Jana Nayagan release ஆவதில் சிக்கல், நீதிமன்றத்தில் இன்று நடந்தது என்ன? | PMK | ...
BB Tamil 9 Day 92: பிக் பாஸின் மிளகாய் அல்வா; விக்ரமை உடைப்பது தான் வியானாவின் இலக்கா? | ஹைலைட்ஸ்
இந்த வியானாவை எதற்கு உள்ளே வரவழைத்தார்கள் என்று தெரியவில்லை. ஏதாவது சீரியஸாக பேசி போட்டியாளர்களை உளவியல் ரீதியாக பாதிக்க வேண்டும் என்பது பிளான் போல. ஏற்கெனவே டவுன் ஆகியிருக்கும் விக்ரம் மட்டுமே அதிகம் நொந்து போனார்.
மற்றபடி வியானா செய்வதெல்லாம் ‘கோவம் வர மாதிரி காமெடி பண்ணாத’ ரேஞ்சில்தான் இருக்கிறது.

பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? - நாள் 92
‘யார் இறுதி வரைக்கும் செல்லக்கூடிய போட்டியாளர்?’ என்று விக்ரமும் அரேராவும் பேசிக் கொண்டிருந்தார்கள். ஸ்கோர் போர்டில் உயர்ந்த இடத்தில் இருந்து, டிக்கெட்டை வெல்லக்கூடிய வாய்ப்பு அதிகமிருந்த சபரி, சான்ட்ராவிற்கு உதவ காரில் இருந்து இறங்கினார். டிக்கெட்டை பறிகொடுத்தார். அந்த நற்குணத்திற்காக அவரே ஃபைனல் செல்ல வேண்டும் என்று இருவரும் சொன்னது சிறப்பு.
“வினோத்திற்கு இன்னமும் பக்குவம் வரலை. கோபத்தை கை விட முடியலை” என்று அரோ சொன்னது ஓகே. ஆனால் ‘சான்ட்ராவிற்கு நியாயம் கிடைச்சாகணும்’ என்கிற மாதிரி சொன்னது மட்டும் சரியில்லை.
வினோத் ரகசியமாக கடிதம் எழுதுவதை வைத்து “ஸாரியெல்லாம் வேணாம்..அதான் பேண்ட் போட்டிருக்கீங்களே’ என்று 1980-ம் காலத்து காமெடியெல்லாம் செய்து கொண்டிருந்தார் பிக் பாஸ். ‘ரெண்டு பேனா வெச்சிருக்கீங்களே?’ என்று அவர் சொன்ன போது வில்லங்கமான காமெடி செய்கிறாரோ என்று தோன்றி விட்டது.
ஆறு நபர்களையும் சபையில் அமர்த்திய பிக் பாஸ், ‘ஆபிஸ் ரூமிற்கு வாங்க’, என்று நாமினேஷனுக்கு அழைக்கிற மாதிரி அழைத்தார். ‘யாரையாவது ஒருவரை காப்பாற்ற வேண்டுமெனில் ஒரு பச்சை மிளகாயை சாப்பிட வேண்டும்’ என்கிற chilli தனமான டாஸ்க்.
‘சிவாஜி’ திரைப்படத்தில், காதலியை இம்ப்ரஸ் செய்வதற்காக பச்சை மிளகாய்களை நறுக் மொறுக் என்று தின்று விட்டு பாத்ரூமிற்கு ஓடிச் சென்று குடல் வழியாக ஆவி வருவது போல் தவிக்கும் ரஜினி காமெடியை இவர்களும் செய்து கொண்டிருந்தார்கள்.

