செய்திகள் :

Gandhi Talks Review: 'வழக்கமான கதைக்குள் ஒரு சோதனை முயற்சி' - திருவினையானதா இந்த 'மௌனப் படம்'?

post image

கடும் வறுமையிலிருக்கும் மகாதேவ் (விஜய் சேதுபதி), இறந்த தந்தையின் அரசு வேலையைப் பெற்று தாயின் உடல்நிலையைக் கவனித்துக்கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கிறார். அந்த வேலையைப் பெறுவதற்கு லஞ்சம் கொடுக்க வேண்டும் என்பதால் அந்த வேலை அவருக்குக் கிடைக்காமல் போகிறது.

மற்றொரு பக்கம், பெரும் செல்வந்தராக இருக்கிறார் மோகன் போஸ்மேன் (அரவிந்த்சாமி). திடீரென இவரின் பிசினஸ் எதிரிகளின் சூழ்ச்சி வேலைகளால் இவரின் சொத்துகள் பறிபோவதோடு, கனவு ப்ராஜெக்டும் எரிந்து சாம்பலாகிறது. பிசினஸுக்காக கடன் கொடுத்த முதலீட்டாளர்கள் இவரை நெருக்கடிக்குள்ளாக்க, பெரும் கடன் சுமையிலும் சிக்கித் தவிக்கிறார்.

இந்நிலையில் இருவரும் சந்தித்துக்கொள்ள, அதற்கு அடுத்து இருவரின் வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்கள் என்னென்ன என்பதே மராத்திய இயக்குநர் கிஷோர் பாண்டுரங் பெலேகர் இயக்கியிருக்கும் இந்த 'சைலண்ட் சினிமா'வின் கதை.

Gandhi Talks Review | காந்தி டாக்ஸ் விமர்சனம்
Gandhi Talks Review | காந்தி டாக்ஸ் விமர்சனம்

ஏமாற்றம், அவமானம், பாசம், காதல், பேராசை எனப் பல்வகை எமோஷன்களைச் சேர்த்து கதாபாத்திரத்தைப் பேச வைத்திருக்கிறார் விஜய் சேதுபதி. வயிற்றுப் பசியோடு காதலையும் எதிர்கொள்ளும் காட்சிகளில் நம்மையும் மௌனமாக்கி இதயத்தைக் கனக்கச் செய்திருக்கிறார்.

செல்வந்தராக பந்தா முகம் காட்டும் இடம், சூழ்ச்சியால் வீழ்ச்சியைச் சந்தித்து ஏமாற்றமடையும் இடம் என அவருக்குக் கொடுக்கப்பட்ட பணியைச் செவ்வனே செய்திருக்கிறார் அரவிந்த்சாமி.

சார்லி சாப்ளின் உடல்மொழியில் வந்து நம்மை சிரிக்க வைக்க முயன்று, அதில் பாதி கிணற்றை மட்டுமே தாண்டியிருக்கிறார் திருடராக வரும் சித்தார்த் ஜாதவ்.

காதல் காட்சிகளுக்கு மட்டும் தலைகாட்டும் நாயகியாக அதிதி ராவ், க்ளிஷே கதாபாத்திரத்தில் வந்தாலும், நேர்மையாக நடந்துகொள்ள வேண்டும் என மகாதேவை உணரச் செய்யும் இடம், அவரைச் சமாதானப்படுத்தும் இடம் போன்ற குறைவான பந்துகளில் டீசண்ட் ஸ்கோர் அடித்திருக்கிறார்.

குறுகிய காம்பவுண்ட் வீடுகள், அப்பகுதியின் இரவு நேரங்கள் உள்ளிட்டவற்றை நேர்த்தியாகப் பதிவு செய்திருக்கும் ஒளிப்பதிவாளர் கரண் பி ராவத், இந்தத் திரைமொழிக்கு அழகு சேர்க்கும் கேமரா கோணங்களையும் அள்ளித் தந்திருக்கிறார்.

காட்சிகளின் டிரான்சிஷனில் கவனம் கொடுத்த படத்தொகுப்பாளர் அஷிஷ், அன்னநடை போடும் காட்சிகளைச் சுறுசுறுப்பாக்கத் தவறியிருக்கிறார். 'ஏதோ ஏதோ' பாடலில் மெல்லிசையால் நம்மை வருடும் ஏ.ஆர். ரஹ்மான், மற்ற பாடல்களில் வைப் நம்பரைத் தராதது ஏனோ!?

Gandhi Talks Review | காந்தி டாக்ஸ் விமர்சனம்
Gandhi Talks Review | காந்தி டாக்ஸ் விமர்சனம்

அதுபோல, பெரும்பாலான இடங்களில் உணர்வுபூர்வமான பின்னணி இசையைக் கொண்டு இந்தச் சைலண்ட் படத்தின் வால்யூமை அதிகரித்திருக்கும் ஏ.ஆர். ரஹ்மான், சில இடங்களில் திகட்டவும் வைத்திருக்கிறார்.

நெருப்பு, எலி, நொறுங்கிய ஜன்னல் கண்ணாடி எனச் சொற்ப இடங்களில் மட்டுமே கிராபிக்ஸ் பயன்படுத்தப்பட்டாலும், அதில் நேர்த்தியைக் கொண்டு வராதது மைனஸ்.

