ஆந்திரா: மாவோயிஸ்ட் முக்கிய தலைவர் சுட்டுக்கொலை - யார் இந்த மத்வி ஹித்மா?
சேலம் : 50 ஹெக்டேர்; வாக்கிங், சைக்கிளிங், குடில்கள்.! ரூ.10 மட்டுமே - `நகர்வன’த்தில் என்ன ஸ்பெஷல்?
சேலம் மாவட்டம், `குரும்மபட்டி வன உயிரியல் பூங்கா' அருகில் புதியதொரு சுற்றுலா தலம் அண்மையில் சேலம் வனசரகரால் திறந்து வைக்கப்பட்டது என்ற தகவலோடு அங்கு பார்வையாளராக சென்றோம்.
என்ன இருக்கு அங்கு?
சுமார் 50 ஹெக்டேர் பரப்பளவில் இயற்கை சூழலோடு இணைந்த ஒரு சுற்றுலா தலம், பெயர் நகர்வனம். இன்றைய சூழலில் சுற்றுலா தலங்களின் மீதான தேவையை உணர்ந்தும், இயற்கை வளம் குன்றாமல் மக்களுக்கான பொழுதுப்போக்கை கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் உருவானது இந்த நகர்வனம் எனலாம்.

சுமார் 2 கி.மீ தூரத்திற்கு நடந்து சென்று இயற்கை காட்டை பார்வையிடும் ஒரு இடமாகவும், ஓய்வெடுக்க ஆங்காங்கே சுமார் 10 இயற்கை வடிவமைப்பு கொண்ட குடில்களுடன், தண்ணீர் வசதி கொண்ட உட்காரும் இடங்கள் மற்றும் குழந்தைகளுக்கான சிறு பூங்காவுடன் அமைக்கப்பட்டுள்ளது இந்த நகர்வனம்.
ஆங்காங்கே, சுமார் 7 வரவேற்பு அமைப்புகள் அமைக்கப்பட்டு, சுற்றிலும் கம்பி வேலிகளால் சூழப்பட்டுள்ளது. சைக்கிளிங் பாதையாக சுமார் 3 கி.மீ தூரத்திற்கு பாதை அமைக்கப்பட்டுள்ளது. சுமார் 7000 மரக்கன்றுகள் நடவு செய்து புதிய ஒரு வனத்தினை உருவாக்கும் முயற்சியையும் உள்ளடக்கியது நகர்வனம்.
காட்டுக்குள்ளே என்றால் காட்டு விலங்குகள்?!
இல்லை. இது குறித்து வன பணியாளர் அவர்களிடம் கேட்ட போது, ``இந்த நகர்வனம் சுமார் 2 ஆண்டுகள் திட்டமிட்டு அமைக்கப்பட்டுள்ளது. ஆதலால், காட்டு விலங்குகள் அச்சுறுத்தல் ஏதும் இல்லை. மேலும், நுழைவு வாயிலில் நுழைவு சீட்டு வாங்கும் போது பெயர், தொலைபேசி மற்றும் உள்நுழைவு நேரம் பதிவு செய்யப்படும். அதே போல வெளியேறும் போதும் வெளியேறிய நேரம் மற்றும் கையொப்பம் பெறப்படும். அதற்கென தனி பதிவேடு பராமரிக்கப்படும்.
ஆதலால், காட்டுக்குள் சென்று திரும்பாத நபர்களை கண்காணிக்க இது பயன்படும். மேலும்,சுமார் ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை கூட்டத்திற்கேற்ப வன பணியாளர்கள் வனத்திற்குள்ளே சுற்றுப்பயணம் மேற்கொள்வதன் மூலம் சட்ட விரோத பணிகள் கண்காணிக்கப்பட்டு தடுக்க மற்றும் தண்டிக்கப்படும்.

நுழைவுக்கட்டணம் மற்றும் நேரம்!
நபர் ஒருவருக்கு பத்து ரூபாய் நுழைவு கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இரு சக்கர வாகனங்களுக்கு தனியாக ரூபாய் 10 வசூலிக்கப்படுகிறது. நான்கு சக்கர வாகனங்களுக்கு இன்னும் முடிவு செய்யப்படவில்லை. இந்த நகர்வனம் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை செயல்படும். ஒரு முறை நுழைவு கட்டணம் வாங்கினால் மாலை 6 மணி வரை அங்கு பொழுதைப்போக்கலாம்.
யாருக்கு ஏற்றது நகர்வனம்?
அமைதியான இயற்கை சூழலில் பொழுதை கழிக்க விரும்பும் இளைஞர்கள் மற்றும் நடைப்பயணம் மேற்கொள்ள முடிந்த நபர்களுக்கு ஏற்ற இடமாகும். 10 சிறு குடில்களில் ஓய்வெடுக்கலாம். குழந்தைகள் இருந்தால் அந்த சிறு பூங்காவில் விளையாடியும் பொழுதைப் போக்கலாம். மொத்தத்தில் அமைதியான இயற்கை சூழல் விரும்பிகளுக்கு உகந்த இடமாக இது அமைகிறது.

மக்கள் வரவை பொறுத்து மேலும் சில மாற்றங்கள் அங்கு நிகழ வாய்ப்புள்ளது என்றார் வன பணியாளர். 10 ருபாய் பணத்திற்கு ஒரு எளிய பொழுதுபோக்கு என்பதில் ஐயமில்லை.!