பச்சை மிளகாய் டாஸ்க்கின் மூலம் அல்வா கொடுத்த பிக் பாஸ்
முதலில் வந்த வினோத், சபரியைக் காப்பாற்ற தண்டனை ஏற்றது சரி. ‘கண்ணா இன்னொரு லட்டு தின்ன ஆசையா?’ என்று பிக் பாஸ் கேட்க, “இல்ல.. பாஸ்.. மிச்சம் ஆளுங்க வேணும்” என்று எஸ்கேப் ஆனார். ஒரேயொரு மிளகாய் சாப்பிட்டு புத்திசாலித்தனமாக தப்பித்தவர் இவர் மட்டுமே.
அடுத்து வந்த திவ்யா, சாப்பிடுவதற்கு மிகவும் தயங்கினார். “மக்கள் பார்த்துட்டு இருக்காங்க. நிலைமையை யோசிச்சிக்கங்க.. தியாகம் பண்ணாத திவ்யான்னு பட்டப் பெயர் கிடைக்கும்” என்கிற மாதிரி பிக் பாஸ் நெருக்கடி தர “சாப்பிட்ட பிறகு என் நிலைமை என்னவாகுன்னு தெரியலையே” என்று சொல்லி விட்டு சான்ட்ராவைக் காப்பாற்ற முடிவு செய்தது அதிர்ச்சி.
பிறகு வந்த மற்றவர்களும் சான்ட்ராவைக் காப்பாற்றுவதாக சொல்லி அதிர்ச்சி தந்தார்கள். சான்ட்ராவின் இன்னொரு முகம், வீட்டில் உள்ளவர்களுக்கு தெரியவில்லையா அல்லது சான்ட்ராவைக் காப்பாற்றினால் சபரி போல தனக்கும் மைலேஜ் கிடைக்கும் என்கிற கணக்கா அல்லது உண்மையிலேயே சான்ட்ராவின் மீது அனுதாபப்படுகிறார்களா? எப்படியிருந்தாலும் சபரி, விக்ரமை பின்னுக்குத் தள்ளி விட்டு சான்ட்ராவை முன்னே வைப்பது தவறான முடிவு.
‘நான் அடிச்சத யாருக்கும் சொல்லக்கூடாது’ என்று பிக் பாஸ் சொல்லி விட்டதால், முகத்தை சிரித்தாற் மாதிரி வைத்துக் கொண்ட வினோத், ‘தித்திக்குதே…’ என்கிற பாடலைப் பாடியது டைமிங் காமெடி. அடுத்து வந்த திவ்யாவும் முகத்தை அஷ்டகோணலாக வைத்துக் கொண்டு வர “வா.. ராஜா.. உன் மூஞ்சி ஏன் அப்படி இருக்குன்னு எனக்கு மட்டும்தான் தெரியும். சேர்ந்து கொண்டாடலாம்” என்கிற மாதிரி திவ்யாவை வினோத் அணைத்துக் கொண்டது நகைச்சுவை.
“எனக்கு அல்சர்லாம் இருக்கே” என்று பயந்த சபரி, சான்ட்ராவை காப்பாற்றுவதாக சொன்னார். ‘பயப்படும் பெண்கள் மாறணுமாம்’. அடுத்த மிளகாயையும் சாப்பிட்டு “வினோத்திற்கு பணம் பயன்படும்” என்று சொன்னது நல்ல விஷயம்.
அடுத்து சென்ற விக்ரம் “உண்மையிலேயே ரொம்ப நல்லவன்’ என்று சபரியைக் காப்பாற்றினார். பிறகு இவரும் சான்ட்ராவை காப்பாற்றி அதிர்ச்சி தந்தார். அரோராவும் இதே பாணியை பின்பற்றினார். கடைசியாக சென்ற சான்ட்ரா சபரி மற்றும் வினோத்தை காப்பாற்றினார்.

வியானா என்ட்ரி - விக்ரமை உடைப்பதற்கான பிளானா?
“உங்க தியாகத்தைக் கண்டு எனக்கு ரொம்ப நெகிழ்ச்சியா இருக்கு… ஆனா இந்த வாரத்துல எல்லோருமே நாமினேட் ஆகியிருக்கீங்க” என்று முதலில் பச்சை மிளகாய் தந்து பிறகு அல்வா தந்து விட்டார் பிக் பாஸ். ‘ஒரு மிளகாய் சாப்பிட்டப்வே இதை சொல்லக் கூடாதா?” என்று மக்கள் அலறினார்கள்.
பாடல் ஒலிக்க வியானா என்ட்ரி. விக்ரமும் சபரியும் வாயடைத்துப் போய் நின்றார்கள். “இங்க இருந்து ரெண்டு பேரை நான் நைட்டு கூட்டிட்டு போயிடுவேன். அந்த ரெண்டு பேர்ன்னு யாருன்னு நீங்கதான் சொல்லணும்” என்று அழகான `தமிளில்' சொன்னார் வியானா.
“இனிமேலும் மத்தவங்களை குறை சொல்லி ஜெயிக்கறதுல எனக்கு உடன்பாடில்லை. பணப்பெட்டிக்காக காத்திருந்தேன். கப் அடிக்கற எண்ணம் எனக்கு கொஞ்சம் கூட இல்லை. திவ்யாவை அழ வெச்சிருக்கேன். அதனால நானே முன் வரேன். என்னை கூட்டிட்டுப் போயிடு” என்று சரண் அடைந்து டாஸ்க்கை சொதப்பினார் விக்ரம். பயமுறுத்த வந்த வியானாவிற்கு ஏமாற்றமாக இருந்திருக்க வேண்டும்.
திவ்யாவுடனான பிரச்சினையில் விசேவும் அட்வைஸ் செய்ததால் விக்ரம் நொந்து போயிருக்கிறார் போல. இதற்கு முன் கடப்பாறைகளையெல்லாம் அநாயசமாக விழுங்கிய விக்ரம், ஒரு சின்ன குண்டூசி பிரேக்கிங் பாயிண்ட்டாக அமைந்து விட்டது பரிதாபம். ‘எனக்கு கோப்பை மீது ஆசையில்லை’ என்று ஒரேயொரு முறை பிக் பாஸ் வீட்டில் சொல்லி விட்டால் போதும். பிறகு வரும் டாஸக்குகளில் அதையே சொல்லி குத்துவார்கள்.

