IPL: CSK `டு' RCB; வீரர்கள் பட்டியலை வெளியிட்ட அணிகள்; மீத இருப்புத்தொகை எவ்வளவு...
StartUp சாகசம் 47 : கிரிப்டோ, இன்னும் பல.! மதுரையிலிருந்து ஒரு பிளாக்செயின் நிறுவனம்! Blaze Web கதை
இந்தியாவில் பிளாக்செயின் தொழில்நுட்பத்திற்கு ஒரு பொன்னான எதிர்காலம். பிளாக்செயின் (Blockchain) என்பது ஒரு பாதுகாப்பான, வெளிப்படையான மற்றும் மாற்ற முடியாத டிஜிட்டல் பேரேடு (digital ledger) ஆகும். இதில் பதிவாகும் தகவல்களை யாராலும் திருத்தவோ, அழிக்கவோ முடியாது. இந்தத் தனித்துவமான அம்சத்தால், இந்தியாவின் டிஜிட்டல் எனும் எண்ணிம உள்கட்டமைப்பை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல பிளாக்செயினுக்கு மிகப்பெரிய ஆற்றல் உள்ளது.
பிளாக்செயின் தொழில்நுட்பம் கிரிப்டோகரன்சியைத் தாண்டியும் பல துறைகளில் புரட்சியை ஏற்படுத்தும் திறன் கொண்டது. இந்தியாவில் இதன் பயன்பாட்டிற்கான முக்கியத் துறைகள்:
வங்கி மற்றும் நிதிச் சேவைகள் (BFSI): இது பிளாக்செயினின் மிகப்பெரிய பயன்பாட்டுத் துறையாகும்.
KYC (உங்கள் வாடிக்கையாளரைத் தெரிந்து கொள்ளுங்கள்): பல வங்கிகள் ஒன்றிணைந்து, பிளாக்செயின் மூலம் ஒரு பொதுவான, பாதுகாப்பான KYC தளத்தை உருவாக்கலாம். இதனால், வாடிக்கையாளர்கள் ஒவ்வொரு வங்கிக்கும் தனித்தனியாக ஆவணங்களைச் சமர்ப்பிக்கத் தேவையில்லை. இது நேரத்தையும் செலவையும் மிச்சப்படுத்தும்.
வர்த்தக நிதி (Trade Finance): ஏற்றுமதி மற்றும் இறக்குமதி வர்த்தகத்தில் உள்ள பல ஆவணங்கள் மற்றும் ஒப்புதல்களை (கப்பல் ஆவணங்கள், பில்கள்) பிளாக்செயினில் பதிவு செய்வதன் மூலம், மோசடிகளைத் தடுத்து, செயல்முறையை விரைவுபடுத்தலாம்.
சப்ளை செயின் மேலாண்மை (Supply Chain Management) : பொருட்கள் எங்கே தயாரிக்கப்படுகின்றன, யாரிடம் கைமாறுகின்றன என்பதைத் துல்லியமாகக் கண்காணிக்க இது உதவுகிறது.

விவசாயம்: ஒரு விவசாயப் பொருள் (உதாரணமாக, ஆர்கானிக் காய்கறிகள்) பண்ணையிலிருந்து நுகர்வோர் கைக்கு வரும் வரையிலான முழுப் பயணத்தையும் பிளாக்செயினில் பதிவு செய்யலாம். இதனால், அதன் உண்மைத்தன்மையை (authenticity) உறுதிப்படுத்த முடியும்.
மருந்துத் துறை: போலி மருந்துகள் புழக்கத்திற்கு வருவதைத் தடுக்க, மருந்துகளின் உற்பத்தி முதல் விநியோகம் வரை பிளாக்செயின் மூலம் கண்காணிக்கலாம்.
நிலப் பதிவேடுகள்: நில ஆவணங்களை பிளாக்செயினில் சேமிப்பதன் மூலம், ஆவணங்களை மாற்றுவது, போலிப் பத்திரம் தயாரிப்பது போன்ற மோசடிகளை முழுமையாகத் தடுக்க முடியும். இது நிலத் தகராறுகளைப் பெருமளவில் குறைக்கும். இந்திய அரசின் நிதி ஆயோக் (NITI Aayog) இதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து வருகிறது.
சான்றிதழ் வழங்கல்: கல்விச் சான்றிதழ்கள், பிறப்புச் சான்றிதழ்கள் . கல்லூரி சான்றிதழ்கள் போன்றவற்றை பிளாக்செயினில் வழங்கும்போது, அவற்றை எளிதாகச் சரிபார்க்க முடியும், மேலும் போலிச் சான்றிதழ்களை ஒழிக்கலாம்.
