"அசைவ உணவோட தலைநகரம் சென்னை 'தாஷமக்கான்’ பகுதி; ராப் இசை கலைஞராக நடிச்சிருக்கேன்...
Doctor Vikatan: குழந்தையின்மைக்கும் உணவுப்பழக்கத்துக்கும் தொடர்பு உண்டா?
Doctor Vikatan: எனக்குத் திருமணமாகி 5 வருடங்கள் ஆகின்றன. இன்னும் கருத்தரிக்கவில்லை. பல மருத்துவர்களைப் பார்த்துவிட்டோம், பலனில்லை. என் தோழி, என் உணவுப்பழக்கத்தை மாற்றும்படி அறிவுறுத்துகிறாள். உணவுப்பழக்கத்துக்கும் கருத்தரித்தலுக்கும் உண்மையிலேயே தொடர்பு உண்டா? கருத்தரிக்க விரும்புவோர், எப்படிப்பட்ட உணவுப்பழக்கத்தைப் பின்பற்ற வேண்டும்?
பதில் சொல்கிறார் கோவை, கிணத்துக்கடவைச் சேர்ந்த மகளிர் நலம் மற்றும் மகப்பேறு மருத்துவர் ஸ்ரீதேவி

நீங்கள் கேள்விப்பட்டது உண்மைதான். நீங்கள் உட்கொள்ளும் உணவுகளுக்கும் கருத்தரித்தல் திறனுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு.
நீங்கள் ஆரோக்கியமான உணவுகளைச் சாப்பிடுவதாக நினைக்கலாம், ஆனால், சில உணவுகளும், அவற்றில் சேர்க்கப்படும் ரசாயனங்களும் உங்கள் ஹார்மோன்களைக் குலைத்து, உடலில் அழற்சியை (Inflammation) ஏற்படுத்தி, முட்டை மற்றும் விந்தணுக்களின் தரத்தை நாளடைவில் சேதப்படுத்தலாம்.
கருத்தரிக்கும் திட்டத்தில் இருக்கிறீர்கள் என்றால் நீங்கள் உணவு விஷயத்தில் சிலவற்றை கவனத்தில் கொள்ள வேண்டும்.
வெள்ளைச் சர்க்கரை, வெள்ளை ரொட்டி, பேக்கரி பொருள்கள், சர்க்கரை பானங்கள் மற்றும் இனிப்பு வகைகள் போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும். இவை இன்சுலின் அளவை திடீரென அதிகரிக்கச் செய்து, இன்சுலின் எதிர்ப்புக்கு (Insulin Resistance) வழிவகுக்கும். இது பிசிஓஎஸ் (PCOS), கருமுட்டை வெளியேறுவதில் குறைபாடு மற்றும் விந்தணுவின் இயக்கக் குறைவு போன்றவற்றை ஏற்படுத்தலாம்.
இவற்றுக்குப் பதிலாக, பழங்கள், பேரீச்சம்பழம், பனை வெல்லம் (அளவோடு), மற்றும் சிறுதானியங்களை அடிப்படையாகக் கொண்ட இனிப்பு வகைகளை எடுத்துக்கொள்ளலாம்.

பொரித்த உணவுகள், பாக்கெட் செய்யப்பட்ட சிற்றுண்டிகள், வனஸ்பதி (Margarine) மற்றும் துரித உணவுகளில் டிரான்ஸ்ஃபேட் எனப்படும் கெட்ட கொழுப்பு காணப்படும். அது கருப்பையை பாதித்து, ஹார்மோன் சமநிலையை ஏற்படுத்தி, கருத்தரிக்கும் திறனையும் பாதிக்கும். எனவே, அத்தகைய உணவுகளையும் தவிர்க்க வேண்டும். செக்கில் ஆட்டிய எண்ணெய் வகைகளைப் பயன்படுத்துவது மிக நல்லது.
சிலருக்கு, பால் பொருள்கள் அழற்சியை அதிகரிக்கலாம். பால் ஒவ்வாமை இருக்கலாம். பால் குடித்த பிறகு வயிறு உப்புசம், சோர்வு அல்லது முகப்பரு ஏற்பட்டால் பால் உணவுகளைத் தவிர்த்து, அவற்றுக்கு மாற்றாக, பாதாம் பால், தேங்காய்ப் பால் போன்றவற்றை பயன்படுத்தலாம்.
குளூட்டன் அதிகமுள்ள கோதுமை, மைதா, பார்லி ஆகியவை சிலருக்கு குடலில் அழற்சியை உண்டாக்கி ஹார்மோன் சமநிலையின்மையைத் தூண்டும்.
அவர்கள், சிறுதானியங்கள், சிவப்பு அரிசி, கினோவா, மற்றும் பயறு வகைகளைப் பயன்படுத்தலாம். மதுப் பழக்கமும் அதிக காபி குடிக்கும் பழக்கமும் ஈஸ்ட்ரோஜென் ஆதிக்கத்தை அதிகரிக்கும். விந்தணுவின் தரத்தையும் குறைக்கலாம்.

ப்ரிசர்வேட்டிவ் சேர்த்த உணவுகள், பிளாஸ்டிக் கன்டெய்னர்கள், பாக்கெட் செய்யப்பட்ட உணவுகள் போன்றவற்றில் Xenoestrogens எனப்படும் ரசாயனங்கள் இருக்கும். இவை ஈஸ்ட்ரோஜெனைப் போலச் செயல்பட்டு, உங்கள் நாளமில்லாச் சுரப்பி அமைப்பை (Endocrine System) சீர்குலைக்கும். எனவே, எப்போதும் வீட்டில் ஃப்ரெஷ்ஷாக சமைத்த உணவுகளைச் சாப்பிடுவதே சிறந்தது. சமைத்த உணவுகளை கண்ணாடி அல்லது ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் கன்டெய்னர்களில் வைத்திருப்பது சிறந்தது.
மேற்குறிப்பிட்ட விஷயங்கள் மேலோட்டமாகப் பார்த்தால் பெரிய ஆபத்தில்லாதவை போலத் தெரியலாம். நீண்டகாலம் இவற்றுக்கு உட்படும்போது அவை நிச்சயம் உங்கள் கருத்தரித்தல் திறனை பாதிக்கலாம் என்பதால் கவனமாக இருப்பது நல்லது.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.