“போதும்.. நான் வெளியே போறேன்’ - கையெடுத்துக் கும்பிட்ட விக்ரம்
“நான் எதுவுமே நினைக்கலை விக்ரம்…” என்று திவ்யா சமாதானப்படுத்தினாலும் விக்ரம் ஏற்கவில்லை. “போதும்மா.. எனக்கு போதும்” என்று கையெடுத்து கும்பிடும் மனநிலைக்கு வந்து விட்டார். அடுத்து சென்ற திவ்யா “எனக்கும் என்ன சொல்றதுன்னு தெரியலை” என்று திரும்பி வந்து விட்டார்.
“எனக்கு விக்ரமையும் சுபிக்ஷாவையும் ரொம்ப பிடிக்கும். ஆனா.. “ என்று பேச ஆரம்பித்த வியானாவை தடுத்தார் சான்ட்ரா. “இப்ப அவர் உடைஞ்சு போயிருக்காரு. இப்ப வேணாம்” என்று துணிச்சலாக பேசிய சான்ட்ராவா, அப்படி பயந்தார் என்று ஆச்சரியமாக இருக்கிறது.
“நான் பேசித்தான் ஆகணும். விக்ரம் கிட்ட கிரே ஷேடு இருக்கும்ன்னு நான் எதிர்பார்க்கலை. ஒருத்தரை மானிபிளேட் பண்றதுல அவர் மாஸ்டர்” என்று குற்றம் சாட்ட “என் ஆட்டம் முடிஞ்சது.
``போலாம் வா” என்று கையெடுத்து கும்பிட்டார் விக்ரம்.
மற்றவர்களைப் பற்றி கருத்து சொன்ன வியானா, “சபரி நல்லவன். ஆனா மிக்சர் பார்ட்டியா இருக்கான்.. அரோ cool buddy.. வினோத் வெளிப்படையா இருக்காரு. போலித்தனமா மன்னிப்பு கேக்க மாட்டாரு. திவ்யாவோட தைரியம் எனக்கும் வேணும். சான்ட்ராலாம் வேற மாதிரி ஆளு.. ஆனா ஏன் கீழே போயிருக்காங்கன்னு தெரியல” என்று முடித்தார்.
விக்ரமின் அழுகையைப் பார்த்து “இங்க எல்லோருமே ஏதாவது தப்பு பண்ணியிருப்போம்..” என்று வினோத் சமாதானம் செய்ய “நான் தப்பு பண்ணலைடா” என்று தழுதழுத்தார் விக்ரம். (என்னா மேன் குழப்பற?!)

