"எங்க அம்மா கொடுத்த அந்த பிளாஸ்டிக் வாட்ச்.!" - நெகிழும் தனுஷ்
மயிலாடுதுறை: `எப்டி ஓட்டுனாலும் ரோட்ல விழுறது சாதாரணமாகிடுச்சி’ - பழையபாளையம் சாலையின் அவலம்
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே பழையபாளையம் ஊராட்சியில், கொடாக்காரமூலை முதல் பழையபாளையம் வரை செல்லும் சாலையானது சுமார் 1.5கி.மீ வரை ஐந்து வருடங்களாக குண்டும் குழியுமாக காட்சியளிப்பதோடு மட்டுமல்லாமல் தெருவிளக்குகள் இன்றியும் காணப்படுகிறது.
மேலும் கொடாக்காரமூலை கிராமத்தில் 200க்கும் மேற்பட்ட மாணாக்கர்கள் படிக்கும் அரசு உயர்நிலை பள்ளி ஒன்றும் இயங்கி வருகிறது. குண்டும் குழியுமான சாலையால் நாள்தோறும் பள்ளிக்கு செல்லும் மாணவர்கள், அன்றாட வேலைக்கு செல்லும் ஊழியர்கள், அத்தியாவசிய தேவைக்கு அடுத்த ஊருக்கு செல்வோர் என அனைவருக்கும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.
மேலும் கரடு முரடான சாலையால் நாள்தோறும் சிறு சிறு விபத்துகளும் ஏற்பட்ட வண்ணமே உள்ளது. தெருவிளக்குகளும் இல்லை சாலையும் சரி இல்லை என்பதால் ஏதேனும் விஷப்பூச்சி கடித்துவிடுமோ? விபத்துகள் ஏதும் ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சத்துடனே இரவில் இச்சாலையை பொதுமக்கள் கடந்து செல்கின்றனர்.

இதுக்குறித்து அப்பகுதி மக்களிடம் பேசியபோது, "இந்த ரோடு அஞ்சு வருசத்துக்கு மேல இப்டிதான் இருக்கு. இந்த ரோட்ல நடந்து போறதே பாத்து பக்குவமாத்தான் போகனும். கொஞ்சம் கவனம் தப்புச்சின்னாகூட விழுந்து அடிபட்டுதான் வீடு போயி சேரனும். காருல போன காரு டையர் எங்கியாச்சம் மாட்டிக்குது. இல்ல, காரை குழிக்குள்ள விட்டு காரையே சேதப்படுத்திடுது இந்த பாழாப்போன ரோடு. நடந்து போறத்துக்கே சரியில்லாத ரோட்ல சைக்கிள எப்டி ஓட்றதுன்னு தெரியாம பாவம் ஸ்கூல் புள்ளைங்க அப்டி இப்படின்னு சைக்கிள வளச்சி வளச்சி ஓட்டுவாங்க.

எப்டி ஓட்டுனாலும் ரோட்ல விழுறது எழுந்திருக்கிறதுன்னு அவங்களுக்கே ரொம்ப சாதாரணமாகிடுச்சி. இந்த ரோட்ல டெய்லியும் ஒரு சின்ன ஆக்ஸிடன்ட் ஆச்சம் நடத்துடுது. பழையபாளையத்துல உள்ள எல்லாரும் கொடக்காரமூலை வழியாத்தான் ஆச்சாள்புரம், கொள்ளிடம், சிதம்பரம்லா போவாங்க. பழையபாளையத்துல உள்ளவங்ளோட அத்தியாவசிய தேவையே இந்த ரோட நம்பிதான் இருக்கு. பழையபாளைத்துலேந்து வேலைக்கு போற நெறைய பேரு நைட்டு கொடக்காரமூலைல இறங்கி, அங்கேந்து வண்டியிலையோ, சைக்கிளையோ பழையபாளையம் போவாங்க.
தெருலைட்டும் இல்லாம, ரோடும் சரியில்லாம, பாவம் அவங்களாம். ரெண்டு சைடும் கொஞ்சம் வயலா வேற இருக்குறதுனால பாம்பு, விஷ பூச்சி எதாவது ரோட்ல இருக்குமோ, ரோட்ல எங்க பெரிய பள்ளம் இருக்ககோ? அப்டி இப்டின்னு அசுரபயத்தோடே திக்குமுக்காடிதான் வீட வந்தடைவாங்க. அந்த வழியில நாலு லைட் போஸ்ட் போடலாம். ஆனா, இன்னும் போட்ட பாடு இல்ல. போடுற மாதிரியும் தெரியல. இங்க உள்ள எல்லாருமே நல்லூர்ல உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு தான் போவோம். இந்த ரோடு வழியா போன நல்லூர் 3 கி.மீ தான்.

