செய்திகள் :

பாலய்யா வஸ்தாவய்யா 6: `ஜோதிடம், சகுனம், பரிகாரம்'- துப்பாக்கியால் தயாரிப்பாளரை சுட்டாரா பாலைய்யா?

post image
பாலய்யா என்றதும் நம் மனதில் வருவது அவர் பேசும் பன்ச்களும், சுமோக்களை ஒற்றைக்கையால் டீல் செய்து பறக்க விடுவதும், ரயிலையே 'ஜெய் சென்னகேசவா' என்று சொல்லி தொடாமலே ரிவர்ஸில் திருப்பி அனுப்புவதும் தான்! இதையெல்லாம் திரையில் பார்ப்பதற்கு நமக்கும், சிரஞ்சீவி ரசிகர்களுக்கும் வேண்டுமென்றால் காமெடியாக இருக்கும்.

ஆனால், பாலய்யா வெறியர்களுக்கு,'மன பாலய்யா தேவுடு!' மொமண்ட் தான். ராயலசீமா ஏரியாக்களில் இன்னும் கிராமப்புற வீடுகளில் தந்தை படத்தோடு இவர்  படத்தையும் வீட்டில் வைத்து வணங்குவது அவருக்கு நன்கு தெரியும்.

நிஜத்தில் பாலய்யாவுக்கு திரையில் கடவுள் அவதாரமாகத் தோன்றி இப்படி அசாத்தியமாக நடிப்பதே பிடிக்கும். அப்பா காலத்தில் இப்படியெல்லாம் நூறு பேரை அடித்து பறக்கவைக்க முடியாது. இந்தக்காலத்து குழந்தைகளுக்கு தான் ஒரு சூப்பர் ஹீரோவாய் மனதில் பதியவேண்டுமென்றால் எதிரிகளை மட்டுமல்ல அவர்கள் ஓட்டிவந்த காரையும் 'பவுன்ஸ்' செய்து பறக்கவிட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார்.

Balaiyaa

'என்னதான் புதுசா வேணும்...இப்படிச் சூடு கண்ணா!' என ரகம்ரகமாய் சண்டை போடுகிறார். புல்லட்டைக் கடித்து துப்பி வெடிக்க வைக்கிறார். மரத்தை வேரோடு பிடுங்கி எதிரிகளை அடிக்கிறார். டேக்-ஆஃப் ஆகும் விமானத்தை பிடித்து இழுத்து றெக்கையை உடைத்தெறிகிறார். சொல்லப்போனால் படத்தின் பட்ஜெட்டில் சுமோக்கள் வாங்க ஒரு பெரிய தொகை செலவிடுகிறார்கள். கதை சொல்லும்போதே,
"சார் படத்தோட ஓப்பனிங் ஷாட்ல பத்து சுமோக்கள் அப்படியே ராயல சீமா செவப்புப் புழுதியைக் கிளப்பிக்கிட்டு சர்சர்னு வருது..!" இப்படி இயக்குநர்கள் கதை சொல்ல ஆரம்பிக்கும்போதே, குறுக்கே புகுந்து,

"உர்ரே டைரக்டர்காரு... பத்து இல்லய்யா..37 சுமோஸு!" என்பார். அதென்ன கணக்கு 37 என்று டைரக்டர் கேட்க மாட்டார். பாலய்யா சொல்லிட்டா மறுபேச்சு கூடாது. உண்மையில் பாலய்யா நியூமராலஜி பார்ப்பவர் என்பது அவரை வைத்து படத்தை இயக்குபவர்களுக்கு நன்கு தெரியும். 3+7=10... 1+0=1. கூட்டுத்தொகை 1 வர வேண்டும் அவ்வளவே. பாலய்யா நல்லவர் தான் இல்லையென்றால்  கூட்டுத்தொகை ஒன்று வரவேண்டும் என, "91 சுமோஸு!" என்று சொல்லாமல் விட்டாரே..!நியூமராலஜிக்கு அடுத்தபடியாக அவர் நம்புவது சகுனத்தை. 2004 வரை அவரிடம் வினோதமான ஒரு பழக்கம் இருந்தது.