விக்ரமை டார்கெட் செய்து உடைக்கிறாரா வியானா?
விக்ரமிடம் வியானா இத்தனை கடுமையாக நடந்து கொள்வதற்கு என்ன காரணம்? அப்படி பேசச் சொல்லி உள்ளே அனுப்பியது பிக் பாஸின் அஜெண்டாவா? இதன் மூலம் விக்ரமிற்கு உளவியல் நெருக்கடி தந்து அவரை பின்னுக்குத் தள்ளும் முயற்சியா? அதன் மூலம் வேறு யாரையாவது முன்னுக்கு கொண்டு வரும் திட்டமா? அந்த ‘வேறு யாரையாவது’ என்பது சான்ட்ராவா? … நிறைய கேள்விகள்.. சந்தேகங்கள்.
ஆனால் வியானா என்னதான் டெரராக பேச முயற்சித்தாலும் அது செல்லுபடியாகவில்லை. விக்ரமைத் தவிர மற்றவர்கள் இடதுகையால்தான் வியானாவை கையாள்கிறார்கள்.
“விக்ரம் அண்ணா.. ஒரு விஷக்கிருமி.. விமர்சனத்தை ஏத்துக்கவே மாட்டாரு” என்று வியானா சொல்ல “அப்படிச் சொல்லு.. அவருக்கு மட்டும்தான் ஃபேமிலி இருக்கா..” என்று பின்பாட்டு பாடினார் திவ்யா.
விக்ரமை தனியாக அமர வைத்து சரமாரியாக புகார் சொன்னார் வியானா. “விக்ரம் .. வக்ரம்ன்ற பேரு உங்களுக்கு நல்லா பொருந்துது… முதலைக் கண்ணீர் வடிக்கறீங்க.. மத்தவங்க மைண்டை மாத்தறீங்க.. திவ்யாவை பிராடுன்னு சொன்னீங்க.
நீங்கதான் பிராடு வேலை பண்ணீங்க.. தப்பு செஞ்சுட்டு எல்லா முறையும் ஸாரி சொல்றீங்க.. விமர்சனத்தை ஏத்துக்காத நபர் நீங்க.. சுபிக்ஷா தனியா ஆடியிருந்தா டைட்டில் அடிச்சிருப்பா.. மத்தவங்களுக்கு ரூல்ஸ் சொல்லிட்டு அதை பிரேக் பண்ணவரு நீங்கதான்” என்று வியானா சொல்ல “அப்படியா.. தப்புத்தான்..ஸாரி” என்று நொந்து போய் விலகினார் விக்ரம்.
வீட்டிற்குள் இருக்கும் போது அண்ணன் என்கிற பாசத்தை விக்ரம் மீது பொழிந்த வியானா, வெளியில் சென்று திரும்பிய பிறகு ஏன் இந்த மாற்றம்? வினோத் சொன்னபடி பிக் பாஸ் வீட்டில் அனைவருமே நிலை தடுமாறி தவறு செய்கிறார்கள். ஆனால் விக்ரமை மட்டும் வியானா டார்கெட் செய்து கடுமையான குற்றச்சாட்டுக்களை சொல்வது ஏன்?

காருக்குள் பணம் - எல்லாம் மேலே இருக்கிறவன் பார்த்துப்பான்
பணப்பெட்டி 2.O தொடங்கியது. முன்பெல்லாம் பணம் பெட்டிக்குள் இருக்கும். உயர்ந்து கொண்டே வரும். எப்போது வேண்டுமோ அப்போது போட்டியாளர் முடிவு செய்யலாம். ஆனால் டிவிஸ்ட் என்கிற பெயரில் டாஸ்க்குகளை சி்க்கலாக்கிக் கொண்டே வருகிறார் பிக் பாஸ்.
இந்த முறை பணத்தை பெட்டிக்குள் சேர்க்க வேண்டிய பொறுப்பும் போட்டியாளர்களுக்கே.
கார்டன் ஏரியாவில் நிற்க வைக்கப்பட்டிருக்கும் காரில் ஆங்காங்கே பணம் ஒளித்து வைக்கப்பட்டிருக்கும். குறிப்பிட்ட நேரத்திற்குள் போட்டியாளர்கள் பணத்தைத் தேடி பெட்டிக்குள் சேர்க்க வேண்டும்.
முதல் சுற்றில் ஒருவர், இரண்டாவது சுற்றில் இருவர், மூன்றாவது சுற்றில் அனைவரும் என்று ஓடி சேர்த்த பணம் 1,45,000. காரின் ஒவ்வொரு மூலை முடுக்கிலும் தேடிய போட்டியாளர்கள், காரின் மீது ஏராளமாக வைக்கப்பட்டிருந்த பணத்தை கவனிக்கவில்லை.

‘அவசரத்தில் இருக்கும் போது அண்டாவில் கூட கை நுழையாது’ என்கிற பழமொழி உண்மையாயிற்று. “நான் அப்பவே சொன்னேன். மேலே பாருங்கன்னு” என்றார் திவ்யா.
“சீக்கிரம் தூங்குங்க.. ரெண்டு பேரை எழுப்பி கூட்டிட்டு போகணும்” என்று வியானா கறாராக சொல்ல “காமெடி பண்ணாதம்மா.. போய் படு” என்கிற மாதிரி அவரை ஹாண்டில் செய்தார்கள். ஏற்கெனவே பச்சை மிளகாய் டாஸ்க்கில் ஏமாந்து நொந்து போயிருப்பவர்கள், வியானாவின் குழந்தை மிரட்டலுக்கு ஏமாறத் தயாராக இல்லை.!



