நோயாளி பதிவேடுகள் (Patient Records): நோயாளிகளின் மருத்துவப் பதிவுகளை பிளாக்செயினில் பாதுகாப்பாகச் சேமிக்கலாம். நோயாளியின் அனுமதி பெற்று, வெவ்வேறு மருத்துவமனைகளில் உள்ள மருத்துவர்கள் இந்தப் பதிவுகளைப் பாதுகாப்பாக அணுக முடியும்.
இன்னமும் சொல்லிக்கொண்டே போகலாம், பிளாக்செயின் தொழில்நுட்பம் இந்தியாவில் வெளிப்படையான, பாதுகாப்பான மற்றும் திறமையான அமைப்புகளை உருவாக்க ஒரு பொன்னான வாய்ப்பை வழங்குகிறது. இது வெறும் தொழில்நுட்பம் மட்டுமல்ல, வணிகங்கள் மற்றும் அரசாங்கம் செயல்படும் விதத்தையே மாற்றியமைக்கும் ஒரு புதிய வழிமுறையாகும்.
இந்த தொழில்நுட்பத்தில் 2013-ம் ஆண்டிலிருந்தே மதுரையிலிருந்து ஒரு நிறுவனம் செயல்பட்டு பிளாக்செயின் சார்ந்த போட்டிகள், தொழில்நுட்ப சவால்களில் கலந்து அவற்றில் வெற்றி பெறுவது மட்டுமல்லாமல் பல நிறுவனங்களுக்கு பின்புலமாக மதுரையிலிருந்து செயல்பட்டுவரும் பிளேஸ் வெப் சர்வீசஸ் (Blaze Web Services Pvt Ltd) நிறுவனத்தின் சாகசக்கதையைத்தான் இநத வாரம் நாம் அதன் நிறுவனர்களில் ஒருவரான கார்த்திக் பொன்னையா வழியாக கேட்கப்போகின்றோம்.
இனி கார்த்திக் பொன்னையா
``பிளாக்செயின் மற்றும் கிரிப்டோகரன்சிகள் உங்களுக்கு எப்படி ஆர்வம் வந்தது? எப்படி பிளாக்செயின் துறைக்கு உங்களை தயார் செய்து கொண்டீர்கள்?”
``Opensource, திறந்த நிரல் மென்பொருட்களை வடிவமைப்பதில் ஆர்வம் இருந்ததாலும், Bitcoin னின் நெட்ஒர்க்கை முழுக்க முழுக்க பொது மக்களாகவே ஏற்று நடத்தலாம் எனும் வகையில் இருந்ததாலும் அதன் மீது ஒரு கவனமும் ஈர்ப்பும் வந்தது. ஒரு கிரிப்டோ பற்றி கேள்விப்பட்டவுடன் முதலில் அதன் Whitepaper ஐ வாசிப்பேன். அதன் tokenomics எப்படி உள்ளது... இந்த கிரிப்டோ உருவாக்கப்பட்டதன் நோக்கம் என்ன, இது எப்படி நிகழ் கால உலகத்தில் உள்ள சிக்கலுக்கு தீர்வு தரும் என ஆய்வு செய்வேன். ஒரு ICO / ERC 20 token smart contract நிரலை வரிக்கு வரி வாசித்து அதன் செயல்பாடுகளை புரிந்துகொள்வேன். இப்படி இருந்த ஆர்வமே பின்னாளில் ஒன்றுக்கு மேற்பட்ட பிளாக்செயின் தொழில்நுட்பங்களை ஒரே ப்ரொஜெக்ட்டில் பயன்படுத்தும் அளவுக்கு செழுமைப்படுத்தியது.
``இன்றைய கட்டத்தில் கிரிப்டோகரன்சிகள் எந்த அளவிற்கு பாதுகாப்பானவை? ஒரு சாதாரண முதலீட்டாளர், தான் முதலீடு செய்யும் கிரிப்டோ பாதுகாப்பானது என்பதை எப்படி உறுதி செய்துகொள்வது?”
``என்னை பொறுத்தவரை கிரிப்டோ கரன்சிகளை மெட்டல்ஸ் (உலோகங்களுடன்) ஒப்பிடுவேன் . Bitcoin (BTC) தங்கம் என்றால் மற்றவை ஒவ்வொன்றும் வெள்ளி, வைரம், செயற்கை வைரம், தாமிரம், தகரம் என ஒவ்வொன்றுக்கும் ஒரு மதிப்பு உள்ளது. CoinMarketCap தளத்தில் ஒவ்வொரு கிரிப்டோ கரன்சியும் எந்த marketcap மதிப்பில் உள்ளது, அதன் வர்த்தகம் கடந்த 7 நாட்களில் எத்தனை கோடி வர்த்தகம் நடந்துள்ளது எனும் அடிப்படை விவரங்களை ஆராய வேண்டும்.