பாலய்யா வஸ்தாவய்யா

காலையில் எழுந்ததும் அன்றைய தினம் ஷூட்டிங் இருந்தால் பஞ்சாங்கம் பார்த்து ராகு கேது சுக்கிரன் செல்லும் திசையெல்லாம் நோக்குவார். ஈசானி மூலையில் இன்னிக்கு நல்லது இல்லையென்றால் ஏதாவது காரணம் சொல்லி அன்று படப்பிடிப்புக்குச் செல்ல மாட்டார். ஒருவேளை தவிர்க்க இயலாமல் செல்ல வேண்டுமென்றால் உடனடியாக தனக்கு நெருக்கமான ஜோதிடராக இருந்த சத்திய நாராயண சௌத்ரியிடம் போனைப் போடுவார். அவர் சொல்லும் பரிகாரம் கேட்டு அதன்படி செல்வார். அந்தப் பரிகாரங்கள் எல்லாம் இன்ஸ்டண்ட் இடியாப்ப மாவு ரகங்கள் தான். உதாரணமாக ,  "தெருமுக்குவரை வெறும் காலால் நடந்து சென்று ஆஞ்சநேயரை கிழக்கு நோக்கி மூன்றுமுறை சுற்றி நின்று வணங்கிச் செல்லுங்கள்!" ரகம் தான். இந்த சத்தியநாராயண சௌத்ரிதான் பின்னாளில் பாலய்யாவை அடிக்கப் பாய்ந்தது. அந்தக்கதையை இந்த எபிசோடில் சொல்கிறேன். அதற்கு முன் பாலய்யாவின் முக்கியமான வீக்னெஸ் பற்றி தெரிந்து கொள்வது அவசியம்.

பாலய்யாவின் குடும்பம் தான் அது! வீட்டில் எப்போதும் சாந்த சொரூபியாக இருப்பார். மனைவியின் சொல்லுக்குக் கட்டுப்பட்டவர். தன் தந்தையிடமிருந்து கற்றுக்கொண்ட நல்ல பழக்கங்களில் இதுவும் ஒன்று. வீட்டில் அதிகம் கோபப்பட மாட்டார். இவரது கோபமறிந்து சாந்தப்படுத்தி விடுவார் மனைவி வசுந்தரா தேவி.   ஆனால், மனைவி இவரைத் திட்டினால், கோபம் பொத்துக்கொண்டு வரும். வேலையாட்களை அடி வெளுத்துவிடுவார்.
 
தன்னுடைய மகள்கள் தேஜஸ்வினி, நர பிராமணி இவரிடம் ஓவர் செல்லம். மகன் மோக்‌ஷண தேஜாவைக்கூட அதட்டுவார். ஆனால் மகள்களிடம் பம்மிவிடுவார். வீட்டில் மகள்களிடம் எலியாக தன்னைக் காட்டிக்கொள்வதில் அலாதி பிரியம் உண்டு. ஆனால், கார் பைக் எடுத்து ஓட்டிக்கொண்டு தனியாக அவர்கள் வெளியே சென்றால் கோபத்தின் உச்சத்துக்கே சென்று வேலையாட்களை வறுத்துவிடுவார். அவர்களைத் தனியாக எங்கும் விடவே மாட்டார்.

தன் குடும்பத்துடன் பாலய்யா

ஷூட்டிங்கில் இருந்தால்கூட பிள்ளைகள் வெளியே செல்கிறார்களா என அடிக்கடி செக் செய்வார். ரொம்ப நாட்கள் தன் பிள்ளைகளை பாப்பரஸிகள் கண்களில் காட்டாமல் பாதுகாத்து வந்தார். தற்போதுதான் தன்னுடைய பட பூஜைகளுக்கு அழைத்து வந்து குத்து விளக்கு ஏற்ற வைத்தும், க்ளாப் போர்டு அடித்தும் துவங்கி வைக்கச் சொல்கிறார். மகனை தன்னைப்போல ஆக்‌ஷன் ஹீரோவாக உருவாக்கிட இப்போதே வீட்டில் ட்ரெய்னர்களை வரவழைத்து பயிற்சியளித்து வருகிறார்.

