Union Budget 2026: 27 ஆண்டுகளுக்குப் பிறகு ஞாயிறுக்கிழமையில்.! - 9வது முறையாக தா...
கடலூர்: காதலில் விழுந்த மருமகள்; கண்டித்த மாமனாரை பெட்ரோல் ஊற்றி எரித்த காதலன்
கடலூர் மாவட்டம் மாளிகம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த முந்திரி விவசாயியான ராஜேந்திரன், கடந்த 29-ம் தேதி இரவு அதே பகுதியைச் சேர்ந்த கந்தன் என்பவருடன் இருசக்கர வாகனத்தில் பண்ருட்டிக்கு சென்று கொண்டிருந்தார்.
அப்போது மாளிகம்பட்டு பிரதான சாலையில் ஒரு வேனில் வந்து அவர்களை வழிமறித்த ஒரு கும்பல், கந்தனை சரமாரியாக தாக்கியது. அவர்களின் தாக்குதலை சமாளிக்க முடியாமல் கந்தன் அங்கிருந்து ஓடினார்.
அதேபோல அங்கிருந்து தப்பிக்க முயற்சித்த ராஜேந்திரனை தாக்கிய அந்தக் கும்பல், அவர் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்துவிட்டு வேனில் தப்பிச் சென்றது. உடல் எரிந்த நிலையில் சாலையில் இங்குமங்கும் ஓடிய ராஜேந்திரன் ஒருகட்டத்தில் கீழே விழுந்தார்.

அவரது அலறல் சத்தம் கேட்டு அங்கு ஓடிவந்த அப்பகுதி மக்கள் படுகாயங்களுடன் மயங்கிக் கிடந்த அவரை மீட்டு, கடலூர் அரசு பொது மருத்துவமனையில் அனுமதித்தனர். அதையடுத்து சம்பவ இடத்திற்கு உடனே விரைந்த எஸ்.பி ஜெயக்குமார், அந்தப் பகுதியில் இருந்த சிசிடிவி கேமராக்களின் காட்சிகளை ஆய்வு செய்தார்.
அத்துடன் டி.எஸ்.பி ராஜா தலைமையில் நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணையை தொடங்கினார். இதற்கிடையில் பண்ருட்டி பகுதியையே அதிர வைத்த இந்த சம்பவம் குறித்து காடாம்புலியூர் போலீஸாரும் வழக்குப் பதிவு செய்து விசாரணையை தொடங்கினர்.
சி.சி.டி.வி காட்சிகளின் அடிப்படையில், வேனை ஓட்டி வந்தவர் சித்திரைச்சாவடி பகுதியைச் சேர்ந்த பார்த்திபன் என்பவரை போலீஸார் கண்டுபிடித்தனர்.
அவரை வளைத்துப் பிடித்த போலீஸார், அவர் கொடுத்த தகவலின் அடிப்படையில், ராஜேந்திரனை கொலை செய்ய முயற்சித்த பண்ருட்டி காமராஜர் நகர் மணிகண்டன், குபேந்திரன், மாளிகம்பட்டு ஜெயப்பிரியா உள்ளிட்ட மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.
இவர்களில் ஜெயப்பிரியா என்பவர் ராஜேந்திரனின் மருமகள் என்பதுதான் ஹைலைட். இந்த சம்பவம் குறித்து நம்மிடம் பேசிய காடாம்புலியூர் காவல் நிலையத்தின் விசாரணை அதிகாரிகள், ``ராஜேந்திரனின் மகன் பூபதியின் மனைவிதான் ஜெயப்பிரியா.
இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள். மூன்று ஆண்டுகளுக்கு முன்பு பூபதி உயிரிழந்துவிட்ட நிலையில், மாளிகம்பட்டில் மாமனார் ராஜேந்திரனின் வீட்டிற்கு எதிரில் குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்திருக்கிறார் ஜெயப்பிரியா.

டெய்லரிங் கற்றுக் கொள்வதற்காக ஜெயப்பிரியா தினமும் பண்ருட்டிக்கு சென்று வந்தபோது, பண்ருட்டி நகராட்சி ஊழியரான மணிகண்டன் என்பவருடன் நட்பு ஏற்பட்டிருக்கிறது. நாளடைவில் அந்த நட்பு காதலாக மாறிய நிலையில், இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்திருக்கின்றனர்.
அவர்களின் காதலைத் தெரிந்து கொண்ட ராஜேந்திரன், மருமகள் ஜெயப்பிரியாவை கண்டித்திருக்கிறார். அதில் மன உளைச்சலான ஜெயப்பிரியா மாமனார் ராஜேந்திரனை தீர்த்துக்கட்ட முடிவு செய்து, அந்தத் திட்டத்தை காதலன் மணிகண்டனிடம் கூறியிருக்கிறார்.
அதை ஏற்றுக் கொண்ட மணிகண்டன், தன்னுடைய நண்பர்கள் பார்த்திபன் மற்றும் குபேந்திரனிடம் கூறியிருக்கிறார். அவர்களும் பச்சைக் கொடி காட்டிவிட, திட்டத்தை அரங்கேற்றியிருக்கிறார்கள். ஆனால் எங்களிடம் சிக்கிக் கொண்டார்கள்" என்றனர்.