அடுத்து அந்த கரன்சி எந்தவகை தொழில்நுட்ப “மதிப்பை”வழங்குகிறது எனபதை பார்க்க வேண்டும். Ethereum, Polygon, Solana, Flow போன்றவை தனக்கென ஒரு சொந்த network , தனக்கென தனி smart contract நிரல்கள் மற்றும் ஒரு தனி developer eco system உடன் இருப்பவை. இதுபோன்ற க்ரிப்ட்டோக்களை பயன்படுத்தி பல மென்பொருட்கள் அல்லது decentralized மென்பொருட்கள் வெளிவந்திருக்கும்.

ஒரு கிரிப்டோ ஒரு நோக்கத்திற்காக உருவாக்கப்பட்டிருக்க வேண்டும், அது நிகழ்கால சமூக, பொருளாதார வட்ட பயனர்களுக்கு ஒரு பரிமாற்ற மதிப்பாக பயன்படுத்தும் இலக்குடன் உருவாக்கப்பட்டிருக்க வேண்டும். அப்பொழுது தான் அந்த கிரிப்டோவின் மதிப்பு காலம் கடந்தும் உயரவோ அல்லது தொடர்ந்து பயன்பாட்டில் இருக்கவோ செய்யும்.
ஒரு கிரிப்டோ கரன்சி எவ்வளவு எண்ணிக்கையில் உருவாக்கப்பட வேண்டும் எனும் ஒரு உச்சவரம்பு விதியை அதை உருவாக்கிய குழு WhitePaper ல் குறிப்பிட்டு இருப்பார்கள். அப்படி குறிப்பிடாத கிரிப்டோக்களில் முதலீடு செய்வது அதன் பண மதிப்பை தொடர்ந்து மார்க்கெட் உயர விடாது. 2.1 கோடி பிட்காயின்கள் தான் உருவாக்கப்பட வேண்டும் எனும் விதி இருப்பதும் BTC மதிப்பு உயர்வதன் காரணிகளுள் ஒன்று.”
``மதுரையில் பிளாக்செயினுக்கு பணியாற்றும் அளவுக்கு திறமையானவர்கள் கிடைக்கிறார்களா?”
``Blaze Web Services Pvt Ltd - BlazeHexa.com எனும் மென்பொருள் நிறுவனம் நடத்தி வருகிறேன். தற்போது மதுரையில் 85 ஊழியர்களுடன் (70 பேர் நிரலாளர்கள்) சொந்த அலுவலக் கட்டிடத்தில் இயங்கி வருகிறோம். எங்கள் ஊழியர்களில் சரி பாதி நிரலாளர்கள் பெண்கள் என்பதும் ஓர் சிறப்பாக கருதுகிறோம். சிறப்பான பயிற்சி அளித்து அவர்களை சந்தைக்கு ஏற்றவாறு திறமையானவர்களாக மாற்றுகிறோம். இனி மதுரையும் ஒரு சிறந்த நுட்ப நகரமாக மாறும்.”
``கிரிப்டோகரன்சி மற்றும் பிளாக்செயின் தொழில்நுட்பத்தை, வெறும் முதலீடு அல்லது வர்த்தகம் என்பதைத் தாண்டி, சமூகத்திற்கும் வணிகங்களுக்கும், அரசாங்கங்களுக்கும் பயனளிக்கும் வகையில் வேறு எந்தெந்த வழிகளில் திறம்படப் பயன்படுத்தலாம்?”
``ஒரு தகவலை நாம் ஓலைச்சுவடியில் எழுதுவது என்பது காகிதத்தில் அச்சடிப்பது போன்றது, நமது கணினியில் ஒரு கோப்பை சேமிப்பது போன்றது.
ஒரு தகவலை கல்வெட்டில் பொறிப்பது என்பது, ஒரு செர்வரில் அல்லது cloudல் தகவலை சேமிப்பது போன்றது. மேற்சொன்ன இரண்டும் பல இயற்கை மற்றும் தனிநபர் தாக்குதல்களால் அழிந்து போகலாம் அல்லது மாற்றி எழுதப்படலாம்.