 மூவருக்குமென ஆளுக்கு இரண்டு கார்கள் வீதம் வாங்கிக்கொடுத்தாலும் தனியாக ஓட்டிச் செல்ல தடா. மூன்று டிரைவர்கள் வீட்டில் எப்போதும் பிள்ளைகளின் அழைப்பை எதிர்பார்த்திருப்பார்கள். வேலை இருக்கிறதோ இல்லையோ தனி ஷெட்டில் காத்திருப்பார்கள். ஒருமுறை காரை மகன் தனியாக ஓட்டிச் சென்று சிறு விபத்து ஆனதும், 2018-ல் தன் அண்ணன் நந்தமூரி ஹரிகிருஷ்ணா (ஜூனியர் என்.டி.ஆரின் தந்தை) சாலை விபத்தில் மரித்துப்போனதும் பாலய்யாவை பெரிய அளவில் பாதித்துவிட்டது. தன் பிள்ளைகளுக்கு எதுவும் ஆகிவிடக்கூடாது என்ற அக்கறையே கோபமாக வெளிப்பட்டு விடுகிறது.

கோபம் என்றதும் எல்லோருக்கும் நினைவில் வருவது எம்.ஜி.ஆர் ஸ்டைலில் பாலய்யா செய்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தான். 2004-ல் தெலுங்கு சினிமாவில் பிஸியான தயாரிப்பாளராக இருந்த பெல்லம்கொண்டா சுரேஷும் அவர் உதவியாளர் சத்திய நாராயண சௌத்ரியும் (இவரிடம் ஜோசியம் கேட்பது பாலய்யாவின் வழக்கம்) பாலய்யா வீட்டுக்கு புதுப்படம் ஒன்றின் பேச்சுவார்த்தைக்காக வந்திருந்தார்கள். காலையில் மாடியில் இருக்கும் பால்கனி போன்ற மினி பார் செட்-அப்பில் மூவரும் அமர்ந்து டிபன் சாப்பிட்டுக்கொண்டே பேச ஆரம்பித்தார்கள். பாலய்யாவுக்கு 19-வது கெட்ட பழக்கமாக காபி டீ போன்ற சூடான பானத்தில் கொஞ்சமாய் விஸ்கியைக் கலந்து குடிக்கும் பழக்கம் அப்போது இருந்தது. அப்படியே கொஞ்சம் கொஞ்சமாய் உள்ளே சில துளிகள் இறங்கியதும், பாலய்யா `வேறுமாதிரி' பேச ஆரம்பித்தார்.

பாலய்யா

பெல்லம்கொண்டா சுரேஷ் அப்போது இளம் தயாரிப்பாளர். ராயலசீமா கர்னூலைச் சேர்ந்தவர். அவரும் பாலய்யா போல `சூட்டு மண்டை' தான். பொசுக்கென்றால் கோபப்படுவார். பாலய்யாவை வைத்து 2002-ல் `சென்னகேசவ ரெட்டி' மற்றும் 2004-ல் விக்ரம் நடித்த `சாமி' படத்தின் ரீமேக்கான `லஷ்மி நரசிம்மா'வையும் தயாரித்தவர். பெல்லம்கொண்டா சுரேஷுக்கு தமிழில் வந்த சாமி படம் ரொம்பவே பிடித்துப்போய் தான் ஆசை ஆசையாய் தயாரித்தார். பொதுவாக தெலுங்கு சினிமாவில் பாலய்யா படங்களை எந்தத் தயாரிப்பாளர்களும் வெளிப்படையாக விமர்சிப்பது இல்லை. ஆனால், பெல்லம்கொண்டா, அண்டா அண்டாவாகக் கழுவி ஊற்றினார். 2003-ல் ரிலீஸான தன் நண்பர் தயாரித்து பாலய்யா நடித்து அட்டர் ஃப்ளாப்பான 'பல்னட்டி பிரமானாயுடு' படத்தை செமையாக விமர்சித்தார்.

