தொடர் தோல்வி; 3 ஆண்டுகளுக்கு பிறகு பிரசாந்த் கிஷோரை அழைத்து பேசிய பிரியங்கா காந்...
BB Tamil 9 Day 70: சண்டை சான்ட்ரா; மகுடி ஊதும் பாரு - இந்த `குட் காம்பினேஷன்' தொடருமா?
‘டாஸ்குகளை நீங்கதான் யோசிச்சு சுவாரசியமா செய்யணும். யாரும் சொல்லித் தர முடியாது’ என்கிறார் ஹோஸ்ட். ஆனால் ஒரு டாஸ்க் முடிந்த பிறகு ‘ஏன் அப்படி செஞ்சீங்க?’ என்று வார இறுதியில் கேட்டு குடாய்கிறார்.
கோர்ட் டாஸ்க்கானது, ஒருவேளை ரியல் நீதிமன்றம்போல் நடந்திருந்தால் நமக்கு என்ன சுவாரசியம் கிடைத்திருக்கும்? நீதிபதி நாற்காலியில் அமர்ந்துகொண்டு வினோத் அடித்த கமென்ட்டுகள் சற்று மிகை என்றாலும், வறட்சியான டாஸ்க்கில் அவைதானே கொஞ்சமாவது சுவாரசியம் அளித்தன?
சிறப்பாக நடித்த வக்கீல் விக்ரமையும், நீதிபதி அமித்தையும் விசே நன்றாகவே பாராட்டியிருக்கலாம்.

பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? - நாள் 70
முந்தைய எபிசோட் சீரியஸாக போனதால், இந்த எபிசோடை ஏதாவது காமெடி சீனோடு ஆரம்பிக்க பிக் பாஸ் டீம் திட்டமிட்டதுபோல, எனவே ‘தல’ டாஸ்க்கில் நடந்த காமெடி காட்சிகளை ஒளிபரப்பினார்கள்.
அது நகைச்சுவையாக இருந்தது என்பதில் மறுப்பில்லை. ஆனால் அவசியமான நேரங்களில் தேவைப்படுகிற ‘குறும்படம்’ என்கிற ஆயுதத்தை சரியாக உபயோகிக்காமல், பார்வதி சமையல் காமெடி, தல டாஸ்க் காமெடி என்று செல்வதால், குறும்படத்திற்கு உண்டான மரியாதையே போய்விட்டது.
காமெடி ஷோ முடிந்ததும் ‘கோர்ட் டாஸ்க்’ பற்றி விசாரிக்க ஆரம்பித்த விசே, “decorum -ன்ற வார்த்தையைப் பத்தி தெரியுமா.. இந்த டாஸ்க்கை நீங்க சீரியஸா எடுத்து ஆடியிருந்தா நல்லா இருந்திருக்கும். ஷூட்டிங்க்ல நடிக்கும் போது இப்படித்தான் காமெடி பண்ணுவீங்களா?” என்றெல்லாம் கேட்டு விட்டு கோர்ட்டில் யார் அதிகம் சேட்டை செய்தது?” என்று கேட்டார்.
முதலில் எழுந்த கனி, பார்வதியை சரியாக போட்டுக்கொடுக்க, பதட்டமடைந்த பாரு, பதில் சொல்ல ஆரம்பிக்க “பாரு சைலன்ஸ்.. எத்தனையோ முறை சொல்லிட்டேன். உங்க டர்ன் வரும் அப்ப பேசுங்க” என்று பாருவை கண்டித்தார் விசே. அடுத்து எழுந்த திவ்யாவும் “பாரு பேசிட்டே இருந்தாங்க. நீதிபதியா இருந்த நான் ‘அமைதியா இருங்க.. இல்லைன்னா வெளியே போயிடுங்க’ன்னு சொன்னதற்கு முறைச்சாங்க. வெளிய வந்தப்புறம் ‘வேற மாதிரி ஆயிடும்ன்னு’ சொன்னாங்க” என்றார்.
