கோவை: ஆர்டர் போட்டது சோப்பு.. கிடைச்சது ஐபோன், லேப்டாப்.. ஃபிளிப்கார்ட் நிறுவனத...
தெலங்கானா: "எறும்புகளோடு வாழ முடியாது" - எறும்புகள் மீதான பயத்தால் தற்கொலை செய்த பெண்
எறும்பைப் பார்த்தாலே சிலருக்குப் பயமாக இருக்கும். அப்படிப்பட்டவர்களை Myrmecophobia என்ற நோயால் பாதித்து இருப்பதாகக் கூறுவதுண்டு. தெலங்கானா மாநிலம் சங்காரெட்டி மாவட்டத்தில் உள்ள அமீன்பூர் என்ற இடத்தில் வசிப்பவர் மனீஷா (25). இவருக்குக் கடந்த 2022ம் ஆண்டு திருமணம் நடந்தது. இத்தம்பதிக்கு 3 வயதில் ஒரு பெண் குழந்தை இருக்கிறது.
மனீஷாவிற்கு சிறுவயதில் இருந்தே எறும்புகளைக் கண்டால் பயம். அதனால் அவரது சொந்த ஊரில் உள்ள மருத்துவமனையில் இதற்காக கவுன்சிலிங் பெற்றுள்ளார். சம்பவத்தன்று காலையில் அவரது கணவர் வேலைக்குச் சென்றுவிட்டார்.

மனீஷா தனது மகளை உறவினர் வீட்டில் விட்டுவிட்டு வீட்டைச் சுத்தம் செய்த பிறகு வந்து அழைத்துக்கொள்வதாகக் கூறிவிட்டு சென்றார். ஆனால் அப்படிச் சொல்லிவிட்டு சென்றவர் அதன் பிறகு குழந்தையைக் கூப்பிட வரவில்லை.
அவரது கணவர் மாலையில் வேலை முடிந்து வீட்டிற்கு வந்தபோது கதவு உள்பக்கமாகப் பூட்டப்பட்டு இருந்தது. உடனே பக்கத்து வீட்டுக்காரர்கள் துணையோடு கதவைத் திறந்தபோது உள்ளே மனீஷா மின் விசிறியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்திருந்தார்.
அவர் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு கடிதம் ஒன்றையும் எழுதி வைத்திருந்தார். அவர் அக்கடிதத்தில், "என்னை மன்னித்து விடுங்கள், இந்த எறும்புகளோடு என்னால் வாழ முடியாது. மகளைப் பார்த்துக்கொள்ளுங்கள். திருப்பதி கோயிலுக்கு அரிசி காணிக்கை கொடுக்க மறக்க வேண்டாம்" என்று குறிப்பிட்டு இருந்தார்.
இதன் மூலம் அவர் வீட்டைச் சுத்தம் செய்தபோது எறும்பைப் பார்த்து பயத்தில் தற்கொலை செய்து கொண்டிருக்க வேண்டும் என்று நம்பப்படுகிறது. போலீஸார் இது குறித்து வழக்குப்பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
















