ChatGPT-யை கேட்டு பங்குச்சந்தையில் முதலீடு செய்யலாமா? - நிபுணர் விளக்கம்
Wonderla: ``புயல், மின்தடை; 25 ஆண்டுகால அனுபவத்தில் இப்படி நடந்ததில்லை'' -மன்னிப்பு கேட்ட வொண்டர்லா
இந்த மாதம் டிசம்பர் 1-ம் தேதி, இரண்டு நாள்களுக்கு முன்பு, சென்னையில் மிகப்பெரிய பொழுதுபோக்கு பூங்காவான வொண்டர்லா திறக்கப்பட்டது. தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் இதனைத் திறந்து வைத்தார்.
இதையடுத்து நேற்று டிசம்பர் 2-ம் தேதி முதல் வொண்டர்லா பயன்பாட்டிற்கு வந்தது. கடந்த ஒரு மாதமாகவே இதற்கான டிக்கெட்டுகள் பல விதமான சலுகைகளில் கூவி–கூவி சமூக வலைதளங்களில் விற்கப்பட்டன. வொண்டர்லாவைப் பற்றிய எதிர்பார்ப்பை உயர்த்த சமூக வலைதளப் பயனர்களை வைத்து ரீல்ஸ், வீடியோக்கள் என பெரிய அளவில் மார்க்கெட்டிங் செய்யப்பட்டது. பலரும் ஆர்வத்துடன் முதல்நாளே டிக்கெட்டுகளை புக்கிங் செய்து சென்றிருந்தனர்.
ஆனால் இதில் சோகமாக இருந்தது என்னவென்றால், சென்னை வொண்டர்லா முழுமையாக தயாராகவில்லை. பல விளையாட்டு எந்திரங்களின் பணிகள் முழுமையாக முடியாமல் இருந்துள்ளன. மிகச் சில விளையாட்டு எந்திரங்களே பயன்பாட்டில் இருந்துள்ளன. அதுவும் சில சமயங்களில் கோளாறு ஏற்பட்டதால், ஆர்வத்துடன் சென்றவர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.

வொண்டர்லா நிர்வாகம், பணிகள் முழுமையாக முடிவடைந்த பிறகே மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வந்திருக்கலாம் - ஏன் இந்த அவசரம்? இல்லையென்றால் திறக்கும் முன்பே விளம்பரத்திற்காக சென்று வீடியோக்கள் பதிவிட்ட சமூக வலைதள இன்ப்ளூயன்சர்கள் கொஞ்சமேனும் அக்கறையுடன் அங்குள்ள நிலைமை, உண்மையை எடுத்துச் சொல்லியிருக்கலாம்.
வொண்டர்லாவின் எந்திரக் கோளாறுகள், முழுமையடையாத பணிகள், அங்கு சென்றவர்களின் ஏமாற்றங்கள் என நேற்று முழுவதும் சமூக வலைதளங்களில் களேபரமாகிக் கொண்டிருந்தன.
இந்நிலையில், இதுகுறித்து வொண்டர்லாவின் நிர்வாக இயக்குனர் அருண் கே. சிட்டிலப்பிள்ளி கூறியதாவது:
"நேற்றுதான் எங்கள் சென்னை வொண்டர்லா பார்க்கை மக்கள் பயன்பாட்டிற்காக திறந்த முதல் நாள். முதல் நாளான நேற்று கிட்டத்தட்ட 2,000 பேர் வந்திருந்தார்கள். புயலும் மழையும் இருக்கும் சமயத்திலும் இவ்வளவு பேர் வந்து வரவேற்பு கொடுத்தது மிகவும் நெகிழ்ச்சியாக உள்ளது.
Thank you Chennai ❤️ for that overwhelming response on our first day! We had almost 2000 visitors yesterday! We did experience a lot of power outages due to the cyclone and sorry that caused delays for our guests. But I can assure you that our rides were safe and we will further… pic.twitter.com/F8UZtMC9Vy
— Arun Chittilappilly (@arunpally) December 3, 2025
இருப்பினும், நேற்று புயல்-மழை மற்றும் அதனால் ஏற்பட்ட மின்தடை காரணமாக வொண்டர்லாவின் சில ரைடுகள் பாதியிலேயே நின்றுவிட்ட எதிர்பாராத சம்பவங்கள் நடந்தன. எங்கள் நிர்வாகமும் முழு தீவிரத்துடன் பணியாற்றி அனைத்து தடைகளையும் சரிசெய்தது. எந்தவொரு பாதிப்பும் யாருக்கும் ஏற்படவில்லை; அனைவரின் பாதுகாப்பையும் உறுதி செய்தோம்.
சிலருக்கு சில பிரச்னைகள் இருந்ததாக கூறப்படுகிறது. எங்கள் தரப்பில் இருந்த பிரச்னைகளுக்காக நாங்கள் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறோம். இனி இப்படியானது நடைபெறாது.
25 ஆண்டுகளாக இந்தியா முழுவதும் இந்த தொழிலை நடத்தி வருகிறோம். இதுவரை எந்தப் பிரச்னையும் ஏற்பட்டதில்லை. இனியும் ஏற்படாது," என்று அவர் கூறியுள்ளார்.




