வக்கீல் குடும்பத்தைச் சேர்ந்த பாரு, கோர்ட்டில் அடித்த லூட்டிகள்
“பாரு உங்களுக்கு கோர்ட் நடைமுறைகள் தெரியும்தானே?” என்று விசே கேட்க “எங்க ஃபேமிலில நிறைய கிரிமினல் லாயர்ஸ் இருக்காங்க.. அதனால நல்லாவே தெரியும். ரொம்ப கட்டுப்படுத்திட்டுதான் இருந்தேன். ஆனா முடியல” என்று ‘கிரிமினல்’தனமாக சமாளித்தார் பாரு.
“உங்களுக்கே நல்லா தெரியும்ன்ற போது ஏன் இப்படி துள்ளிக்கிட்டே இருந்தீங்க.. FJ-வை மட்டும் ரொம்ப துள்றான்னு சொன்னீங்க. நீங்க பண்ணதுக்கு பேர் என்ன.. ஒவ்வொரு வீக்கெண்ட்லயும் அதையேதான் பண்றீங்க?” என்று பாருவை கேள்விகளால் மடக்கினார் விசே.

“Decorum-ன்னா என்னங்கய்யா?” என்று வெள்ளந்தியாகக் கேட்டார் வினோத். அதைப் பற்றிச் சொல்லிவிட்டு “நீதிபதி சேர்ல உக்காந்து காமெடி பண்றீங்க.. டாஸ்க்கிற்கு மரியாதை கொடுத்து விளையாடணும்” என்று விசே கண்டிக்க “அது ஜாலியான கேஸ்.. அதான் அப்படி செஞ்சேன்” என்று பம்மினார் வினோத்.
விசே பிரேக்கில் சென்றதும் “நான் கோர்ட்ல நிறையவா பேசினேன்?” என்று பாரு அப்பாவித்தனமாக நடிக்க “ரொம்ப எரிச்சலா இருந்தது. அப்படி பண்ணே.. அது சரி.. அதானே உன் நேச்சுரல் கேரக்டர்” என்று சர்காஸமாகச் சொன்னார் விக்ரம்.
விசாரிச்ச கேஸையே மறுபடியுமா விசாரிப்பாங்க?
பிரேக் முடிந்து திரும்பிய விசே. ஒவ்வொரு வழக்காக எடுத்து அதிலுள்ள குளறுபடிகளை ஆராயத் துவங்கினார் விசே. பரபரப்பாக செல்ல வேண்டிய வீக்கெண்ட் ஷோவை எப்படியெல்லாம் சொதப்பலாம் என்பதற்கு இதெல்லாம் நல்ல உதாரணம்.
“வினோத் கேஸ்ல நீங்க ஏன் தோத்தீங்க?” என்று ஆதிரையிடம் கேட்க “அமித் பாரபட்சமா நடந்துகிட்டாரு. ஆனா திவ்யா அப்படி நடக்கலை” என்றார் ஆதிரை. வினோத்திற்கும் திவ்யாவிற்கும் ஆகாது என்பது அந்த வீட்டிற்கே தெரியும். அதனால்தானே அவரை நீதிபதியாக ஆதிரை தேர்ந்தெடுத்தார்? வழக்கிற்கு சம்பந்தமில்லாமல்தான் தீர்ப்பு அளித்து முடித்தார் திவ்யா.
அடுத்த வழக்கு. “பாரு.. நீங்க ஏன் தோத்தீங்க?” என்று விசே கேட்க “அந்தக் கொடுமையை ஏன் கேக்கறீங்க.. லவ் பண்ற பாவத்துக்கு இவனை லாயரா போட்டேன். இவனாலதான் தோத்தேன்’ என்கிற மாதிரி கம்ருதீனை குற்றம் சாட்டினார் பாரு.

அது தவிர இன்னொரு காரணத்தையும் சொன்னார் பாரு. “அரோவை ஹர்ட் பண்ண வேண்டாம்ன்னு சாப்டா கேள்வி கேட்டாரு. மிடில் கிரவுண்ட்ல ஆடினாரு. அதனாலதான் தோத்துட்டேன்” என்றார் பாரு.
