ரூ.41,000 கோடியை மோசடி செய்தாரா அனில் அம்பானி? என்ன தான் நடந்தது இவரது சாம்ராஜ்ஜ...
பீகார் தேர்தல் வரலாற்றில் புதிய மைல்கல்; முதல்முறையாக 64.66 சதவிகித வாக்குகள் பதிவு!
பீகார் சட்டமன்றத் தேர்தலில் முதற்கட்டமாக 243 சட்டமன்றத் தொகுதிகளில் 121 தொகுதிகளுக்கு நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது.
அங்கு சிறப்பு தீவிர திருத்தப் பணி (Special Intensive Revision - SIR) மூலம் 47 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்ட பிறகு நடைபெறும் இத்தேர்தல், தேசிய அளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், நேற்றைய நாள் முடிவில் பதிவான வாக்கு சதவீதம், பீகார் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவில் பதிவாகியுள்ளது. மொத்தமாக 64.66 சதவிகித வாக்குகள் பதிவாகின.

பீகார் சட்டமன்றத் தேர்தலில் இதுவரை அதிகபட்சமாக 2000-ஆம் ஆண்டு 62.57 சதவிகித வாக்குகள் பதிவாகியிருந்தன.
மக்களவைத் தேர்தலைப் பொறுத்தவரையில், இங்கு 1998-ஆம் ஆண்டு அதிகபட்சமாக 64.6 சதவிகித வாக்குகள் பதிவாகியிருந்தன.
மேலும், கடந்த சட்டமன்றத் தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவில் பதிவான வாக்குகளை விட 8.46 சதவிகித வாக்குகள் நேற்று அதிகமாக பதிவாகின.
இவ்வாறு பீகார் தேர்தல் வரலாற்றில் அதிக சதவீத வாக்குகள் பதிவானதற்கு, இந்திய தேர்தல் ஆணையத் தலைவர் ஞானேஷ் குமார் வாக்காளர்களுக்கும் தேர்தல் பணியில் ஈடுபட்ட பணியாளர்களுக்கும் நன்றி தெரிவித்தார்.

அதேபோல், பீகார் சட்டமன்றத் தேர்தலில் முதல்முறையாகக் களமிறங்கியிருக்கும் ஜன் சுராஜ் கட்சியின் தலைவர் பிரசாந்த் கிஷோர், “கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகளவில் வாக்குகள் பதிவாகியிருப்பது பீகாரில் மாற்றம் வருவதைக் குறிக்கிறது. நவம்பர் 14-ஆம் தேதி (வாக்கு எண்ணிக்கை முடிவுகள் வெளியாகும் நாள்) புதிய அமைப்பு நிறுவப்பட உள்ளது” என்று தெரிவித்திருக்கிறார்.
எப்போதும் இல்லாத வகையில் அதிகரித்திருக்கும் இந்த வாக்குப்பதிவு, SIR நடவடிக்கைக்கு எதிராக எதிர்க்கட்சிகள் பரப்பிய பேச்சுக்குப் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று வாக்குகள் பதிவான தொகுதிகளைத் தவிர, மீதமுள்ள தொகுதிகளுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நவம்பர் 11-ஆம் தேதி நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

















