BB Tamil 9 Day 31: திவ்யாவின் பதவியைத் தூக்கிய பிக் பாஸ்; முன்னேறிச்செல்லும் விய...
"ஹிட் படம் கொடுக்காத நான், அதை ஒத்துக்கிட்டுதான் ஆகணும்!" - இயக்குநர் கே.பி.ஜெகன்
`புதிய கீதை' படத்தின் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமானவர் இயக்குநர் மற்றும் நடிகர் கே.பி. ஜெகன்.
குடும்பத் திரைப்படங்களில் வரும் இவருடைய கதாபாத்திரங்கள் நம் இல்லங்களில் இருக்கும் ஒருவரைப் போன்ற நெருக்கமான உணர்வையே பார்வையாளர்களுக்கு தந்துவிடும்.
கடந்த 2017-ம் ஆண்டு இவர் இயக்கியிருந்த 'என் ஆளோட செருப்பைக் காணோம்' படத்திற்குப் பிறகு இவர் டைரக்ஷன் பக்கம் வரவில்லை.

சமீப நாட்களாக இயக்குநர் பாண்டிராஜ் இயக்கிய படங்களில் இயக்குநர் குழுவில் பணியாற்றி வந்தவர் இப்போது அவருடைய புதிய படத்தைத் தொடங்கியிருக்கிறார்.
`ரோஜா மல்லி கனகாம்பரம்' என்கிற அப்படத்தை கே.பி. ஜெகனே இயக்கி நடிக்கிறார். அப்படத்திற்காக வாழ்த்துகளைச் சொல்லி அவரிடம் பேசினோம்.
கலகலப்பாக பேசத் தொடங்கியவர், ``2017-ல எனக்கொரு சம்பவம் நடந்தது. அந்த சம்பவத்தை வைத்துதான் இந்த `ரோஜா மல்லி கனகாம்பரம்' படத்தை எடுத்து முடிச்சிருக்கேன்.
அன்னைக்கு அந்த சம்பவத்தை வச்சு ஒரு படம் பண்ணணும்னு யோசித்தேன். 8 வருஷத்துக்குப் பிறகு இப்போ அது சாத்தியமாகியிருக்கு.
இது த்ரில்லர் படம்தான். அதே சமயம் படத்துல காமெடி மற்றும் எமோஷனல் டச்சும் இருக்கும்.
முழுக்க முழுக்க சீரியஸாகவே படம் நகராது. மக்களை என்டர்டெயின் செய்யும் வகையிலதான் படம் இருக்கு. நான் நினைச்சதைவிட படம் சிறப்பாக வந்திருக்கு.

கடவுள் அருள்தான் அதுக்கெல்லாம் காரணம். திருச்செந்தூர், தூத்துக்குடி, குலசை ஆகியப் பகுதிகள்லதான் படத்தின் கதையை அமைத்திருக்கோம். அந்த அழகான பகுதியிலேயே படத்தையும் எடுத்து முடிச்சிருக்கோம்.
`தலைவன் தலைவி' படத்தை திருச்செந்தூர்லதான் தொடங்கினோம். எந்தவொரு இடையூறும் ஏற்படாமல் படத்தை அழகாக எடுத்து முடிச்சோம்.
அதே மாதிரி முருகன் அருளோட இந்தப் படத்தையும் அங்கதான் தொடங்கினோம்." என்றவர், " உண்மையைச் சொல்லணும்னா, இந்த கதை என்னை லவ் பண்ணுது. இந்த தலைப்பு எனக்கு ரொம்பவே நெருக்கமானதுன்னு சொல்லலாம்.
இதுக்கு முன்பே நான் செய்த படங்களுக்கு இதே தலைப்பை பொருத்திப் பார்த்திருக்கேன். ஆனா, இந்த கதைக்குதான் அது மிகக் கச்சிதமாக பொருந்தி வந்திருக்குனு சொல்லலாம். இந்தப் படத்துக்கு ஶ்ரீகாந்த் தேவா மியூசிக் போட்டிருக்கார்.
அவருடைய வழக்கமான ஸ்டைல் இல்லாமல், வித்தியாசமான இசையை போட்டுக் கொடுத்திருக்காரு." என்றவரிடம், "டைரக்ஷனில் ஏன் இந்த இடைவெளி" எனக் கேட்டதற்கு, " 'என் ஆளோட செருப்பைக் காணோம்' படம் சரியாகப் போகல.
மிகப்பெரிய வெற்றி படம் கொடுத்தாலும் ஒரு ஹீரோவுடைய டேட் இருந்ததால்தான் அந்த இயக்குநருக்கு அடுத்த படம் கிடைக்கும்.
ஹிட் படம் கொடுக்காத எனக்கு அடுத்த படம் அமையலங்கிறதை ஒத்துக்கிட்டுதான் ஆகணும்.