பிளாக்செயினில் ஒரு தகவலை எழுதுவது என்பது செப்பு பட்டயத்தில் பொறிப்பது போன்றது என சொல்வேன் நான். அதை உருவாக்கவும், திருத்தவும் அதிக வெப்ப ஆற்றலை கொடுக்க வேண்டும். அதே போல பிளாக்செய்யினில் ஒரு தகவலை எழுத சுமார் கோடிக்கணக்கான கணினிகளின் திறன் மிக்க hashrate எனும் ஆற்றல் சரியாக இருந்தால் தான் எழுத முடியும். ஏற்கனவே எழுதிய ஒரு தகவலை மாற்றியமைக்க அந்த நெட்ஒர்க்ல் இருக்கும் 51% கணினிகளை ஒரே நபர் கட்டுப்படுத்த வேண்டும். அதாவது அந்த நெட்ஒர்க்கில் 1 கோடி தனி நபர்கள் mining செய்வதும், consensus, verification node கணினிகளையும் இயக்கி வருகிறார்கள் என்றால் அதில் 51 லட்சம் கணினிகளை ஒரே கிராக்கர் கட்டுப்படுத்தினால் தான் ஒரு வரியை அந்த ப்ளாக்ச்செயினில் திருத்தி எழுத முடியும்.

தற்போது bitcoin நெட்ஒர்க்கின் hashrate 1.133 ZH/s (Zetta Hash ) SHA-256 hashing அலகாரிதம் முறையில் தற்போது செயல்படும் ஒட்டுமொத்த bitcoin networkம் ASIC வகை எந்திரங்களால் இயங்கி வருகிறது. இந்த திறனுக்கு இணையாக இயங்க நம்மிடம் 266 quadrillion (266,000,000,000,000,000) Intel i5 லேப்டாப்கள் வேண்டும் ( 2660 கோடி கோடி) வேண்டும்.
பிட் காயின் தவிர்த்த மற்ற நெட்ஒர்க்கள் இதில் சிறு அளவு திறனுடன் இருந்தாலும், அவற்றை தாக்குதலுக்கு உட்படுத்துவதும் மிக மிக சிரமம். ஆதலால் முக்கிய தகவல்களை blockchainல் சேமிப்பதை பல நிறுவனங்களும், சமூகமும், தொழில்துறையும், அரசும் மேற்கொண்டு வருகின்றன. இந்தியா உட்பட சுமார் 49 நாடுகள் சோதனை ஓட்டமாக தனது நாடு பணத்தை CBDC எனப்படும் ப்ளாக்சைன் வகை பணமாக சோதனை ஓட்டமாக வடிவமைத்துள்ளன.
தனிநபர் அடையாள ஆவணங்களை KYC முறையில் சேமிப்பது, உற்பத்தி, உணவு, விவசாயத் துறைகளில் ஒரு பொருள் எங்கெங்கு இருந்து வாங்கப்பட்டது எனும் supply chain விவரங்களை சேமிப்பது, அதன் மூலம் carbon footprint , virtual water போன்ற மறைமுக விவரங்களை உறுதியான விவரங்களுடன் கணிப்பது, வங்கி பரிவர்த்தனைகளை பாதுக்காப்பாக சேமிப்பது, கலை சார்ந்த காப்புரிமை விவரங்களை சேமிப்பது (NFT), Smart Contract முறையில் உடன்படிகைகளை ஏற்படுத்துவது, பொது வேலைகளுக்காக சேமிக்கப்பட்ட பணத்தை ஒரு சமூகமாக இருந்து அந்த பொதுவேலைகளை செய்த நபர்களுக்கு தானியங்கி முறையில் பிரித்து கொடுப்பது DAOs முறையில் ஒரு நிறுவனத்தையே அதன் நிதி விதிகளை ஏற்படுத்தி செயல்படுத்துவது என பல வித பயன்கள் ஒவ்வொரு துறைக்கும் blockchain தொழில்நுட்பத்தில் உள்ளது.”
``2013 ஆம் ஆண்டு முதல் நீங்கள் பிளாக்செயின் துறையில் இருக்கிறீர்கள். இதுவரை நீங்கள் செய்த திட்டங்கள் அதனால் ஏற்பட்ட பலன்கள் பற்றி சொல்லமுடியுமா?”
``கல்வி நிறுவன சான்றிதழ்களை நிரந்தரமாக சேமிக்கும் மென்பொருள் certifi.ly உருவாக்கியுள்ளோம்.
Crypto Options Trading strategy builder ஒன்றை உருவாக்கியுள்ளோம். இதன் மூலம் நூற்றுக்கணக்கான க்ரிப்ட்டோக்களை பல exchangeகளில் உங்களின் ஆர்டர்களை செயல்படுத்தும் bot ஆக DeriSnap.com செயல்படும்.