`பல்னட்டி பிரமானாயுடு' படத்தில் தான் ரயிலை தொடையைத் தட்டி திரும்பிப் போகச் சொல்லி ரயில் திரும்பிப் போகும் காட்சி இடம்பெற்றது. இணையம் பெரிதாய் வளர்ச்சியடையாத காலத்திலேயே செம ட்ரோல் மெட்டீரியலாக தமிழ்நாடு வரை ரீச் ஆனது. இதெல்லாம் தெரிந்து தான் `சாமி' பட ரீமேக்கில் ஒரிஜினல் தமிழ் சாமி போல வரவேண்டும் என குறுக்கே புகுந்தார் பெல்லம்கொண்டா. இது பாலய்யாவுக்கு மிளகாயை அரைத்து முகத்தில் பூசிவிட்டது போல எரிச்சலைக் கிளப்பியது. ஆனாலும், கால்ஷீட் கொடுத்து பணம் வாங்கிவிட்டதால் வேறுவழியின்றி நடித்து முடித்தார். பாலய்யாவுக்கும் பெல்லம்கொண்டா வெளியே தன் நடிப்பு பற்றி பேசி வருவது கோபத்தைக் கிளப்பிவிட்டது. பல்லைக் கடித்துக்கொண்டு ஷூட்டிங்கை முடித்தார். (இந்தப்படத்தில் பீர் இட்லி சாப்பிடும் காட்சியில் முகத்தை கொடூரமாக அஷ்டகோணலில் வைத்து நடித்திருப்பார் பாலய்யா)

லஷ்மி நரசிம்மா படக் காட்சி

படத்தின் ரஷ் பார்த்துவிட்டு, ``இது சாமி படம் மாதிரி இல்லை..! தமிழில் நிஜ போலீஸ் அதிகாரி போல விக்ரம் சிறப்பாக நடித்திருப்பார். இது போலீஸ் வேடம் போட்ட மாபியா போல இருக்கிறது!' என்று காமெடியாக ஒருவரிடம் சொல்ல அது பாலய்யா காதுக்குப் போனது. ஆந்திராவில் பாலய்யா தும்மினாலே, ''ஆஹா... என்னா ஸ்டைலா மன தேவுடு தும்முது!'' சொல்ல ஒரு பெருங்கூட்டம் காத்திருப்பதால் படம் ரிலிஸாகி  சூப்பர் ஹிட்டானது. இதனால் பெல்லம்கொண்டாவை வெளுத்தெடுக்க தேதி பார்த்து, தன் வீட்டுக்கு வரச் சொல்லி பால்கனியில் வைத்து அடித்து, துப்பாக்கியால் கால் மற்றும் கையைப் பார்த்து சுட்டு சாவு பயத்தைக் காட்டியிருக்கிறார் பாலய்யா.

பெல்லம்கொண்டா சுரேஷ்

``பெல்லம்கொண்டாவைக்கூட  மன்னிச்சிருவேன்டா... உன்னை என் பெர்சனல் சாமியாரா நினைச்சு நீ சொல்ற பரிகாரத்தையெல்லாம் செஞ்சேன் பாரு... உன்னை மட்டும் மன்னிக்கவே மாட்டேன்டா'' என்று சொல்லி சத்திய நாராயணாவை அடி வெளுத்திருக்கிறார். காலில் சுட்டிருக்கிறார். பாலய்யாவின் மனைவியும் வேலையாட்களும் ஓடிவந்து பாலய்யாவை கட்டுப்படுத்தி இருவரையும் மீட்டு பக்கத்திலிருக்கும் மருத்துவமனையின் அவசர சிகிச்சைப்பிரிவுக்கு ஆம்புலன்ஸில் அனுப்பி வைத்தார் என்கிறார்கள்.
பாலய்யா மீது வழக்குப் பாய்ந்து, கைது செய்து ரிமாண்ட் செய்து சிறையில் அடைத்தும் விட்டார்கள். 'நான் சுயநிலைவில் இல்லை. அவர்கள் தான் பேப்பர் வெட்டும் கத்தியால் என்னைக் குத்த வந்தார்கள்! தற்காப்புக்காக நான்' சுட்டிருக்கலாம்' என்று பாலய்யா தரப்பில் சொல்லப்பட்டது.