இந்த ரோடு இல்லாட்டி 7 கி.மீ சுத்திதான் போகனும். இந்த ரோட்லே போயிடலான்னு போனக்கூட வயசானவங்க, மாசமா இருக்குறவங்க, உடம்பு சரியில்லாதவங்களலாம் அழைச்சிட்டு போறப்ப ரோடு குண்டும் குழியுமா இருக்குறதுனால அலுங்கி குலுங்கி போகும்போது அவங்கலுக்கெலாம் எதாவது ஆயிடுமோன்னு பதட்டமாவே இருக்கும்.
இந்த ரோடு இப்டி இருக்குறதுனால நடந்து போறவங்க, பைக்ல போறவங்க, கார்ல போறவங்கன்னு எல்லாருக்குமே ரொம்ப சிரமமா இருக்கு. நெறைய ஸ்கூல் வேன், ஆம்புலன்ஸ்லாம் கூட இந்த வழியாத்தான் போகுது. எங்கையாச்சம் அவசரத்துக்கு போகனுன்னா கூட உடனே போக முடியாது. ஏன்னா? நின்னு நிதானமா போனதான் இந்த ரோட்ல போக முடியும். இதுல வேகமாக போனோம் அவ்ளோதான் ரோட்ல விழுந்து அடிப்பட்டு ஆஸ்பத்திரி தான் போவுனுன். நாங்க தேர்தலப்பையே பிரசிடன்ட்டுக்கிட்ட இந்த ரோடு போட்டு தரனுன்னு தான் கோரிக்கை வச்சோம்.

ரோடு போட்ட பாடு இல்ல. ஆட்சி முடிஞ்ச பாடு மட்டும் தான் மிச்சம். கவுன்சிலர் கிட்டையும் சொன்னோம். ஆனா, அவருக்கு கேட்க மட்டும் தான் நேரம் இருந்துச்சி. இதுவரையும் ஒன்னும் பண்ணல.
இந்த ரோட்டையும், லைட்டையும் மட்டும் போட்டுட்டா எங்க ஊர்ல எல்லாருமே எந்த பயமும் பதட்டமும் இல்லாமா போயிட்டு வருவோம். போயிட்டு வரவும் எந்த சிரமமும் இருக்காது. எப்டியாச்சும் சீக்கிரம் இந்த ரோடையும் லைட்டும் போட்டு கொடுத்துடுங்கப்பா" என்று கவலையுடன் கூறினர்.

இதுக்குறித்து பழைய பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் ஆறுமுகம் அவர்களிடம் விளக்கம் கேட்கையில், " 2024ஆம் ஆண்டே 700மீ புதிய தார்சாலை அமைக்க வேண்டும் என்று ஊராட்சி சார்பில் கொள்ளிடம் வட்டாட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்தோம். ஆனால், ஃபண்டு வரவில்லை என்று வட்டாட்சியர் அலுவலகத்தில் கூறுகிறார்கள்" என்றார்.
இதுக்குறித்து கொள்ளிடம் வட்டாட்சியர் ஜாக்சனை தொடர்புக்கொண்டு பேசியபோது, "புதிய சாலை அமைப்பதற்கான அறிக்கையானது தயார் செய்யப்பட்டு மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. மாவட்ட ஆட்சியர் ஒப்புதல் அளித்தவுடன் இத்திட்டம் விரைவில் நிறைவேற்றபடும்" என்றார்.
அரசு விரைந்து துறை ரீதியான நடவடிக்கை மேற்கொண்டு அப்பகுதியில் தரமான முறையில் புதிய தார் சாலையும், தெருவிளக்குகளும் அமைத்து அச்சமற்ற நிலையில் அப்பகுதி மக்களின் பயணத்தினை மாற்றி தர வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் ஒரே கோரிக்கையாக உள்ளது.
















