மாதம்பட்டி ரங்கராஜ்: ``லவ் ல பேசுறாரா, மிரட்டலில் பேசுறாரா?'' - வீடியோ வெளியிட்ட...
ஓசூர்: மகளிர் விடுதி குளியல் அறையில் கேமரா; ஒடிசா பெண் கைது - வீடியோவை ஆண் நண்பனுக்கு அனுப்பினாரா?
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூருக்கு அருகேயுள்ள சூளகிரி தாலுகாவுக்குஉட்பட்ட கிராமமான உத்தனப்பள்ளியில், `டாடா எலெக்ட்ரானிக்ஸ்’ நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்கள் மற்றும் மின்னனு பாகங்கள் உற்பத்தி தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இங்குப் பணிபுரியும் பெண் தொழிலாளர்கள் தங்குவதற்காக அரசும், டாடா நிறுவனமும் இணைந்து, லாலிக்கல் கிராமத்தில் சுமார் இருபதாயிரம்பேர் தங்கும் வகையிலான `விடியல் ரெசிடென்சி’ கட்டிக் கொடுக்கப்பட்டிருக்கிறது.
அரசின் கட்டுப்பாட்டில் தான் இந்த விடுதி நிர்வாகம் செயல்பட்டு வருவதாகவும் சொல்லப்படுகிறது. இதனால், `இந்த விடுதி மிகவும் பாதுகாப்பானதாக இருக்கும்’ என்ற நம்பிக்கையில் பல்லாயிரக்கணக்கான பெண் தொழிலாளர்கள் அங்கு தங்கியிருக்கிறார்கள்.

இந்த நிலையில், அந்த பெண்களின் தனியுரிமை, கண்ணியம், பாதுகாப்பு ஆகியவற்றை பாதிக்கும் வகையிலான செயல்பாடுகள் நடந்திருப்பதாக வெளியாகியிருக்கும் தகவல், தமிழ்நாட்டையே அதிர வைத்திருக்கிறது. அதாவது, விடுதியின் எட்டாம் பிளாக்கில் இருக்கும் குளியல் அறைகளில் ரகசிய கேமரா பொருத்தப்பட்டிருந்ததாகவும், அதில் பதிவான காட்சிகள் வெளிநபர்களுக்கு விற்பனை செய்யப்பட்டிருப்பதாகவும்கூறி அங்கு பணிபுரியக்கூடிய பெண்களே விடிய, விடிய போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீஸ் அதிகாரிகளின் பேச்சுவார்த்தைக்குப் பிறகு, பெண்கள் தங்கள் அறைகளுக்கு திரும்பினர்.
இதையடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக உத்தனப்பள்ளி காவல் நிலையப் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, முதற்கட்டமாக பெண் பணியாளரான ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த நீலுகுமாரி குப்தா (வயது 22) என்பவரைக் கைது செய்திருக்கின்றனர். அவரிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விசாரணையில், இப்படி எடுக்கப்பட்ட வீடியோவை நீலுகுமாரி தனது ஆண் நண்பரான சந்தோஷ் என்கிற சதீஷ்குமாருக்கு பகிர்ந்ததாகவும் தகவல்கள் வருகின்றன. அவரைப் பிடிக்க கிருஷ்ணகிரி மாவட்ட தனிப்படை போலீஸாரும், பெங்களூருவுக்கு விரைந்திருக்கின்றனர்.

இதனிடையே, கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்.பி தங்கதுரை உத்தரவின்பேரில், பெண் போலீஸாரைக்கொண்ட 10 குழுவினர் ஒவ்வொரு அறையாக சென்று மெட்டல் டிடெக்டர் உதவியுடன் சோதனை நடத்தியிருக்கின்றனர். இது குறித்து, கிருஷ்ணகிரி எஸ்.பி தங்கதுரையிடம் கேட்டபோது, ``கைது செய்யப்பட்ட பெண்ணிடம் தீவிர விசாரணை நடத்தி வருகிறோம். அந்த மகளிர் விடுதிக்கு பெண் போலீஸாரைப் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தியிருக்கிறோம். தனிப்படை அமைத்தும், வெவ்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது. முழு விசாரணைக்குப் பிறகே தகவல்கள் தெரிவிக்கப்படும்’’ என்றார்.



