சந்திரபாபு நாயுடுதான் அப்போதைய முதல்வர் ராஜசேகர ரெட்டியிடம் கெஞ்சிக்கூத்தாடி தன் மைத்துனரை மீட்டிருக்கிறார். பெல்லம்கொண்டா சுரேஷை நேரில் பார்த்து, ''வாயை வெச்சுக்கிட்டு சும்மா இருந்திருக்கலாமேடா... அவனை வெறுப்பேத்தினா சூடாவான்னு உனக்குத் தெரியாதா?'' என்று கடிந்து கொண்டாராம் சந்திரபாபு நாயுடு. வழக்கு ஆரம்பத்தில் பரபரப்பாக நடந்தாலும் பெல்லம்கொண்டாவும், சத்திய நாராயணாவும் பிறழ் சாட்சிகளாக மாறியதும், துப்பாக்கி லைசன்ஸ் பாலய்யாவின் மனைவி பெயரில் இருந்ததும், நடந்த சம்பவங்களுக்கு சாட்சிகள் எதுவும் இல்லை... அதனால் அப்படியொரு சம்பவமே நடக்கவில்லை என்றும் பாலய்யாவை கோர்ட்டே 'ஆடு களவு போகவில்லை... களவுபோனது போல் கனவுதான் கண்டேன்' மொமன்ட்டில் விடுவித்ததும் தனிக்கதை.

சந்திரபாபு நாயுடு மற்றும் தன் குடும்பத்தினருடன்

ஒரு தரப்பு இப்படிச் சொன்னாலும் அன்று நடந்த சம்பவமே வேறு என்றும் சொல்கிறார்கள். அது தான் உண்மை என்றும் அடித்துச் சொல்கிறார்கள். கேட்கவே ஷாக்கிங்காக இருக்கிறது. அது என்ன தெரியுமா..?
ரொம்ப நாளாகவே பாலய்யா கொடுத்த டார்ச்சரால் அவரை ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்து சத்திய நாராயணாவும், பெல்லம் கொண்டாவும் போட்ட ஸ்கெட்ச் தான் அது என்கிறார்கள். அன்று காலையில் பாலய்யா வீட்டுக்குப் போய் பாலய்யாவுடன் 'ஜலக்ரீடை'யுடன் பேச ஆரம்பித்து, மெல்ல மெல்ல பாலய்யாவை போதையாக்கி, அவர் உட்கார்ந்திருந்த சேரோடு கட்டிவைத்து, ''இனி எங்களை டார்ச்சர் செய்வியா?'' என்று கேட்டுக்கேட்டு அடித்ததாகவும், அலறல் சத்தம் கேட்டு உதவியாளர்களும் பாலய்யாவின் மனைவி வசுந்தராவும் துப்பாக்கியோடு ஓடிவந்து நான்கு ரவுண்ட் சுட்டு பாலய்யாவைக் காப்பாற்றியதாகவும் சொல்கிறார்கள். வீடு புகுந்து பாலய்யாவை அடித்தவர்தான் பெல்லம்கொண்டா என்று சொல்கிறார்கள். ``குண்டடிபட்டும் விட்டுக்கொடுக்க பெல்லம்கொண்டா என்ன லூஸா?'' என்றும் சொல்கிறார்கள்.

