``அன்று அயோத்தி ராமர் கோவில், இன்று திருப்பரங்குன்றம்; ஸ்டாலின் அரசே'' - பாஜக அன...
ஈரோடு: காதல் திருமணம்; தங்கையைக் கடத்திச் சென்ற அக்கா உள்ளிட்ட 5 பேர் கைது - விவரம் என்ன?
ஈரோடு மாவட்டம், எண்ணமங்கலத்தைச் சேர்ந்தவர் சேதுராஜ் (25). பெருந்துறை சிப்காட்டில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவரும், அந்தியூர் மேல்தெருவைச் சேர்ந்த மகாலட்சுமி என்பவரும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள். இவர்கள் காதல் இருவீட்டாருக்கும் தெரியவரவே, இரண்டு தரப்பிலும் எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து, கடந்த 5-ஆம் வீட்டை விட்டு வெளியேறிய சேதுராஜ் மற்றும் மகாலட்சுமி, நண்பர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டனர். பின்னர் அவர்கள் பாதுகாப்பு கேட்டு, ஈரோடு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தஞ்சமடைந்தனர்.
சேதுராஜின் பெற்றோர் திருமணத்தை ஏற்றுக்கொண்டனர். ஆனால், மாற்று சமூகம் என்பதால் மகாலட்சுமியின் பெற்றோர் திருமணத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. இதையடுத்து, மகாலட்சுமி தனது கணவர் சேதுராஜுடன் சென்றார். கணவன்-மனைவி இருவரும் பெருந்துறையில் வாடகை வீட்டில் வசித்து வந்தனர். இந்நிலையில், தனது தங்கை மகாலட்சுமியை பார்க்க பெருந்துறை வந்துள்ளதாக அவரது அக்கா கெளசல்யா கூறியுள்ளார். இதை நம்பி பெருந்துறை பேருந்து நிலையத்துக்கு சேதுராஜும், மகாலட்சுமியும் வந்துள்ளனர். அப்போது, அங்கு காரில் வந்த கெளசல்யா மற்றும் அவரது உறவினர்கள் சேதுராஜ் மற்றும் மகாலட்சுமியிடம் பேசியுள்ளனர். பின்னர் அவர்களுடன் அங்குள்ள உணவகத்தில் உணவு அருந்தினர். உணவகத்தை விட்டு வெளியே வந்தபோது திடீரென மகாலட்சுமியை கெளசல்யா மற்றும் அவரது உறவினர்கள் காரில் ஏற்றி கடத்திச் சென்றனர். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த கணவர் சேதுராஜ் பெருந்துறை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதன் பேரில் பெருந்துறை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில், கடத்தப்பட்ட மகாலட்சுமி சத்தியமங்கலத்தில் உள்ள உறவினர் வீட்டில் அடைத்து வைத்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து, பெருந்துறை போலீஸார் சத்தியமங்கலம் அன்னை இந்திரா நகருக்குச் சென்று, அங்கு லோகேஷ்வரன் என்பவரது வீட்டில் அடைத்து வைக்கப்பட்டிருந்த மகாலட்சுமியை மீட்டனர். மகாலட்சுமியை கடத்திச் சென்ற கோத்தகிரியைச் சேர்ந்த அவரது அக்கா கெளசல்யா (25), அவரது கணவர் சந்தோஷ் (26), கோத்தகிரியை அடுத்த தூக்கன்துறைச் சேர்ந்த சாதிக் (27), சத்தியமங்கலம் அன்னை இந்திரா நகரைச் சேர்ந்த லோகேஷ்வரன் (21), திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த தனபால் (45) ஆகிய 5 பேரையும் போலீஸார் கைது செய்தனர். சேதுராஜ் மாற்று சமூகம் என்பதால் உறவினர்கள் இந்த திருமணத்தை ஏற்றுக் கொள்ளவில்லை. அதனால், சேதுராஜிடம் இருந்து மகாலட்சுமியைப் பிரிப்பதற்காக அவரைக் கடத்திச் சென்றது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.








.jpg)









