ஒரே சதத்தில் சச்சின், ரோஹித்தின் சாதனை சமன்; கரியரின் 2-வது இன்னிங்ஸில் பட்டாஸாக...
கூட்டணி `டீல்’ - ராகுல் காந்தியை சந்தித்த சபரீசன்! திடீர் விசிட்டின் பின்னணி என்ன?
தமிழக சட்டசபைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில், பேரணி, பிரசாரம், பொதுக்கூட்டம் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தைகளை கட்சிகள் தொடங்கிவிட்டன.
தமிழக தேர்தல் களம் நான்கு முனை போட்டியாக அமைந்திருக்கிறது. திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, தவெக, நாம் தமிழர் கட்சி என கட்சிகள் தனித்தனியே வியூகங்களை வகுத்து வருகின்றனர்.
இந்நிலையில் திமுக உடன் கடந்த 2017 முதல் காங்கிரஸ், இடதுசாரிகள், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் தொடர்ந்து கைகோர்த்து தேர்தலை சந்தித்து வருகின்றன.

திமுக - காங்கிரஸ் கூட்டணி
இதில் கடந்த 2021-ம் ஆண்டு நடைப்பெற்ற சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ் 25 தொகுதிகளில் போட்டியிட்டு, 18 இடங்களில் வெற்றி பெற்றது.
அடுத்த ஆண்டு தமிழகத்தில் நடைபெறும் சட்டமன்றத் தேர்தலிலும் காங்கிரஸ் கட்சி திமுகவுடனேயே கூட்டணியில் தொடர விரும்புவதாக தெரிகிறது.
கூட்டணி குறித்து பேச 5 பேர் கொண்ட குழுவையும் காங்கிரஸ் அமைத்திருக்கிறது.
காங்கிரஸ் ஐவர் குழு!
அதில், அகில இந்திய காங்கிரஸ் தமிழக பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, அகில இந்திய செயலாளர்கள் சூரஜ் எம்.என். ஹெக்டே, நிவேதித் ஆல்வா, சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் ராஜேஷ்குமார் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
இந்தக் குழு, கடந்த டிசம்பர் 3 ஆம் தேதி முதல்வர் ஸ்டாலினை சந்தித்து பேச்சுவார்த்தையை தொடங்கினர். இந்த முறை 39 தொகுதிகளைக் காங்கிரஸுக்கு ஒதுக்கும்படி கேட்டதாகத் தகவல் வெளியானது. மற்ற கூட்டணி கட்சிகளையும் இந்த குழு தொடர்ந்து சந்தித்து பேச உள்ளதாகவும் சொல்லப்பட்டது.

விஜய்யை சந்தித்த பிரவீன் சக்கரவர்த்தி
இதனிடையே காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகியும், ராகுலுக்கு நெருக்கமான தலைவராக அறியப்படும் பிரவீன் சக்கரவர்த்தி, தவெக தலைவர் விஜய்யை சந்தித்து பேசியிருக்கிறார்.
2026 சட்டசபை தேர்தலில் கூட்டணி அமைப்பது தொடர்பாக இந்த சந்திப்பு இருக்கலாம் என்று கூறப்படுகிறது. மறைமுகமாக காங்கிரஸ், தவெகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதாகத் தகவலும் அரசியல் மட்டத்தில் கிசு கிசுக்கப்படுகிறது.
செல்வப்பெருந்தகை கருத்து!
இந்நிலையில் இன்று (டிச.6) நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் செல்வப்பெருந்தகையிடம் பிரவீன் சக்கரவர்த்தி தவெக தலைவர் விஜய்யை சந்தித்தது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு, "பிரவீன் சக்ரவர்த்தி விஜய்யை சந்தித்தது குறித்து எனக்கு தெரியாது. விஜய்யை சந்திக்க பிரவீன் சக்கரவர்த்திக்கு நாங்கள் அனுமதி தரவில்லை. இந்தியா கூட்டணி வலிமையானது, இதை உடைக்கவோ, சிதைக்கவோ யாராலும் முடியாது" என்று கூறியிருந்தார்.

ராகுல் காந்தி - சபரீசன் சந்திப்பு
காங்கிரஸ், தவெகவுடன் மறைமுக கூட்டணி பேச்சு வார்தையில் ஈடுபடுகிறது என்று பேச்சுகள் எழும் நிலையில் சமீபத்தில் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தியை, சபரீசன் டெல்லியில் நேரில் சந்தித்து திமுக- காங்கிரஸ் கூட்டணி குறித்து பேசியிருக்கிறார் என்ற தகவல் வெளியானது.
இது குறித்து நாம் விசாரித்தோம். திமுக காங்கிரஸ் கூட்டணிகளுக்கு நெருக்கமான சிலர், ``பீகார் தேர்தலுக்கு முன்பு வரை காங்கிரஸ் சில ஆப்ஷன்களை மனதில் வைத்திருந்தது தான். அதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் பீகார் தேர்தல் முடிவுகள், காங்கிரஸ் தரப்பை ரொம்பவே பாதித்துள்ளது. அதன் காரணமாக தமிழக தேர்தல் தொடர்பான பணிகளை வேகப்படுத்தியது. அதன் ஒரு பகுதியாக தான் குழு அமைத்து திமுக கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை தொடங்கி கூட்டணியை உறுதி செய்தது.
இதனிடையே தான் ராகுல் காந்திக்கு நெருக்கமானவராக அறியப்படும் பிரவீன் சக்கரவர்த்தி விஜயை சந்தித்து தமிழக அரசியல் மட்டத்தில் பேசுபொருளானது. இதனால், தமிழக அளவில் இருக்கும் காங்கிரஸ் நிர்வாகிகள் திமுக கூட்டணி விரும்புவதாகவும், டெல்லி காங்கிரஸ் மேலிடம் ஒரு புதிய கூட்டணியை எதிர்பார்ப்பதாகவும் கிசு கிசுக்கப்பட்டது.
ஆனால், சமீபத்தில் டெல்லி சென்ற சபரீசன் நேரடியாக ராகுல் காந்தியை சந்தித்து பேசினார். கூட்டணி விஷயத்தில் டெல்லி காங்கிரஸின் ஆப்ஷனும் திமுக தான் என்பதை இதன் மூலம் அவர்கள் தெளிவுப்படுத்தி இருக்கிறார்கள்” என்கிறார்கள்.

