“அப்படிங்களா.. அப்ப கோர்ட்ல இருந்து வெளியே வந்தவுடனே.. கிச்சன் ஏரியால ஒரு சண்டை நடந்தது. அதுல அரோராவை கிழி கிழின்னு கிழிச்சாரே.. கம்மு.. அப்ப மட்டும் அரோவிற்கு ஹர்ட் ஆகாதா… இப்படி சண்டை போடத் தெரிஞ்ச ஆளுக்கு கோர்ட்ல கேள்வி கேக்க வரலையா?” என்று சரியாக மடக்கினார் விசே.
“ஏன் கம்முவை லாயரா போட்டீங்க?” என்று பாருவிடம் கேட்கப்பட்டதற்கு “நான் விஷயங்களை ஈஸியா மறந்துடுவேன். அவன் நல்லா ஞாபகம் வெச்சிருப்பான். ஆனா சொதப்பிட்டான். அவனை சாட்சியா சேர்த்திருக்கணும்” என்றார் பாரு.
அமித்தை அநாவசியமாகத் திட்டுகிறாரா விசே?
பாருவின் சார்பாக ஆஜரான வக்கீல் அமித்திற்கும் ஊமைக்குத்து விழுந்தது. “பால் இல்லாம வீட்ல அத்தனை பிரச்சினை நடந்திருக்கு. ஆனால ‘தல’யான உங்களை வெச்சே பாரு கேம் ஆடியிருக்காங்க” என்று விசே சொல்ல, “நானேதான் வக்கீல் கேரக்டர் கேட்டேன்” என்று தானே தலையைக் கொடுத்தார் அமித்.
“யப்பா.. என்னை யாராவது வக்கீலா கூப்பிடுங்க.. நல்லா பேசுவேன்” என்று டாஸ்க் சமயத்தில் கெஞ்சிக் கொண்டிருந்தார் அமித். சொன்னது போலவே பாருவின் தவறுகளையெல்லாம் சாமர்த்தியமாக மூடி மழுப்பிக் கொண்டிருந்தார். அமித்தை தேவையில்லாமல் ஏன் விசே குத்துகிறார் என்பது புரியவில்லை.
கடைசியாக, FJ மீது ஆதிரை போட்ட வழக்கு பற்றிய விசாரணை. “FJ மேல் உள்ள புகார்களை கோர்ட் டாஸ்க்லதான் சொல்லணுமா, வெளிலகூட காமிரா இருக்கே.. அங்க சொல்லியிருக்கலாமே.. கோர்ட் டாஸ்க் வரும்ன்னு முன்னாடியே தெரியுமா?” என்றெல்லாம் ஆதிரையை மடக்கினார் விசே.
ஆனால் இந்த வழக்கை தங்களுக்குச் சாதகமாக நகர்த்திய வக்கீல் விக்ரமையும் வழக்கில் சம்பந்தப்பட்ட FJ-வையும் போட்டு துவைத்து எடுத்துவிட்டார். “சாட்சிகளை விசாரிக்க விடாம மொத்தமா மன்னிப்பு கேட்டுட்டு கேஸை சாமர்த்தியமா முடிச்சிட்டீங்க.. அதுக்கப்புறம் அந்த வெற்றியைக் கொண்டாட செய்யறீங்க.. இதெல்லாம் நல்லாவா இருக்கு?” என்று காட்டமானார் விசே.

சாமர்த்தியமான வக்கீலை பாராட்டாமல் விமர்சித்த விசே
இதே வழக்கு நிஜத்தில் நடந்தால் என்னவாகும்? தனது கட்சிக்காரரை எப்படியாவது காப்பாற்றத்தான் ஒவ்வொரு வழக்கறிஞரும் முயல்வார். “பேசாம குத்தத்தை ஒப்புத்துக்க. குறைஞ்ச தண்டனையோட போயிடும்” என்று அறிவுறுத்துவார். விக்ரம் செய்ததும் அப்படியொரு சாமர்த்தியமான செயல்தானே?! எதிர்க்கட்சி வக்கீலாக இருந்த அரோராதான் இந்த டெக்னிக்கை உடைத்து சாட்சிகளை பேச வைத்திருக்க வேண்டும். இதுதானே ஆட்டம்?!
‘டாஸ்க்கை கோர்ட் ஸ்டைலில் விளையாடுங்கள்’ என்று சொல்லும் விசே விக்ரமை ஏன் அப்படி காய்ச்சினார் என்பது புரியவில்லை.

