Bhgayashri Borse: 'டைரி மில்க் விளம்பரம் டு டோலிவுட்'; புதிய சென்சேஷன் 'காந்தா' ...
வீதிக்கு வந்த லாலு குடும்ப சண்டை: `செருப்பால் தாக்கிய தேஜஸ்வி?’ வீட்டிலிருந்து வெளியேறிய 3 மகள்கள்
பீகார் சட்டமன்ற தேர்தலில் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரீய ஜனதா தளம் படுதோல்வியை சந்தித்தது. இத்தோல்வி லாலுபிரசாத் யாதவ் குடும்பத்தையும் கடுமையாக பாதித்துள்ளது.
லாலு பிரசாத்திற்கு சிறுநீரகம் தானம் செய்த மகள் ரோஹினி ஆச்சாரியா தனது குடும்பத்தை துறப்பதாக இரண்டு நாட்களுக்கு முன்பு தெரிவித்தார். அவர் நேற்று மேலும் பல குற்றச்சாட்டுக்களை அழுதுகொண்டே தெரிவித்தார்.
``சகோதரர் தேஜஸ்வி தன்னை மோசமாக நடத்தினான். அவனுடனான தொடர்பைத்தான் துண்டித்துக்கொண்டுள்ளேன்” என்று தெரிவித்தார். என்ன பிரச்னை என்று நிருபர்கள் கேட்டதற்கு, ``அதனை தேஜஸ்வியிடமும், அவரது மனைவி ரேசல் யாதவிடமும் கேளுங்கள். தேஜஸ்வியின் கூட்டாளிகள் சஞ்சய் யாதவ் மற்றும் ரமீஸ் ஆகியோர் என்னை வீட்டை விட்டு துறத்தினர்.
செருப்பால் தாக்கப்பட்டாரா?
எனது பெற்றோர் எனக்கு ஆதரவாகத்தான் இருக்கின்றனர். எனது பெற்றோரும், சகோதரிகளும் எனக்காக அழுதனர். என்னை தேஜஸ்வி அவமானப்படுத்தினார். அடிக்க செருப்பை எடுத்தார். எனவே எனது சகோதரனுடனான தொடர்பை மட்டும் துண்டித்துக்கொண்டேன்.

மகன்கள் இருக்கும் போது மகள் மட்டும் ஏன் தியாகம் செய்யவேண்டும். நான் சபிக்கப்பட்டேன், என்னை அழுக்கு என்று சொல்லிட்டான். மேலும் என் தந்தையிடம் என் அழுக்கு சிறுநீரகத்தை தானம் செய்தேன் என்றும், அதற்காக கோடிக்கணக்கில் பணம் வாங்கிக்கொண்டதாகவும், தேர்தலில் போட்டியிட டிக்கெட் வாங்கியதாகவும் எனது சகோதரன் என்னிடம் தெரிவித்தான்.
எல்லா திருமணமான பெண்களுக்கும், உங்கள் தாய்வழி வீட்டில் ஒரு மகன் இருக்கும்போது, கடவுள் போன்ற உங்கள் தந்தையை ஒருபோதும் காப்பாற்ற வேண்டாம். அதற்கு பதிலாக, அந்த வீட்டின் மகனான உங்கள் சகோதரனிடம், அவரது சொந்த சிறுநீரகத்தையோ அல்லது அவரது நண்பர்களில் ஒருவரின் சிறுநீரகத்தையோ மாற்று அறுவை சிகிச்சை செய்யச் சொல்லுங்கள். அனைத்து சகோதரிகளும் ,மகள்களும் தங்கள் சொந்த வீடுகளையும் குடும்பங்களையும் கவனித்துக் கொள்ள வேண்டும். தங்கள் பெற்றோரை கவனிக்காமல், தங்கள் குழந்தைகளையும் மாமியார் வீட்டையும் கவனித்துக் கொள்ள வேண்டும். தங்களைப் பற்றி மட்டுமே சிந்திக்க வேண்டும்," என்று அவர் மேலும் கூறினார்.
அவர் டெல்லியில் உள்ள தனது சகோதரி வீட்டில் இருந்து மும்பையில் உள்ள தனது மாமியார் வீட்டிற்கு புறப்பட்டார்.
மேலும் 3 மகள்களும் வீட்டிலிருந்து வெளியேற்றம்
ரோஹினியை தொடர்ந்து லாலு பிரசாத்தின் மகள்களான ராகினி, சந்தா, ராஜலட்சுமி ஆகியோரும் பாட்னாவில் உள்ள தங்களது பெற்றோர் வீட்டை காலி செய்தனர். இது குறித்து லாலு பிரசாத் அல்லது அவரது மகன் தேஜஸ்வி எந்த வித கருத்தும் தெரிவிக்காமல் அமைதி காத்து வருகின்றனர். லாலு பிரசாத் யாதவ் மகன் தேஜஸ்வி யாதவ் கட்சியை தனது முழு கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாகவும், கட்சியை அவரது நெருங்கிய நண்பர்கள் கவனிப்பதாகவும் சகோதரிகள் குற்றம் சாட்டியுள்ளனர். அதோடு தேர்தல் தோல்வி தொடர்பாக தேஜஸ்வியிடம் கேள்வி எழுப்பியதால் குடும்பத்தில் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதற்கு முன்பு லாலு பிரசாத் யாதவின் மூத்த மகன் கடந்த மே 25ம் தேதி கட்சியில் இருந்தும், குடும்பத்தில் இருந்தும் நீக்கப்பட்டார். ரோஹினி அவமானப்படுத்தப்பட்டது குறித்து தேஜ் பிரதாப் யாதவ் கூறுகையில், ''பீகார் மக்கள் தங்கள் மகளுக்கு நடந்த இதுபோன்ற அநீதியை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள், மேலும் துரோகிகள் கட்சியிலிருந்து வெளியேற்றப்படுவார்கள். நேற்றைய சம்பவம் என்னை மிகவும் உலுக்கியது. எனக்கு நடந்ததை நான் பொறுத்துக்கொண்டேன், ஆனால் என் சகோதரிக்கு ஏற்பட்ட அவமானத்தை எந்த சூழ்நிலையிலும் தாங்க முடியாதது.
நீங்கள் குடும்பத்தைத் தாக்கினால், பீகார் மக்கள் உங்களை ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள். எனது சகோதரி செருப்பால் தாக்கப்பட்டார் என்ற செய்திய கேட்டு எனது இதயம் நொறுங்கியது'' என்று தெரிவித்தார். லாலு பிரசாத் யாதவ் இவ்விவகாரத்தில் அமைதியாக இருக்காமல் பதிலளிக்க வேண்டும் என்று ஐக்கிய ஜனதா தளம் கேட்டுக்கொண்டுள்ளது.