மருத்துவ ஆவணங்களை பாதுகாக்கும் HealChain எனும் முறையை HyperLedger ல் அறிமுகம் செய்துள்ளோம்.
Decentralised storage network IPFS ஐ முழுக்க முழுக்க புதிதாக வடிவமைத்து செயல்படுத்தக் கொடுத்தும் வருகிறோம்.
சர்வதேச சரக்கு போக்குவரத்து கோப்புகளை பிளாக்செயினில் சேமிப்பதன் மூலம் எளிமையாக ஏற்றுமதி இறக்குமதி ஆவணங்களை உருவாக்குவது, இன்சூரன்ஸ் மற்றும் வங்கிகளுக்கு விரைவாக ஆவணங்களை பகிர்வது ஆகியவற்றையும் கையாளும் அமெரிக்க நிறுவனத்திற்கான முழு பிளாக்செயின் வடிவமைப்பை Polygon CDK, custodial wallet முறைகளை பயன்படுத்தி செய்து கொடுத்துள்ளோம் .”

பிளாக்செயின் துறையில் உங்கள் நிறுவனம் என்னமாதிரியான திட்டங்களில் உங்கள் நிறுவனம் செயல்பட்டுவருகிறது?
``2017ம் ஆண்டு நிதி ஆயோக், microsoft , IBM உடன் இணைந்து Proffer Network ஒரு சர்வதேச பிளாக்செயின் ஹெக்கத்தானை நடத்தியது, அதில் MIT, Harvard, Stanford, Oxford, Cambridge, IITs மற்றும் உலகின் பல பொறியியல் நிறுவனங்களில் 28 நாடுகளில் இருந்து 93 அணிகள் பங்கேற்றன, HyperLedger ப்ளாக்செயினை சிறப்பான முறையில் healthcare பிரிவில் HealChain எனும் பிராஜெட்டை குறைந்த காலத்தில் சிறப்பாக உருவாக்கியதற்காக எங்கள் அணி வெற்றி பெற்றது.
அதை தொடர்ந்தது, 2023ம் ஆண்டு Google உட்பட பல நிறுவனங்கள் ஆதரவுடன் நடந்த Flow International Blockchain hackathonல், உலகம் முழுவதும் இருந்து 2000 அணிகள் பங்கேற்று இருந்தாலும், 280 அணிகளால் மட்டுமே குறிப்பிட்ட நேரத்திற்குள் முழுமையான நிரல்களை பதிவேற்றம் செய்ய முடிந்தது, அதில் ஒரு அணியாக எங்கள் அணி, எந்த ஒரு Wallet, Private Key இல்லாமல் கல்விச் சான்றிதழ்களை, கோப்புகளை எளிமையாக Flow blockchain இல் உருவாக்குவது அதை எப்படி மாணவர்கள் & ஆசிரியர்கள் பயன்படுத்துவது என உருவாக்கிய Certifi.ly எனும் என் அணியின் மென்பொருள் wallet-less onboarding பிரிவில் வெற்றி பெற்றது.
மாறி வரும் உலக சரக்கு ஏற்றுமதி விதிகளுக்கு ஏற்ப சர்வதேச கப்பல் போக்குவரத்தில் ஒவ்வொரு நாட்டிற்கும் ஏற்ப சுங்கத்துறை படிவங்களை நிரப்புவதில் பல மாற்றங்கள் ஏற்பட்டுக்கொண்டே வருகிறது. இதை நெறிமுறைப்படுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்ட அமெரிக்க ஸ்டார்ட் அப் நிறுவனத்தின் முழு பிளாக்செயின் வடிவமைப்பையும் மதுரையில் உள்ள எங்கள் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது, தற்போது இந்த நிறுவனம் கம்போடியா அரசாங்கத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் இட்டு, கம்போடியாவின் அணைத்து அமெரிக்க ஏற்றுமதிகளும் 2026 முதல் இந்த பிளாக்செயின் தளம் வழியாகவே மேற்கொள்ள நடவடிக்கைகள் நடந்து வருகிறது. ”
`இன்று சந்தையில் பல கிரிப்டோ திட்டங்கள் போலியானவையாகவும், மக்களை ஏமாற்றுவதாகவும் உள்ளன. இதற்கான முக்கிய காரணம் என்ன? உண்மையான, மதிப்புமிக்க திட்டங்களை இந்த போலித் திட்டங்களிலிருந்து மக்கள் எவ்வாறு வேறுபடுத்தி அறிவது? ”
`2013 காலகட்டங்களில் மொத்தமே 10 கிரிப்டோ கரன்சிகள் தான் இருந்தன.. தற்போது சில லட்சம் வித விதமான கரன்சிகள் உள்ளன.
