Bigg Boss Tamil 9: கடைசி வாரத்தில் வெளியேறிய வைல்டு கார்டு போட்டியாளர்!
ஜன நாயகன்: ``வேகமாக படரும் பேரச்சத்தை துடைத்தெறிய குரல்கொடுப்போம்" - இயக்குநர் மாரிசெல்வராஜ்
நடிகர் விஜய், நடிகைகள் பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ உள்ளிட்டோர் நடித்துள்ள ஜனநாயகன் படத்துக்கு தணிக்கை சான்றிதழ் வழங்க மறுத்து, அந்த படத்தை மறுஆய்வு குழுவுக்கு தணிக்கை வாரியம் பரிந்துரை செய்தது. இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில், அந்த படத்தை தயாரித்துள்ள கே.வி.என்.புரோடக்ஷன் நிறுவனம் வழக்கு தொடர்ந்தது.
நேற்று காலை திரைப்படத்துக்கு சென்சார் சான்றிதழ் வழங்க உத்தரவிட்ட தீர்ப்பை, நேற்று மாலை நீதிமன்ற அமர்வு நிறுத்தி வைத்திருக்கிறது. அதனால், யாரும் எதிர்பார்க்காத வகையில் பொங்கலுக்கு திரைப்படம் வெளியாக முடியாத சூழல் உருவாகியிருக்கிறது.

தணிக்கைச் சான்றிதழ் தராமல் இவ்வளவு காலம் தாழ்த்துவது ஜனநாயகப் படுகொலை என இயக்குநர் விக்ரமன் சாடியிருந்தார். அதைத் தொடர்ந்து, திரைப் பிரபலங்கள் பலரும் இந்தச் சூழலுக்கு கடுமையான எதிர்வினையாற்றியிருந்தனர்.
அதன் அடிப்படையில் இயக்குநர் மாரிசெல்வராஜ் தன் எக்ஸ் பக்கத்தில், ``ஜனநாயகன் திரைப்படத்தின் மீது நம் தணிக்கைத்துறை நிகழ்த்தியிருப்பது அப்பட்டமான அநீதி தான். ஒரு படைப்பாளி என்கிற முறையில் இந்த அநீதியை எதிர்ப்பதன் மூலம் நம் ஜனநாயகத்தின் மீதும் நம் படைப்பு சுதந்திரத்தின் மீதும் வேகமாக படரும் பேரச்சத்தை துடைத்தெறிய பெருங்குரலெழுப்புவோம்." எனத் தெரிவித்திருக்கிறார்.
இயக்குநர் பா.ரஞ்சித் தன் எக்ஸ் பக்கத்தில், ``ஜனநாயகன் திரைப்படத்தின் தணிக்கை விவகாரத்தில் மத்திய திரைப்படத் தணிக்கைத்துறையின் செயல்பாடு மிகவும் மோசமானது. தனிப்பட்ட அரசியல் காழ்ப்புணர்ச்சியின் காரணமாக நடந்திருப்பதற்கான சாத்தியக்கூறுகள் அப்பட்டமாகவே தெரிகிறது. அதே போல, 'பராசக்தி' திரைப்படத்திற்கு கொடுக்கப்பட்ட நெருக்கடிகள் போன்றே, என் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படங்களுக்கும், நீலம் தயாரிப்பில் வெளிவந்த திரைப்படங்களுக்கும் கொடுக்கப்பட்டதை பலமுறை பகிர்ந்திருக்கிறேன்.

ஆனால், ஜனநாயகன் படத்திற்கு நிகழ்ந்திருப்பதென்பது, தணிக்கைத்துறை தவறான வழிகாட்டுதலுக்குள் சிக்கியிருப்பதைக் காட்டுகிறது. மேலும், மாற்றுக்குரல்கள் வராமல் தடுப்பதற்கான வேலையை மிகத்தீவிரமாகக் கடைபிடிக்கின்ற இது போன்ற மோசமான போக்கை வன்மையாகக் கண்டிக்க வேண்டும். படைப்புச்சுதந்திரம் பாதுகாக்கவும், வரும் காலங்களில் மத்திய தணிக்கைத்துறை சுதந்திரமாக செயல்படவும் குரலெழுப்புவோம்." எனக் குறிப்பிட்டிருக்கிறார்.