இந்த சாமர்த்தியத்தால் ஆதிரைக்கு நீதி கிடைக்கவே கிடைக்காதா என்ன? கோர்ட் டாஸ்க்கை தாண்டி வெளியில் நிரூபிக்க பல சந்தர்ப்பங்கள் இருக்கின்றன.
ஆனால் FJ செய்த தவறு என்ன? கோர்ட்டில் மன்னிப்பு கேட்டு விட்டு வெளியில் போய் “பாவம் பார்த்துதான் கோர்ட்டில் சும்மா இருந்தேன்.. உன்னைப் பத்தி நான் பேசினா உன் கரியரே கெட்டுடும்’ என்று ஆதிரையிடம் மிரட்டும் பாணியில் பேசியதுதான். எனில் அவர் மனமார மன்னிப்பு கேட்கவில்லை என்றுதான் பொருள்.
FJவின் இரட்டை நாடகத்தை அரோரா துணிச்சலாக எதிர்த்ததும் அதை சபையில் பதிவு செய்ததும் நன்று. இதை விசே பாராட்டியதும் சிறப்பு. அரோ தன்னை சபையில் போட்டுக் கொடுத்து விட்டார் என்பதற்காக முரட்டுத்தனமாக சண்டையிட்டார் FJ. அவர் யார் என்பதை அவரது முன்கோபமே காட்டிக் கொடுத்துவிட்டது.
வெளியேறிய வியானா - அவரிடமும் கடலை போட்ட கம்மு
எவிக்ஷன் நேரம். காப்பாற்றப்பட்டவர்களுக்கு அட்வைஸ் செய்தார் விசே. இறுதியாக மிஞ்சியவர்கள் FJ மற்றும் வியானா. ‘வியானாதான் வெளியேறுவார்’ என்று மெஜாரிட்டியாக யூகித்தார்கள். அதுதான் நடந்தது.
‘க்யூட்னஸ்’ என்கிற பெயரில் ஆரம்பத்தில் சொதப்பி, பிறகு சுதாரித்து நன்றாக ஆடத் துவங்கிய வியானா, FJ-வுடன் ரொமான்ஸில் விழுந்த பிறகு சொதப்ப ஆரம்பித்தார். அது அவரது வெளியேற்றத்திற்குக் காரணமாக அமைந்துவிட்டது.

மேடைக்கு வந்த வியானா, விசேவுடன் பேசிவிட்டு, வீட்டில் உள்ளவர்களுடன் பேசிய போது “இந்த கம்மு இருக்கானே.. யாரும் இல்லாதபோது வந்து.. ‘நான் வீட்டுக்கு வந்து உங்க அம்மா கிட்ட பேசறேன்..ன்னு சொல்வான்.. உன்னை முன்னாடியே சரியா பார்த்திருந்தா.. இந்த ரெண்டு பேர்கிட்டயும் அவஸ்தைப் படமாட்டேன்னு பிட்டு போடுவான்’ என்று ஜாலியாக போட்டுக் கொடுக்க “இந்த விஷயம் பாருவிற்கு தெரியுமா?” என்று விசேவும் ஜாலியாக கோத்துவிட்டார். பாருவின் எக்ஸ்பிரஷன் வழக்கம்போல் கோணலாகியது. கம்மு போன்ற ரக்கட் பாய்களைத்தான் பெண்கள் விரும்புவார்கள்போல.
வியானாவை வழியனுப்பி விட்டு விசேவும் விடைபெற்றுக் கொண்டார். பிறகு நடந்தது ஒரு டிராமா.
அழுகாச்சி சான்ட்ரா - மகுடி ஊதும் பாரு
பாருவிற்குப் பிறகு பார்வையாளர்களை அதிகம் எரிச்சலூட்டுபவராக இருப்பவர் சான்ட்ரா. எப்போது அழுவார், எப்போது கோபப்படுவார், அதற்கு என்ன காரணம் என்று எதையுமே யூகிக்க முடியாது. வீட்டில் உள்ள அனைவரும் அவரை குழந்தை போல pamper செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறார். அவருக்கு எதிராக சிறு முணுமுணுப்பு வந்தாலும் ‘விமன் கார்டை’ தூக்கி பத்ரகாளியாக மாறி விடுகிறார்.
