தூத்துக்குடி: `தவறுதலாக விடுவிக்கப்பட்ட சிறைக்கைதி; மறுநாளே மீண்டும் கைது!' - தவ...
தோப்புக்கரணம் மரணம் வரை கொண்டு செல்லுமா? - மும்பை மாணவி மரணம் குறித்து மருத்துவர் விளக்கம்
மும்பையைச் சேர்ந்த 12 வயது மாணவி, பள்ளிக்கு 10 நிமிடம் தாமதமாக சென்றதால், தன்னுடைய உயிரையே இழந்திருக்கிறார். தாமதமாக வந்ததற்கு தண்டனையாக, வகுப்பு ஆசிரியை, அம்மாணவியை 100 முறை சிட் அப் செய்யும்படி தண்டனை கொடுத்திருக்கிறார். அதுவும், முதுகில் மாட்டியிருந்த புத்தக சுமையைக் கூட கீழே வைக்க விடாமல் அதோடு சிட் அப் செய்யும்படி சொல்லியிருக்கிறார்.
வேறு வழியில்லாத அந்தக் குழந்தையும் 100 சிட் அப் எடுத்திருக்கிறாள். மாலை வீட்டுக்குத் திரும்பியதும் கடுமையான முதுகுவலி இருப்பதாக அம்மாவிடம் அழவே, பள்ளிக்கூடத்தில் நடந்ததை தெரிந்துகொண்ட மாணவியின் அம்மா, மகளை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்றிருக்கிறார். ஆனால், சிகிச்சை பலனளிக்காமல் மாணவி உயிரிழந்துவிட்டாள். இது தொடர்பாக சென்னையைச் சேர்ந்த அவசர சிகிச்சை நிபுணர் சாய் சுரேந்தரிடம் பேசினோம்.

‘’முதலில் இந்தக் கால பள்ளிக்கூட புத்தக பைகளின் எடையை குறைக்க வேண்டும். சில பள்ளிக்கூடங்கள் இதில் கவனமாக இருந்து, மாணவர்களின் புத்தக சுமையைக் குறைத்துக்கொண்டிருக்கிறார்கள். எல்லா பள்ளிக்கூடங்களும் இதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
இரண்டாவது விஷயம். பள்ளி படிக்கும் மாணவர்களில் எங்கோ ஒருவருக்கு, சிறு வயதில் இருந்தே இதயம் அல்லது நுரையீரலில் சின்னதாக பிரச்னை இருக்கலாம். அது சிறிய அளவிலான துளையாகவும் இருக்கலாம். அது தெரியாமலே இருந்திருக்கலாம்.
ஏதோ ஒருகட்டத்தில், பிரச்னை பெரிதாகும்போது, குழந்தைகளுக்கு மூச்சுத்திணறல் வரும். இதை வருடத்துக்கு முறை பள்ளிக்கூடங்களில் ஃபுல் பாடி செக்கப் செய்வதன் மூலம் கண்டறியலாம்.
பல பள்ளிக்கூடங்களில் இந்த நடைமுறை இல்லை. இதை செய்திருந்தால், எந்த மாணவருக்கு என்னப் பிரச்னை, அவரிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பது ஆசிரியர்களுக்கு தெரிந்திருக்கும்.
அதற்காக, ஹெல்தியான குழந்தைகளை இப்படி புத்தக மூட்டையுடன் 100 சிட்-அப் எடுக்க வைக்கலாம் என்று அர்த்தமில்லை.

மூன்றாவது விஷயம். காற்று மாசுபாட்டின் இடையே தான் நாமும் நம் குழந்தைகளும் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். அதுவும் பெரு நகரங்களில் இந்தப் பிரச்னை அதிகமாக இருக்கிறது. இன்றைய குழந்தைகளுக்கு ஆஸ்துமா தொந்தரவு காற்று மாசுபாட்டினால் அதிகரித்திருக்கிறது.
இந்த விழிப்புணர்வு எதுவும் இல்லாமல், 12 வயது குழந்தையை 100 முறை உட்கார்ந்து எழ வைத்தது மிகப் பெரிய தவறு. மாணவியை திருத்த நினைத்திருந்தால், 10 முறை சிட் அப் செய்ய வைத்திருக்கலாம்.
ஸ்கேலால் கையில் ஓர் அடி கூட வைத்திருக்கலாம். ஆனால், அந்த ஆசிரியர் செய்திருப்பது மகா பாவம். எங்கேயோ இருந்த கோபத்தை, அந்தக் குழந்தையின் மீது காட்டியிருக்கிறார்.
அந்த மாணவிக்கு என்ன நிகழ்ந்திருக்கும் என்றால், முதல் 20 சிட்-அப் போடும்போதே மூச்சு வாங்க ஆரம்பித்திருக்கும். 100 சிட்-அப் எடுத்தவுடனே மாணவிக்கு நெஞ்சு வலியும், கூடவே மூச்சுத்திணறலும் சேர்ந்து வந்திருக்கும். அதன் காரணமாகத்தான், அந்த மாணவி இறந்திருப்பார்.

ஆசிரியர்கள் கொடுக்கும் தவறான மற்றும் தாங்க முடியாத தண்டனைகளால் மாணவர்கள் இறக்கும்போது, சமூகத்தில் இரண்டு தவறுகள் நடப்பதற்கு வழிவகுக்கின்றன:
ஒன்று அதன்பிறகு நல்ல ஆசிரியர் பெருமக்களால்கூட, தங்கள் மாணவர்களின் தவறுகளைத் திருத்துவதற்காக சிறுசிறு தண்டனைகளும் கொடுக்க முடியாமல் போகும்.
இரண்டாவது, அப்படி திருத்தப்படாத மாணவர்கள் வளரும்போது, அது சமூகத்துக்கு கெடுதலாக அமையவும் வாய்ப்பிருக்கிறது’’ என்றவர், சிட் அப் தொடர்பான சில விஷயங்களையும் பகிர்ந்துகொண்டார்.
‘’காது நுனியை பிடித்தபடி சிட்-அப் எடுத்தால், கவனத்திறன் கூர்மையாகும்; நினைவுத்திறன் அதிகரிக்கும், உடல் முழுவதும் ரத்த ஓட்டம் சீராகும் என்று ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. அதனால், குழந்தைகள் 5 சிட்-அப் அல்லது 10 சிட்-அப் வரை எடுக்கலாம். வளர்ந்த குழந்தைகள் என்றால், ஒரே நேரத்தில் அதிகபட்சமாக 20 சிட்-அப் எடுக்கலாம். அதுவும், ஆரோக்கியமாக இருந்தால்... சிட்-அப் எடுப்பதற்கான ஸ்டாமினா எனப்படும் தாங்கும் திறன் நபருக்கு நபர், குழந்தைக்கு குழந்தை மாறுபடும். இதுபற்றிய எந்த விழிப்புணர்வும் இல்லாமல் ஓர் ஆசிரியர் அந்த 12 வயது குழந்தையின் உயிரைப் பறித்திருக்கிறார்’’ என்கிறார் வருத்தமுடன், அவசர சிகிச்சை நிபுணர் சாய் சுரேந்தர்.
















