught on camera in Japanese zoo pic.twitter.com/uZhzYhs5Am
— RT (@RT_com) June 9, 2026
மிருகக்காட்சிசாலைக்கு வந்த பார்வையாளர் ஒருவர் எடுத்த இந்த வீடியோவில், கியோமசா தனது பெண் துணையுடன் ஏதோ ஒரு விஷயத்திற்காகக் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டு சண்டை போடுகிறது. சண்டை முடிந்த அடுத்த கணமே, மனிதர்கள் கோபித்துக் கொண்டு போவது போல, அது அங்கிருந்த ஒரு மரக்கட்டையின் மீது ஏறி அமர்ந்து கொள்கிறது.
பின்னர், தன் கைகளை நெஞ்சுக்குக் குறுக்காகக் கட்டிக் கொண்டு, முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டு, அனிமேஷன் படங்களில் வரும் கோபக்காரக் கதாபாத்திரங்களைப் போல அச்சு அசலாக மனித பாணியில் அமர்ந்திருக்கிறது.
இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்ட சில மணி நேரங்களிலேயே லட்சக்கணக்கான பார்வைகளையும் லைக்குகளையும் குவித்து வருகிறது. கியோமசாவின் இந்த மனிதத்தன்மையுள்ள கோப முகபாவனையைக் கண்ட நெட்டிசன்கள் பலரும் தங்களது கருத்துக்களை நகைச்சுவையாகப் பகிர்ந்து வருகின்றனர்.
"சண்டை என்று வந்துவிட்டால் மனிதர்களாக இருந்தாலும் கொரில்லாவாக இருந்தாலும் ஒரே மாதிரியாகத்தான் கோபித்துக் கொள்கிறார்கள்" என்று இணையவாசிகள் கமெண்ட் செய்து இந்த வீடியோவை வைரலாக்கி வருகின்றனர்.



