கடன் தொல்லையிலிருந்து தப்பிக்க நினைக்கும் செல்வந்தர் போஸ்மேன், கொள்ளையடித்தாவது வேலையைப் பெற்று பொருளாதார நிலையைச் சீர்செய்து கொள்ள நினைக்கும் மகாதேவ் என இருவரின் கதையை வசனங்களே இல்லாமல் மௌன மொழியில் கடத்தியிருக்கிறார் இயக்குநர் கிஷோர் பாண்டுரங் பெலேகர்.

சைகைகளில் செய்திருக்கும் ஓரிரு காமெடிகள் தொடக்கத்தில் கைகொடுக்க, உவமைகளாகவும் செய்தித்தாள் எழுத்துக்கள் மூலமாகவும் காட்சிகளை எடுத்துச் சொல்லி மென்மையாக நம்மைத் தயார்படுத்துகிறது படம்.

Gandhi Talks Review | காந்தி டாக்ஸ் விமர்சனம்
Gandhi Talks Review | காந்தி டாக்ஸ் விமர்சனம்

ஆனால், எதிர்வீட்டிலிருக்கும் நாயகியோடு நாயகன் செய்யும் வழக்கமான காதல் சடுகுடு ஆட்டங்கள், வம்படியாகத் திணிக்கப்பட்டிருக்கும் சில காமெடிகள் என நம்மை சோர்வடைய வைக்கும் விஷயங்கள் பெரும்பான்மையாக முதல் பாதியை ஆக்கிரமிக்க, கதையின் மோதல் புள்ளிக்குள் மிகப் பொறுமையாகவே செல்லத் தொடங்குகிறது படம்.

வசனங்கள் இல்லாமல் காட்சிமொழியிலும், செய்கை மொழியிலும் சில காட்சிகளை உருவாக்கி, உணர்வுகளைக் கடத்திய விதம் நச். ஆனால், பல காட்சிகளில் தேவையே இல்லாமல் வலுக்கட்டாயமாக கதாபாத்திரங்கள் செய்கை மொழியில் பேசுவது துறுத்தல்.

கதை மையத்தை எட்டி நம் எதிர்பார்ப்பை லேசாகச் சீண்டும் இடத்தில் மீண்டும் தட்டையான இடைவேளைக் காட்சியை அமைத்து ஏமாற்றுகிறது திரைக்கதை.

Gandhi Talks Review | காந்தி டாக்ஸ் விமர்சனம்
Gandhi Talks Review | காந்தி டாக்ஸ் விமர்சனம்

ஒரு வீட்டில் இரண்டு திருடர்கள் சிக்கிக்கொள்ளாமல் ஆடும் டாம் & ஜெர்ரி ஆட்டம் சற்றே சுவாரஸ்யத்தை ஏற்படுத்தினாலும் ஒரே இடத்திற்குள் ஒரே விஷயங்கள் மீண்டும் மீண்டும் நீ....ட்டி நெளிந்து, தொடக்க ஆட்டம் ஏற்படுத்திய சுவாரஸ்ய மெழுகுவர்த்திகளை ஊதி அணைக்கிறது.

முன்னணி நடிகர்களைக் கொண்டு சைலண்ட் திரைப்படம் என்கிற முயற்சியைச் சாத்தியப்படுத்தியிருக்கும் இயக்குநரைக் கைகுலுக்கி வாழ்த்தலாம். ஆனால், வழக்கமான கதை, வழக்கமான கருத்து போன்றவற்றால் அந்த முயற்சி திருவினையாகாமல் போக, இந்த 'காந்தி டாக்ஸ்' நம் காதுகளை முழுமையாக எட்டவில்லை.

தமிழ்நாடு அரசின் திரைப்பட & சின்னத்திரை விருதுகள்; அசுரன், ஜெய் பீம் `டு' மாநகரம்! - முழு விவரம்!

தமிழ்நாடு அரசின் சார்பில், சமூகச் சிந்தனைகளுடன் மனிதநேயத்தை பிரதிபலிக்கும் திரைப்படங்களை ஊக்குவிக்கும் வகையில்சிறந்த திரைப்படங்கள், நடிகர், நடிகை, தொழில்நுட்பக் கலைஞர்கள் ஆகியோருக்கு திரைப்பட விருதுகள... மேலும் பார்க்க

தனுஷ் - ராஜ்குமார் பெரியசாமியின் D55ல் இணையும் மல்லுவுட் சூப்பர் ஸ்டார் - நடிகர்கள் யார் யார்?

`தனுஷ் தனது மகன் யாத்ராவை ஹீரோவாக அறிமுகம் செய்யவிருக்கிறார். அவரே டைரக்ட் செய்யப் போகிறார். இதற்காகத்தான் திருப்பதி சென்று வந்திருக்கிறார்' என்று சமூக வலைதளங்களில் தகவல் ஓடுகிறது. தவிர இன்று மாலை தனு... மேலும் பார்க்க

Gandhi Talks: "ஆரம்பத்தில சூப்பர்ஹிட் ஆகும்'னு எதிர்பார்ப்பு இருந்தாலும், இப்போது.!"- விஜய் சேதுபதி

விஜய் சேதுப​தி, அரவிந்த்​சாமி, அதிதி ராவ் , சித்தார்த் ஜாதவ் உள்பட பலர் நடித்​துள்ள படம், ‘காந்தி டாக்ஸ்’. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்​துள்ள இந்​தப் படத்தை மராத்தி இயக்குநர் கிஷோர் பாண்​டுரங் பெலெகர் இயக்​... மேலும் பார்க்க