இதற்கிடைப்பட்ட காலத்துல பாண்டிராஜ் சார்கூடவும், ராஜூமுருகன் சார்கூடவும் வேலை பார்த்தேன். இப்போ `LIK' படத்துலையும் வேலை பார்த்திருக்கேன். இணை இயக்குநர்னு மட்டும் கிடையாது.
பட்ஜெட்ல இருந்து அத்தனை துறைகளிலும் பொறுப்புகளை எடுத்து மற்ற படங்கள்ல வேலை செய்வேன். கடந்த சில ஆண்டுகளாக நடிகராகவும் பாண்டிராஜ் சார் படங்கள்லதான் நடிச்சிருந்தேன். நானாகவே போய் யார்கிட்டையும் நடிக்கிறதுக்கு வாய்ப்புகள் கேட்க மாட்டேன்.
மற்றவர்களை சிரமப்படுத்தவும் எனக்குப் பிடிக்காது. அப்படியான சமயத்துல நான் ராசு மதுரவன் சாரை ரொம்பவே மிஸ் செய்தேன்னு சொல்லலாம்.
பாண்டிராஜ் சார் எனக்கு ரொம்பவே ஃப்ரீடம் தருவாரு. பைக், கார்னு ஒவ்வொரு படம் முடிஞ்சதுக்குப் பிறகும் ஒவ்வொரு கிஃப்ட் தருவாரு. இப்போ `தலைவன் தலைவி' வெற்றிக்கும் ஒரு சப்ரைஸ் கிஃப்ட் கொடுத்தாரு!" என்றார்.
" 'தலைவன் தலைவி' படம் ரிலீஸாகி, வெற்றி விழாவெல்லாம் கொண்டாடிய பிறகு என்னுடைய படத்திற்கான வேலைகள்ல இறங்கினேன். `LIK' படமும் ரொம்ப நல்லா வந்திருக்கு.
அந்தப் படத்தை எடுப்பதே ரொம்ப கஷ்டம். அந்தப் படத்தை ரீமேக் செய்யவே முடியாது. சில நாட்களுக்கு முன்னாடி படத்தோட ஃபைனல் வெர்ஷன் பார்த்தேன்.
பிரமிக்க வைக்கும் படமாக வந்திருக்கு." என்றவரிடம், '' நீங்கள் இயக்குநர் சேரனின் முதல் உதவி இயக்குநர்.

அவருடைய கல்ட் க்ளாசிக் படமான `ஆட்டோகிராஃப்' படம் இம்மாதம் ரீ ரிலீஸாகிறது. எவ்வளவு எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறீர்கள்?" எனக் கேட்டோம். பதில் தந்த ஜெகன், " ரொம்ப ஆவலாக காத்திருக்கேன். அந்தப் படத்தின் ரிலீஸ் சமயத்தில நிகழ்ந்த ஒரு சம்பவமும் இருக்கு. `ஆட்டோகிராஃப்' ரிலீஸ் ஆகும்போது எங்க இயக்குநருக்கு 3 கோடி ரூபாய் கடன் இருந்தது.
எப்படியாவது அந்த கடன்ல இருந்து அவர் வெளிய வந்திடணும்னு நான் விரும்பினேன். அதனால, சென்னையில ஒரு 6 தியேட்டர் தவிர்த்து மற்ற அனைத்து தியேட்டர் ரீல்களில் 20 நிமிட காட்சிகளை தூக்கிட்டேன்.
படத்தினுடைய 100-வது நாள் விழாவுல அந்த விஷயத்தை யாரோ அவர்கிட்ட சொல்லிட்டாங்க. அதைக் கேள்விப்பட்டதும் என்னை சேரன் சார் திட்டினாரு.
அவர் திட்டியிருந்தாலும் அவருக்குள்ள ஒரு மகிழ்ச்சி இருந்திருக்கும். இப்படியான உரிமையை நான் எடுக்கிறளவுக்கு சார் சுதந்திரம் கொடுத்திருக்கார்.

அந்தப் படம் எங்க லைஃப்யே மாத்திடுச்சுனு சொல்லலாம். அந்தப் படத்துல உயிரும் உண்மையும் இருக்கும்.
பிறகு, அந்தப் படத்தினுடைய வெற்றிக்கு எனக்கு சேரன் சார் பைக் வாங்கித் தந்தாரு. இன்னைக்கு மறுபடியும் அந்தப் படத்தை ப்ரஷராக பார்க்கப்போறோம்.
நான் அளவை குறைச்ச வெர்ஷன்ல வருதா, இல்லை என்ன வெர்ஷன்ல வருதுனு பார்ப்போம்(சிரிக்கிறார்)." என முடித்துக்கொண்டார்.




