ஆனால், இன்றுவரை பாலய்யா பெல்லம்கொண்டா சுரேஷை அடித்து வெளுத்தாரா அல்லது அவரிடம் அடிவாங்கினாரா என்பது `தேவ ரகசியமாகவே' இருக்கிறது!

- சுமோ பறக்கும்

பாலய்யா வஸ்தாவய்யா: லோகேஷ், சிவகார்த்திகேயன், கமல் - இது வேற லெவல் பாலய்யா

நம்ம பாலய்யாவின் அடுத்த ரிலீஸ் `டாகு மகாராஜ்' டீசரைப் பார்த்துட்டீங்களா..? என்னது பார்க்கலையா..? உடனே ஓடிப்போய் பார்த்திடுங்க!ஆந்திரா - தெலங்கானாவில் ஏகப்பட்ட எதிர்பார்ப்போடு 'ஜனவரி 12- சங்கராந்தி' ரி... மேலும் பார்க்க

Pushpa 2: `அவர் 6 அடி தங்கம்' - பிரபாஸ் குறித்து அல்லு அர்ஜுன் நெகிழ்ச்சி

தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் சமீபத்தில் பிரபாஸ் குறித்தி நெகிழ்வான கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.புஷ்பா 2 பட ரிலீஸை எதிர்நோக்கியிருக்கிறார் அல்லு அர்ஜுன். ராஷ்மிகா மந்தனா, ஃபஹத் பாசில் நடித்துள்ள ப... மேலும் பார்க்க

Ram Charan: சபரிமலை மாலையுடன் தர்காவில் வழிபட்ட ராம் சரண்; நெகிழ்ந்த ரசிகர்கள்

பிரபல நடிகரான ராம் சரண், இயக்குநர் ஷங்கரின் ' இயக்கத்தில் 'கேம் சேஞ்சர்' படத்தில் நடித்து முடித்திருக்கிறார்.சமீபத்தில் இதன் டீஸர் வெளியாகியிருந்த நிலையில், இத்திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகும் எனப் ப... மேலும் பார்க்க

பாலய்யா வஸ்தாவய்யா - 11: 'ஜென்ம விரோதிகள் இல்ல; ஆனா..' - அண்ணன் மகன் மீது ஏன் ஈகோ பாராட்டுகிறார்?

எல்லோரும் கங்குவா பார்த்து 'கங்கு' போலக் கொதித்துக் குமுறிக்கொண்டிருக்கிறீர்கள் தானே? அதை ஓரமாக வைத்துவிட்டு வேறொரு `கங்கு' பற்றி தெரிந்து கொள்ள ரெடியா..?தெலுங்கு சினிமா உலகில் சாம்பல் பூத்த 'கங்கு' ப... மேலும் பார்க்க

Mrunal Thakur: ``இப்போது எனக்காகவும் கதைகள் எழுதுகிறார்கள்!'' - நெகிழும் மிருணாள் தாக்கூர்

`சீதா ராமம்’ படம் மூலம் சினிமாவில் பிரபலமானவர் நடிகை மிருணாள் தாக்கூர்.இந்தப் படத்தின் வெற்றி அடுத்தடுத்த படவாய்ப்புகளை உருவாக்கித் தர, தற்போது பல படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் ‘ஹாய் நான்னா’... மேலும் பார்க்க

பாலய்யா வஸ்தாவய்யா 10: "அவ்வளவுதான் நம்மள முடிச்சுவிட்டீங்க போங்க..!" - பாலய்யாவையே பதற வைத்த நடிகை

`பாலய்யாவுக்கு பன்ச் கொடுத்த ஆள்' என்றவுடன் அவரின் `லெஜண்ட்' பட ரயில்வே யார்ட் ஃபைட் ஞாபகத்துக்கு வந்தால் நான் பொறுப்பல்ல. ஏனென்றால் பாலய்யாவுக்கு அப்படிபன்ச் கொடுக்கும் அளவுக்கு தெலுங்கு சினிமா இன்டெ... மேலும் பார்க்க