சிறுவர்கள் விளையாட்டுக்கு பயன்படுத்தும் கலர் ஜெராக்ஸ் ரூபாய் நோட்டுகள் போல 10 நிமிடத்தில் கூட ஒரு கிரிப்டோ கரன்சியை உருவாக்கலாம். பார்க்க கவர்ச்சியான ஒரு லோகோ மற்றும் பெயர் வைத்துவிட்டு அதை சில Dex எனப்படும் அரசாங்கத்தின் கட்டுப்பட்டு ஏதும் இல்லாத Decentralized Exchange களில் பட்டியலிட்டு, அதை உருவாக்கிய குழுவே அதிக வர்த்தகம் நடப்பது போல “MarketMaking” வகை ஆர்டர்களை ஏற்படுத்தி (பொதுவாக கடைக்காரரே தனது கடையில் கூட்டமாக வாடிக்கையாளர் இருப்பது போல ஆள் ஏற்பாடு செய்திருப்பாரே அதே வகை தான் ) மற்ற இணையதளங்களில் இந்த காயின் ஒரே நாளில் 800% விலை ஏறிவிட்டது என பரபரப்பு செய்திகளை வர வைத்து மற்ற மக்களையும் வாங்க FOMO எனும் உளவியல் முறையில் தூண்டுவார்கள்.
(Fear of missing out) அதாவது விலை கூடிக்கொண்டே போகிறது நம்மால் வாங்க முடியாமல் போகலாம் எனும் அவசரத்தில் விலை ஏறும் போது ஒரு பொருளை வாங்குவது.
முதலில் அந்த கிரிப்டோ கரன்சி ஏதேனும் ஒரு நிகழ்கால தொழில்துறை சிக்கலை தீர்க்க உருவாக்கப்பட்டதா என பார்க்க வேண்டும்.
அப்படியே இருந்தாலும் அதை உருவாக்கிய குழுவினர் அந்த துறை சார்ந்தவர்களா என பார்க்க வேண்டும். மேற்சொன்ன ஏதும் இல்லை என்றாலும், தனக்கென ஒரு சொந்த நெட்ஒர்க்கில் இயங்கும் கிரிப்ட்டோவா என பார்க்கவேண்டும்.
CEX (Centralized Exchange) Binance , CoinBase , Kraken போன்றவற்றில் அந்த கிரிப்டோ வர்த்தகம் ஆகிறதா என்றால் குறைந்த பட்ச பாதுகாப்பு உண்டு. ஆனால் Binance CEO முறைகேட்டில் ஈடுபட்டதற்காக அமெரிக்க சிறையில் இருந்துவிட்டு Trump ன் தனிப்பட்ட மன்னிப்பின் மூலம் விடுதலையாகிவிட்டார்.
அந்த கிரிப்டோவின் network பொதுவெளியில் decentralized முறையில் தான் உள்ளதா என பார்க்க வேண்டும். அதாவது எந்த ஒரு தனி நபரும் அந்த க்ரிப்ட்டோவை பணம் கொடுத்து மட்டுமல்லாது “Mining” செய்தும் பெற்றுக்கொள்ளும் முறைகளை வெளிப்படையாக அவர்களின் இணைய தளத்தில் வெளியிட்டிருக்க வேண்டும்.
ஒரு கிரிப்டோவின் மதிப்பு எப்படி உயரும் என தெளிவான Tokenomics சொல்லப்படாமல், எல்லாரும் வாங்குறாங்க , விலை நல்ல ஏறிடுச்சு இன்னும் 10 மடங்கு ஏறும் வாங்குங்க என்பது மட்டுமே உங்கள் காதுகளுக்கு வந்தால் அது Ponzi வகை க்ரிப்ட்டோவாக மட்டுமே இருக்கும். உங்களை வாங்க சொல்வபவர் அவர் ஏற்கனவே வாங்கி வைத்த காயின்களை உங்கள் தலையில் கட்டிவிட்டு செல்லவே முயற்சி செய்கிறார் என்று அர்த்தம். உங்களால் அதை யாரிடமும் மறு விற்பனை செய்ய முடியாது.”
``மருத்துவம் (HealChain) மற்றும் சர்வதேச சரக்கு போக்குவரத்து விவசாயம், சினிமா போன்ற நிஜ உலகத் துறைகளில் பிளாக்செயின் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதில் உள்ள மிகப்பெரிய நடைமுறைச் சவால்கள் மற்றும் அதனால் கிடைக்கும் முக்கிய நன்மைகள் என்ன?”
