``ரூ.5 லட்சம் சம்பளம்; வேலை இழந்ததால் மனைவி விவாகரத்து'' - டெலிவரி பாயாக மாறிய ப...
சேலம்: திருமணம் தாண்டிய உறவு விவகாரத்தில் கொலை - 25 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவர் கைது
சேலம் மாவட்டம் காடையாம்பட்டி அருகே உள்ள உம்பிளிக்கம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் நல்லதம்பி(60). கடந்த 2000-ம் ஆண்டு நல்லதம்பிக்கு 35 வயது இருந்தபோது, உம்பிளிக்கம்பட்டி பகுதியில் வசித்து வந்துள்ளார். அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த சாமிநாதன் என்பவர் தன் மனைவி ராணியுடன் (35) வசித்து வந்தார். சாமிநாதன் ராணுவ வீரராக இருந்து வந்த நிலையில் நல்லதம்பிக்கும், ராணிக்கும் திருமணம் மீறிய உறவு இருந்து வந்துள்ளது.
இந்த நிலையில் ஒரு கட்டத்திற்கு மேல், என்னுடன் தொடர்பில் இருக்க வேண்டாம் எனக் கூறி தொடர்பை துண்டித்துள்ளார் ராணி. இதில் ஆத்திரம் அடைந்த நல்லதம்பி, ராணியை கொலை செய்துவிட்டு தலைமறைவானார். இதுகுறித்து அப்போது தீவட்டிப்பட்டி போலீஸார் வழக்கு பதிவு செய்து குற்றவாளியை தேடி வந்தனர்.

கடந்த 25 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்து வந்த நல்லதம்பி ஆந்திராவில் பல்வேறு இடங்களில் ஹோட்டல்களில் வேலை செய்து பிழைப்பு நடத்தி வந்துள்ளது தெரிய வந்தது. தொடர்ந்து இவர் தனது சொந்த ஊரான உம்பிளிக்கம்பட்டிக்கு 25 ஆண்டுகள் கழித்து வந்துள்ளார். நல்லதம்பி வரும் தகவலை தொடர்ந்து குற்றவாளியை நோட்டமிட்ட போலீஸார், நேற்று காலை தீவட்டிப்பட்டி பேருந்து நிலையத்தில் பேருந்தில் இருந்து இறங்கிய உடன் கைது செய்தனர். பின்னர், காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து அவரை நீதிமன்ற காவலுக்கு அனுப்பி உள்ளனர்.



















