India - US Trade Deal: 'இது சரணாகதி அல்ல; இதுதான் 'Strategic Autonomy'' - எஸ்.ஜி...
WCT20: வார்ம்-அப் போட்டியில் வலுவை காட்டிய இந்தியா! - உலகக் கோப்பை இந்திய அணி காம்பினேஷன் இது தானா?!
10-வது டி20 உலகக் கோப்பை இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகள் இணைந்து நடத்தும் போட்டிகள் பிப்ரவரி 7-ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில், நேற்று இந்தியா – செளத் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே பயிற்சி ஆட்டம் நடைபெற்றது.
டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ் முதலில் பேட்டிங் தேர்வு செய்தார்.

தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய இஷான் கிஷன் – அபிஷேக் சர்மா இணை, ஆரம்பத்திலிருந்தே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. நியூசிலாந்து அணிக்கு எதிராக அண்மையில் முடிவடைந்த தொடரில் அபிஷேக் சர்மாவுடன் சஞ்சு சாம்சன் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய நிலையில், நேற்றைய பயிற்சி ஆட்டத்தில் அதில் மாற்றம் செய்யப்பட்டிருந்தது கவனிக்கத்தக்கது.
உலகக்கோப்பை தொடருக்கும், இந்தியா இஷான் கிஷன் – அபிஷேக் சர்மா இணையுடனே ஆரம்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சஞ்சு சாம்சன் இடத்துக்கு திலக் வர்மா கொண்டு வரப்படலாம் எனத் தெரிகிறது
இஷான் கிஷன் 20 பந்துகளில் 53 ரன்களும், அபிஷேக் சர்மா 18 பந்துகளில் 24 ரன்களும் எடுத்துத் தங்களது விக்கெட்டுகளை ரிட்டையர் அவுட் மூலம் துறந்தனர். இது பயிற்சி ஆட்டம் என்பதால், அனைத்து வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்க அம்முடிவு எடுக்கப்பட்டது.
அதன்பின் களமிறங்கிய திலக் வர்மா மற்றும் கேப்டன் சூர்யகுமார் யாதவ், வேகமான ரன் சேர்ப்பின் மூலம் இந்திய அணியின் ரன் ரேட்டை 10-க்கு மேல் கொண்டு சென்றனர்.
திலக் வர்மா 45 ரன்களில் அவுட் ஆன நிலையில், அடுத்த சில ஓவர்களிலேயே சூர்யகுமார் யாதவ் 30 ரன்களில் தனது விக்கெட்டை இழந்தார்.
பின்னர் களமிறங்கிய அக்சார் பட்டேல் 35 ரன்களும், ரிங்கு சிங் 16 ரன்களும் சேர்த்தனர்.

கடைசி இரண்டு ஓவர்களில் ஹர்திக் பாண்ட்யா விளையாடிய 10 பந்துகளில் 30 ரன்கள் எடுத்த அதிரடி ஆட்டத்தின் மூலம், இந்திய அணி 6 விக்கெட் இழப்புக்கு 240 ரன்கள் குவித்து, செளத்ஆப்பிரிக்கா அணிக்கு இமாலய இலக்கை நிர்ணயித்தது.
இமாலய இலக்கை நோக்கி...
240 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி இரண்டாவது இன்னிங்ஸில் களமிறங்கிய செளத் ஆப்பிரிக்கா அணி, முதல் ஓவரிலேயே லிண்டே விக்கெட்டை அர்ஷ்தீப் சிங் பந்தில் இழந்தது.
அதன்பின் மார்க்ரம் – ரிக்கெல்டன் இணை அணியை மீட்டெடுக்க முயன்றது. 6-வது ஓவரில் மார்க்ரம் ரிட்டையர் அவுட் மூலம் வெளியேறினார்.

அதனைத் தொடர்ந்து இந்திய பந்து வீச்சாளர்களிடம் தொடர்ந்து விக்கெட்களை இழந்த செளத் ஆப்பிரிக்கா அணி, ஸ்டப்ஸ் மற்றும் ஜான்சன் ஆகியோரின் அதிரடி ஆட்டத்தினால் போராடியது.
இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 210 ரன்கள் மட்டுமே எடுத்த செளத் ஆப்பிரிக்கா அணி, 30 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியிடம் தோல்வியை சந்தித்தது.
சில மாற்றங்கள் இருக்கலாம்:
அண்மையில் முடிவடைந்த நியூசிலாந்து தொடரில் ஆடிய இந்திய அணியில் சில மாற்றங்கள் இருக்கும் என்பதை பயிற்சி ஆட்டம் காட்டியுள்ளது. இஷான் கிஷன்(1) - அபிஷேக்(2) ஜோடி தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கவே அதிக வாய்ப்பு உள்ளது. அதன் பின்னர் திலக் வர்மா(3) அல்லது கேப்டன் சூர்ய குமார் யாதவ்(4) ஆகியோர் தேவையை பொறுத்து களமிறங்குவார்கள்.
அவர்களை தொடர்ந்து, பாண்ட்யா(5), துபே(6), ரிங்கு சிங்(7), அக்ஷர் படேல்(8) முதலியோர் களமிறங்குவார்கள். பந்துவீச்சாளர்களை பொறுத்தவரையில் பும்ரா(9), அர்ஷ்தீப் சிங்(10) வேக கூட்டணியை பாண்ட்யா உதவியுடன் செய்வார்கள். அக்ஷர் படேலுடன் கூடுதலாக ஒரு ஸ்பின்னர்(11) அணியில் சேர்க்கப்படுவார். அதில் தான் இந்திய அணி கடும் சவாலை சந்திக்க கூடும். வருண் சக்கரவர்த்தி, குல்தீப் யாதவ் ஆகிய இருவரில் ஒருவருக்கு தான் வாய்ப்பு கிடைக்கும் நிலை உள்ளது.
ஆடுகளத்தின் தன்மையை பொறுத்து கூடுதல் ஸ்பின்னர்களுடன் போக வேண்டிய நிலை ஏற்பட்டால், தூபேவுக்கு பதில் வருண் சக்கரவர்த்தி, குல்தீப் யாதவ் என இருவரையும் களத்துக்கு கொண்டு வரும் வாய்ப்பு உள்ளது.
உங்க பிளேயின் லெவனை கமென்ட்டில் பதிவிடுங்கள் மக்களே..!




