சான்ட்ராவும் திவ்யாவும் வந்த புதிதில் இணை பிரியா தோழிகளாக இருந்தார்கள். இருவரும் சேர்ந்து நிறைய அட்ராசிட்டிகளை செய்தார்கள். சிறைக்கு செல்ல மாட்டோம் என்று விக்ரமை அவமானப்படுத்தினார்கள். ஆனால் ஒரு கட்டத்தில் திவ்யா மீது சான்ட்ராவிற்கு வெறுப்பும் சந்தேகமும் வந்துவிட்டது. அதை உட்கார்ந்து பேசி தீர்த்துக்கொள்ளலாம்.

ஆனால் இதை மனதில் அப்படியே வைத்துக்கொண்டு கொதிக்கும் பாய்லர் போல பல நாட்களுக்கு பொங்கிக் கொண்டேயிருக்கிறார். நட்பைப் புதுப்பிக்க வந்த திவ்யாவை பல சமயங்களில் கோபத்துடன் விரட்டி அடித்திருக்கிறார்.
இன்றும் அதேதான் நடந்தது. ‘சான்ட்ரா ஏன் என் கிட்ட பேசமாட்றாங்கன்னு எனக்குத் தெரியல. ஆனா அவங்களைப் பத்தி நான் ஏதோ தப்பா பேசினதா நெனச்சிட்டு இருக்காங்க. அதை கிளியர் பண்ண விரும்பறேன்” என்று கூட்டத்தைக் கூட்டினார் திவ்யா.
‘என்னால் இதில் கலந்து கொள்ள முடியாது’ என்று எரிச்சலுடன் எழுந்து சென்றார் சான்ட்ரா. “அது தப்பும்மா. அப்படி போகக்கூடாது” என்று மற்றவர்கள் ஆட்சேபம் செய்த போது “நான் பாத்ரூம் போகணும்.. எனக்கு பீரியட்ஸ்.. அதுக்குக்கூட போகக்கூடாதா,. அப்படி என்ன முக்கியமான மீட்டிங்கா இது.. இப்படி பண்ணி அவளுக்கு என்னதான் கிடைக்கப்போகுது.. என்னைப் பழிவாங்கணுமா?” என்று வழக்கம் போல் ருத்ரதாண்டவம் ஆட ஆரம்பித்துவிட்டார் சான்ட்ரா. இப்படி கத்தி விட்டு பிறகு கேவி கேவி அழுவது சான்ட்ராவின் ஸ்டைல்.

இப்படி அவர் நடந்து கொள்ளும்போது மற்றவர்கள் என்ன செய்வார்கள்? வேறு வழியில்லாமல் எரிச்சலை மறைத்துக்கொண்டு சமாதானப்படுத்த முயற்சி செய்வார்கள். ஆனால் சான்ட்ராவை இப்படி காலில் விழுந்து சமாதானப்படுத்த வேண்டும் என்று எந்தப் போட்டியாளருக்கும் அவசியமில்லை. வினோத் ஏதோ சொல்லிவிட்டார் என்பதற்காக அவர் மீதும் பாய்ந்தார் சான்ட்ரா. விடாப்பிடியாக திவ்யா விளக்கம் சொல்ல வந்த போது காதை அடைத்துக் கொண்டு டிராமா செய்தார் சான்ட்ரா.
இப்போதைக்கு உயிர்த் தோழியாக இருக்கிற பாருவை அழைத்து “பாரு.. இதையெல்லாம் பாரு.. என்னை என்னவெல்லாம் பண்றாங்க?”என்று சான்டரா புலம்ப, “ஆமாக்கா.. இந்த திவ்யா இப்படித்தான்..” என்று மகுடி ஊத ஆரம்பித்து விட்டார் பாரு. (நல்ல கூட்டணி!)
ரம்யா மற்றும் வியானா இந்த வாரத்தில் வெளியேறியது சரியானதுதான். ஆனால் அவர்களுக்குப் பதிலாக அவசியமாக வெளியேற்றப்பட வேண்டிய நபர்களாக யாரைச் சொல்வீர்கள்?
















