Beauty Tips: சமந்தா, ராஷ்மிகா சொன்ன ரகசியம்! சரும பளபளப்புக்கு உதவும் Apple Cide...
பாமக: "அன்புமணி தனிக் கட்சி தொடங்கலாம்; பெயரையும் நானே சொல்கிறேன்" - ராமதாஸ்
2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கிறது. எல்லா கட்சிகளும் தேர்தல் வியூகங்கள், கூட்டணி பேச்சுவார்த்தைகளில் மும்முரமாகியிருக்கின்றன.
ஆனால், பாமக இன்னும் உட்கட்சி மோதலில் இருந்தே மீளமுடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறது. பாமகவின் நிறுவனத் தலைவர் ராமதாஸுக்கும், அக்கட்சியின் தலைவர் அன்புமணிக்கும் இடையேயான அதிகார சண்டைகள் முடிவுக்கு வராமல் தொடர்ந்து கொண்டிருப்பதால் தேர்தலை நோக்கிய அடுத்த அடியை எடுத்து வைக்கமுடியாமல் திணறிக்கொண்டிருக்கிறது பாமக.

இதுகுறித்து இன்று (நவ 6), விழுப்புரம் மாவட்டம் தைலாபுரத்தில் செய்தியாளர்களிடம் பேட்டியளித்திருக்கும் பாமக நிறுவனர் ராமதாஸ், "அன்புமணி அரசியல் செய்ய விரும்பினால் தனியாக கட்சியை ஆரம்பித்துக் கொள்ளலாம். ஆனால், 'பாட்டாளி மக்கள் கட்சி'யின் பெயரையும், என் பெயரையும் உபயோகப்படுத்தக் கூடாது.
'ஆர். அன்புமணி' என்று மட்டும் அன்புமணி தனது பெயரை வைத்துக் கொள்ளட்டும். 'அன்புமணி ராமதாஸ்' என என் பெயரைச் சேர்த்துப் பயன்படுத்தக் கூடாது. பாட்டாளி மக்கள் கட்சியின் பெயரையும், புனிதமான அதன் கொடியையும் அன்புமணி எப்போதும் உபயோகப்படுத்தக் கூடாது. பலமுறை இதைச் சொல்லியிருக்கிறேன். கேட்கவில்லை என்பதால் மீண்டும் இதை உறுதியாகச் சொல்லிக்கொள்கிறேன்.

உங்கிட்ட (அன்புமணி) இருக்க 21 பேர வைச்சு ஒரு தனிக்கட்சி ஆரம்பிச்சிக்கோ. புதிய கட்சிக்குப் பெயர் வேண்டுமானால் அதையும் நானே சொல்கிறேன். உனக்கும் பாமகவிற்கும், எந்தச் சம்பந்தமுமில்லை. என்னோடும் உனக்கு எந்தச் சம்பந்தமுமில்லை என்பதை பலமுறை சொல்லிவிட்டேன்" என்று திட்டவட்டமாகப் பேசியிருக்கிறார் ராமதாஸ்.