``ஒரு தகவலை ஆவணப்படுத்துவதன் மூலம் போலி தயாரிப்புகளை சந்தையில் இருந்து நீக்க முடியும், ஒரு பொருள் பாதுகாப்பான முறையில் தான் உருவாக்கப்பட்டதா எனும் விவரங்களை சேமிப்பதன் மூலம் நல்ல நோக்கமுள்ள உற்பத்தியாளரின் பொருட்களை சந்தையில் ஆதரித்து மேலும் பல பாதுகாப்பான / ஆரோக்கியமான பொருட்களை சந்தைப்படுத்த ஊக்குவிக்க முடியும். இன்று உணவு பாதுக்காப்பு மற்றும் தரத்தின் மீது மக்கள் பலரும் அக்கறை செலுத்தி வருகிறார்கள்.
பிளாக்செயின் என்பது ஒரு நிரந்தர சேமிப்பிடம் அதுமட்டுல்ல 24x7x365 நேரமும் ஆன்லைனில் இருக்கும்.
கப்பல் சரக்கு போக்குவரத்தில் இறக்குமதி , ஏற்றுமதி படிவங்கள், எந்த நேரத்திற்குள் எந்த படிவத்தை பூர்த்தி செய்தார்கள், என்னென்ன பொருட்கள் பயணப்பட்டு வருகின்றன எனும் விவரங்கள் இன்சூரன்ஸ் நிறுவனங்களுக்கும், வங்கிகளுக்கும் முக்கியம். இது ஒரு விபத்தின் போது இழப்பீடு பெறுவதில் உள்ள சிக்கல்களை நிவர்த்தி செய்ய பிளாக்செயின் மிகவும் உதவும். எந்த நேரத்தில் எந்த தகவல் பதியப்பட்டது என பார்க்கும் போது அதை வேறு எந்த நிறுவனமும் தங்களது சேர்வர் அல்லது காதித்ததில் திருத்தம் செய்வது போல செய்ய முடியாது.
பயனர்களுக்கு எளிமையான முறையில் UI (user interface ) வடிவமைத்து, அவர்களின் பயன்பாட்டு அனுபவத்தை UX (user experience) மேம்படுத்தினால் மட்டுமே விவசாயிகள், வர்த்தகர்கள், மாணவர்கள் போன்ற பயனர்களால் எளிமையாக பிளாக்செயின் மென்பொருட்களை பயன்படுத்த முடியும்.

பதிந்த தகவல் உண்மையானதுதானா என சோதிக்கும் இரண்டாம் கட்ட கள சோதனை முறைகள் அறிமுகம் செய்ய வேண்டும், இது ஆரம்பத்தில் அதிக நேரம் பிடிக்கலாம் ஆனால் அது சேமிக்கப்பட்ட தகவலின் உண்மைத்தன்மையை உறுதிப்படுத்தும். உதாரணத்திற்கு ரசீதுகள், புகைப்படங்கள், போன்றவற்றையும் சேர்த்து IPFS ல் சேமிக்க வேண்டும். ஒரு நோயாளிக்கு ஒரு ஊசி போட்டால் அந்த ஊசியின் தயாரிப்பு batch codeஐயும் சேர்த்து பிளாக்செயின் ல் எழுதி விட்டால், ஒருவேளை அந்த மருந்தில் குறைபாடு இருந்திருந்தால் அதை எந்த நோயாளிக்கு எல்லாம் போடப்பட்டது அடையாளம் காண முடியும். இதை மருத்துவமனை நிர்வாகம் கூட மறுக்க முடியாது. ஒரு வேலை இந்த விவரத்தை மருத்துவமனை செர்வரில் மட்டும் இருந்தால் அவர்கள் இந்த batch தயாரிப்பு நாங்கள் பயன்படுத்தவே இல்லை என விவரங்களை திருத்தி விட முடியும். ஆனால் பிளாக்செயின்ல் ஹேக்கர்களால் கூட திருத்த செய்ய முடியாது.
