Rahul Gandhi: 25 லட்சம் போலி Voters - Election Commissionஐ அதிரவைத்த Hydrogen Bo...
தூத்துக்குடி: "வேலைக்கு அழைத்துச் செல்லாததால் கொன்றேன்" - பெயிண்டர் கொலை வழக்கில் பகீர் வாக்குமூலம்
தூத்துக்குடி மாவட்டம், காயல்பட்டினத்தைச் சேர்ந்தவர் சாகுல் ஹமீது. பெயிண்டிங் காண்ட்ராக்டரான இவர், அரசு அலுவலகங்கள், தனியார் அலுவலகங்கள், வீடுகளில் பெண்டிங் காண்ட்ராக்ட் எடுத்து செய்து வந்துள்ளார். இவரிடம் 20-க்கும் மேற்பட்ட பெயிண்டர்கள் வேலை செய்து வந்தனர்.
இந்த நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு குலசேகரன்பட்டினத்தில் உள்ள தர்காவிற்கு தொழுகைக்காக பைக்கில் சென்றபோது கொலை செய்யப்பட்டார்.

இதுகுறித்து சாகுல் ஹமீதுவின் மனைவி நைனா உம்மாள், குலசேகரன்பட்டினம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீஸாரின் விசாரணையில் அவரிடம் பெயிண்டராக வேலை செய்த ஆறுமுகநேரியைச் சேர்ந்த முகமது அசன் என்பவர் கல்லால் தாக்கிக் கொலை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து தலைமறைவான முகமது அசனை போலீஸார் கைது செய்தனர்.
போலீஸாரிடம் அவர் கூறிய வாக்குமூலத்தில், “நான் சாகுல் ஹமீதுவிடம் பெயிண்டராக வேலை பார்த்து வந்தேன். கடந்த சில நாட்களுக்கு முன்பு வேலை தொடர்பாக எனக்கும் அவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனையடுத்து என்னை 5 நாள்கள் வேலைக்கு அழைத்துச் செல்லவில்லை.
பின்னர் அவரிடம் வேலை கேட்டேன். அதற்கு என்னை அவதூறாகப் பேசினார். என்னை விட்டுவிட்டு என் ஊரைச் சேர்ந்த வேறு சில நபர்களை வேலைக்கு அழைத்துச் சென்றார்.

நான் பல முறை என்னை வேலைக்கு அழைத்துச் செல்லக் கோரியும் அவர் என்னை வேலைக்கு அழைத்துச் செல்ல மறுத்தார். இது எனக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. சாகுல் ஹமீதுன் ஒவ்வொரு வாரமும் திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் குலசேகரன்பட்டினம் தர்காவிற்கு தொழுகைக்காக வருவது எனக்குத் தெரியும். கடந்த 2 நாட்களுக்கு முன்பு தொழுகைக்காக வந்தபோது கல்லால் தாக்கி கொலை செய்தேன்” எனக்கூறி போலீஸாரையே அதிர வைத்துள்ளார்.


















