அதிமுக: "இபிஎஸ்-ஐ ஆஹா ஓஹோவென புகழ்ந்தவர்தானே செங்கோட்டையன்" - செல்லூர் ராஜு சாடல...
சாத்தூர்: அரசு அலுவலருக்குப் பினாமியாக 10 ஆண்டுகள் பணிபுரிந்த நபர் - எம்.எல்.ஏ ஆய்வில் அம்பலம்!
விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே உள்ள வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பஞ்சாயத்துகளில் நடைபெறும் பணிகள் குறித்து சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் மரு.ஏ.ஆர்.ஆர். ரகுராமன் வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது, ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்களின் வருகைப் பதிவேடு குறித்து ஊராட்சி ஒன்றிய அலுவலக மேனேஜரிடம் கேள்வி எழுப்பினார். அப்போது அரசு அலுவலர் அல்லாத சிவகாசி அருகே உள்ள விஸ்வநாதம் பகுதியைச் சேர்ந்த பாண்டி என்பவர் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஜூனியர் அசிஸ்டென்ட்டாக வேலை பார்த்திருப்பது ஆய்வில் தெரியவந்தது. இதையடுத்து, சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் அரசு ஊழியராக நியமனம் இல்லாமல் ஜூனியர் அசிஸ்டென்ட்டாக பாண்டி பணியாற்றிய விவரம் குறித்து அவரிடம் கேள்வி எழுப்பியபோது, அவர் முன்னுக்குப் பின் முரணாகப் பதில் அளித்தார்.

"பத்து ஆண்டுகளுக்கும் மேலாக ஒன்றிய அலுவலகத்தில் அரசு அலுவலரின் இடத்தில் அரசு அலுவலர் அல்லாத நபர் எவ்வாறு பணிபுரிய முடியும்? இதற்கு ஊராட்சி ஒன்றிய அலுவலர் உட்பட அரசு அலுவலர்கள் எப்படி ஒத்துழைக்க முடியும்?" என்று சட்டமன்ற உறுப்பினர் கடும் கேள்விகளை எழுப்பினார். விசாரணையில், பாண்டி என்பவர் ஊராட்சி ஒன்றிய செயற்பொறியாளருக்கு உதவியாகப் பணிபுரிந்து வருவதாகவும், அவரே இதுவரை ஊதியம் தருவதாகவும் தகவல் வெளியானது. அதாவது, அரசு அலுவலர் ஒருவருக்குப் பினாமியாக இந்த நபர் 10 ஆண்டுகளுக்கும் மேலாக அலுவலகத்தில் பணிபுரிந்து வந்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

இச்சம்பவம் குறித்து சட்டமன்ற உறுப்பினர் மரு.ஏ.ஆர்.ஆர். ரகுராமன் தனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளார். "இது அரசு நிர்வாகத்தில் நடக்கக்கூடாத கடுமையான முறைகேடு. ஒரு நியமன ஆணை கூட இல்லாமல் 10 ஆண்டுகள் பணிபுரிந்திருப்பது எப்படி சாத்தியம்? இது தொடர்பாக உடனடியாக விசாரணை நடத்தி, தொடர்புடைய அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று வலியுறுத்தினார். இந்த முறைகேடு தொடர்பாக மாவட்ட ஆட்சியருக்கும், ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகளுக்கும் சட்டமன்ற உறுப்பினர் புகார் அளித்துள்ளார். 10 ஆண்டுகளுக்கும் மேலாக அரசு ஊழியராக இல்லாத நபர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஜூனியர் அசிஸ்டென்ட்டாக வேலை பார்த்த இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.




















