என்னை இப்படி பார்க்கணும்னு அவர் ஆசைப்பட்டார்..! - Karthigaichelvan | KS | Disco ...
சென்னை: Trible Murder Case; மூன்று பேர் கைது - கொலைக்கான காரணம் தெரியாமல் திணறும் போலீஸ்
சென்னை அடையாறு இந்திரா நகர், 1வது அவென்யூவில் உள்ள பைக் ஷோரூம் அருகில் கிடந்த சாக்கு மூட்டையிலிருந்து ரத்தம் வழிவதாக அடையாறு போலீஸாருக்கு கடந்த 26-ம் தேதி தகவல் கிடைத்தது. உடனடியாக சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸார், சாக்கு மூட்டையைப் பிரித்து பார்த்தபோது அதில் தலையில் வெட்டு காயங்களுடன் இளைஞரின் சடலம் இருந்தது. உடனடியாக சடலத்தை பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து கொலை செய்யப்பட்ட இளைஞர் யார் என்று போலீஸார் விசாரித்தனர். விசாரணையில், கொலை செய்யப்பட்டவர், பீகார் மாநிலம், ஷேக்பூரா மாவட்டம், பத்தியாபரைச் சேர்ந்த கௌரவ்குமார் என்று தெரியவந்தது. மேலும், அவர் வேலைத் தேடி தன்னுடைய மனைவி முனிதா, 2 வயது மகனுடன் சென்னைக்கு வந்த தகவலும் கிடைத்தது.

இதையடுத்து கௌரவ்குமாரை கொலை செய்தது யாரென்று விசாரித்தபோது பீகார் மாநிலம், நாளந்தா மாவட்டம், அலிப்பூரைச் சேர்ந்த சத்யேந்தர் (எ) சந்தோஷ்குமார் (30) எனத் தெரியவந்தது. இவர், கோட்டூர்புரத்திலுள்ள Institute of Chemical Technology கல்லூரியில் செக்யூரிட்டியாக வேலை செய்வது தெரிந்தது.
உடனடியாக சத்யேந்தரைப் பிடித்து விசாரித்தபோது கௌரவ்குமார் மட்டுமல்ல அவரின் மனைவி, குழந்தையையும் கொலை செய்த தகவலைத் தெரிவித்தார். அதோடு இந்தக் கொலையில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த லலித் யாதவ் (40), பீகார் மாநிலம், பாட்னா மாவட்டம் பக்தியார்புரைச் சேர்ந்த விகாஷ் குமார் (24) ஆகியோருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. அதனால் மூன்று பேரையும் போலீஸார் கைது செய்தனர். அவர்களிடம் விசாரித்தபோது திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.
இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``பீகாரைச் சேர்ந்த கௌரவ்குமார் மனைவி, குழந்தையோடு வேலைத் தேடி சென்னை வந்திருக்கிறார். அப்போது அவருக்கு ஏற்கெனவே அறிமுகமான சத்யேந்தரிடம் வேலைக் கேட்டிருக்கிறார். 24-ம் தேதி கௌரவ்குமார், அவரின் குடும்பத்தினரை தான் வேலைப்பார்க்கும் இடத்திலேயே சத்யேந்தர் தங்க வைத்திருக்கிறார். சத்யேந்தர் வேலைப்பார்க்கும் கல்லூரியில் இரவு நேர செக்யூரிட்டியாக லலித்யாதவ் வேலைப்பார்த்து வருகிறார். இதையடுத்து 24-ம் தேதி இரவு சத்யேந்தர், லலித்யாதவ், இவர்களின் நண்பர் விகாஷ்குமார் ஆகியோர் கௌரவ்குமார் தங்கியிருந்த நான்காவது தளத்தில் மது அருந்தியிருக்கிறார்கள். அப்போது அவர்களுக்கிடையே ஏற்பட்ட தகராறில், சத்யேந்தர், லலித் யாதவ், விகாஷ்குமார் ஆகிய மூன்று பேரும் சேர்ந்து கௌரவ்குமார், அவரின் மனைவி , குழந்தை ஆகியோரை கை மற்றும் இரும்பு ராடால் தாக்கி கொலை செய்திருக்கிறார்கள்.

பின்னர் அன்று இரவே சடலங்களை, சாக்கு மூட்டைகளில் கட்டி வெவ்வேறு இடங்களில் வீசிச் சென்றிருக்கிறார்கள். இதில் கௌரவ்குமாரின் சடலம் சாலையில் கிடந்ததால் அதை வைத்து துப்பு துலக்கி கொலையாளிகளை கைது செய்திருக்கிறோம். குழந்தையின் சடலம் தரமணி ரயில்வே நிலைய பகுதியிலிருந்து மீட்டுள்ளோம். கௌரவ்குமாரின் மனைவி முனிதாவின் சடலத்தை பெருங்குடி குப்பை கிடங்கில் நிர்வாண நிலையில் கண்டுப்பிடித்திருக்கிறோம். வேலைத் தேடி வந்த கௌரவ்குமார், அவரின் குடும்பத்தினரை எதற்காக கொலை செய்தீர்கள் என கைதானவர்களிடம் விசாரித்தால் ஒவ்வொருவரும் ஒரு தகவல்களைக் கூறி குழப்புகிறார்கள். அதனால் கொலைக்கான காரணம் இதுவரை தெரியவில்லை. இந்த வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து, அதிகபட்ச தண்டனையைப் பெற்று கொடுக்கப்படும்" என்றனர்.
இந்த வழக்கில் கொலைக்கான காரணம் குறித்து மீடியாக்களில் சில தகவல்கள் வெளிவந்தன. ஆனால் அந்தத் தகவல்களில் உண்மையில்லை என போலீஸ் உயரதிகாரிகள் தெரிவிக்கின்றனர். கௌரவ்குமாரின் மனைவி பாலியல் தொல்லைக்குள்ளாகினாரா என்ற கேள்விக்கு பதிலளித்த உயரதிகாரிகள், அவரின் சடலம் கிடைத்து பிரேத பரிசோதனை ரிப்போர்ட் கிடைத்த பிறகே பாலியல் குற்றச்சாட்டை உறுதிப்படுத்த முடியும் என தெரிவித்தனர்.
எனவே கௌரவ்குமார், அவரின் குடும்பத்தினர் கொலைக்கு இதுவரை காரணம் தெரியவில்லை. இந்த கொலை வழக்கில் எந்தவித முடிவுக்கும் வர முடியாமல் போலீஸார் திணறிக் கொண்டிருக்கிறார்கள்.