விவசாயத்திற்காக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட பிளாக்செயின் ஆப் ஒன்றால் ஒரு உணவுப்பொருள் மூலப்பொருட்கள் எந்த இடத்தில, எந்த வகை பாசனத்தில், எத்தனை மணிநேர மனித உழைப்பில், எந்த வகை உரம், எந்த வகை பூச்சி மருந்து, விதை, எவ்வளவு தூரம் பயணப்பட்டு அந்த பொருள் சந்தைக்கு வந்தது போன்ற அணைத்து விவரங்களையும் சேமித்து அதை சூப்பர்மார்கெட்டில் விற்கும் ஒரு உணவுப்பண்டம் / பொருளின் மீதுள்ள QR கோடை ஸ்கேன் செய்து தெரிந்துகொள்ளலாம். ”
``இந்தியாவில் மற்றும் தமிழ்நாட்டில் பிளாக்செயின் மற்றும் கிரிப்டோ தொழில்நுட்பத்தின் எதிர்காலத்தையும், அதன் பரவலான பயன்பாட்டையும் (mass adoption) முதலீடாக இல்லாமல தொழில் வாய்ப்பாக நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?
``நான் இதுவரை வென்ற இரண்டு சர்வதேச ஹெக்கத்தான்களும் சரி, பல பெரிய நிறுவனங்களும் சரி, முக்கிய ஆவணங்கள் மற்றும் தரவுகளை எப்படி பாதுகாப்பாக மற்றும் நிரந்தரமாக பிளாக்செயினில் சேமிப்பது என்பதையே முதல் நோக்கமாக கொண்டு மென்பொருட்களை வடிவமைத்துள்ளோம். DigiLocker தளத்தை விட மேம்பட்டதாக “நம்ம இணையம்” எனும் பெயரில் தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பதுறை அமைச்சர் திரு . PTR. பழனிவேல் தியாகராஜன் துவக்கி வைத்துள்ளார். அரசு மற்றும் தனியார் ஆவணங்களின் பிரதிகளை பிளாக்செயின் தொழில்நுட்பத்தில் சேமிக்கும் ஓர் மென்பொருள்.
கணினி விளையாட்டுகளில், வாடிக்கையாளர்களின் loyalty பாயிண்ட்ஸ், விவசாயத்தில் Carbon footprint தரவு சேமிப்பு, விளையாட்டு புள்ளி விவரங்களை தொகுப்பது, சரக்கு போக்குவரத்து, இன்சூரன்ஸ் போன்ற துறைகளில் பிளாக்செயின் பயன்பாடு இனி அதிகமாக இருக்கும்.
தொழில்நுட்ப உதவியுடன் நம்பிக்கையான முறையில் வாக்காளர்கள் வாக்கு செலுத்தும் முறை, அரசு திட்ட செலவுகளை ஒப்பந்ததாரர்கள் பதிவு செய்து ஊழலை தடுப்பது என பல விதங்களில் மக்களுக்கு பயனளிக்கும்.”
``உங்கள் எதிர்கால திட்டம் என்ன?”
``ஒரு சரியான பிளாக்செயின் மென்பொருள் மூலம் ஒரு வாக்காளர் யாருக்கு வாக்கு செலுத்தினார் என்பதையும் , தான் செலுத்திய வாக்கு தான் செலுத்திய நபரின் வாக்கு எண்ணிக்கையில் தான் சேர்க்கப்பட்டதா என்பதை வாக்காளர் மட்டுமே சரிபார்க்கும் வகையிலும் உருவாக்க முடியும். நான் இப்படி ஒரு வாக்கு செலுத்தும் முறை கொண்ட பிராஜெக்ட் ஒன்றை உருவாக்கி வருகிறோம். அதை அரசாங்கம் அனுமதித்தால் நிச்சயம் ஒரு மாற்றத்தை எதிர்பார்க்கலாம்”
(சாகசம் தொடரும்)
Data in this section is not a buy/sell recommendation but only a compilation of information on various technical/volume-based parameters
Analyst certifies that all of the views, if any, expressed in this report reflect his personal views about the subject company or companies and its or their securities, and no part of his compensation was, is or will be, directly or indirectly related to specific recommendations or views expressed in this report. Analyst affirms that there exists no conflict of interest that can bias his views in this report. The Analyst does not hold any share(s) in the company/ies discussed.
INVESTMENT IN SECURITIES MARKET ARE SUBJECT TO MARKET RISKS. READ ALL THE RELATED DOCUMENTS CAREFULLY BEFORE INVESTING. Registration granted by SEBI and certification from NISM in no way guarantee the performance of the intermediary or provide any assurance of returns to investors. For a detailed disclaimer and disclosure please visit https://www.vikatan.com/business/share-market/113898-disclaimer-disclosures. Before making an investment/trading decision on the basis of this data you need to consider, with the assistance of a qualified adviser, whether the investment/trading is appropriate in light of your particular investment/trading needs, objectives and financial circumstances.
One year Price history of the daily closing price of the securities covered in this section is available at https://www.nseindia.com/report-detail/eq_security (Choose the respective symbol) /name of company/time duration)














