Bigg Boss Tamil 9: கடைசி வாரத்தில் வெளியேறிய வைல்டு கார்டு போட்டியாளர்!
ஜனநாயகன்: ``சில உண்மைகளைச் சொல்ல விரும்புகிறோம்" - தயாரிப்பாளர் KVN கே.நாரயணா வெளியிட்ட வீடியோ
நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் ஜனநாயகன் திரைப்படம் நேற்றே வெளியாக வேண்டியது. ஆனால், திடீரென உருவாக்கப்பட்ட சென்சார் பிரச்னையால், யாரும் எதிர்பார்க்காத வகையில் பொங்கலுக்கு திரைப்படம் வெளியாக முடியாத சூழல் உருவாகியிருக்கிறது. இது நடிகர் விஜய் ரசிகர்களுக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறாது.
இந்த நிலையில், ஜனநாயகன் திரைப்படத் தயாரிப்பாளரும், கே.வி.என் தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளருமான வெங்கட் கே.நாராயணன் வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.
அதில், ``அன்புடனும் மிகுந்த எதிர்பார்ப்புடனும் 'ஜனாநாயகன்' திரைப்படத்திற்காகக் காத்திருக்கும் அனைவருக்கும் எங்களது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். கடந்த சில நாட்களாக எங்களுக்கு வந்த எண்ணற்ற அழைப்புகளும், மெசேஜ்களும், இந்தப் படம் ஏற்கனவே உங்கள் மனதில் எவ்வளவு ஆழமாக இடம் பிடித்துள்ளது என்பதை எங்களுக்கு நினைவூட்டுகின்றன.

சில உண்மைகளை...
இந்த விவகாரம் தற்போது நீதிமன்றத்தின் பரிசீலனையில் இருப்பதால், எங்களால் சில விஷயங்களை மட்டுமே பேச முடியும் என்ற வரம்பிற்கு உட்பட்டு, சில உண்மைகளை உங்கள் முன் வைக்க விரும்புகிறோம்.
இத்திரைப்படம் கடந்த 2025 டிசம்பர் 18 அன்று தணிக்கை வாரியத்திடம் (CBFC) சமர்ப்பிக்கப்பட்டது. தணிக்கைக் குழுவினர் படத்தைப் பார்த்துவிட்டு, டிசம்பர் 22 அன்று சில மாற்றங்களுடன் 'UA 16+' சான்றிதழ் வழங்கப்படும் என்று மின்னஞ்சல் அனுப்பினர்.
அவர்கள் பரிந்துரைத்த மாற்றங்களைச் செய்து, படத்தை மீண்டும் சமர்ப்பித்தோம். எங்களது கடின உழைப்பை ரசிகர்களான உங்களுடன் பகிர்ந்து கொள்ளவும், படத்தை வெளியிடவும் நாங்கள் தயாராக இருப்பதாகவே நம்பினோம். இருப்பினும், முறையான சான்றிதழுக்காகத் தொடர்ந்து காத்திருந்தோம்.
திட்டமிட்டபடி படம் வெளியாகவிருந்த சில நாட்களுக்கு முன்பு, அதாவது 2026 ஜனவரி 5 அன்று மாலையில், ஒரு புகாரின் அடிப்படையில் இப்படம் 'மறுஆய்வுக் குழுவிற்கு' (Revising Committee) பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக எங்களுக்குத் தகவல் கிடைத்தது.
யார் அந்தப் புகார்தாரர் என்று தெரியாத நிலையிலும், மறுஆய்வுக் குழுவை அணுக போதிய நேரமில்லாத காரணத்தினாலும், நாங்கள் உயர் நீதிமன்றத்தை அணுகினோம்.
ஜனவரி 6 மற்றும் 7 ஆகிய தேதிகளில் நடந்த விசாரணையைத் தொடர்ந்து, 9.1.2026 காலை 'UA 16+' சான்றிதழ் வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், தணிக்கை வாரியம் (CBFC) உடனடியாக இந்த முடிவை எதிர்த்து மேல்முறையீடு செய்தது. இதனால் சான்றிதழ் வழங்கக் கோரிய உத்தரவுக்கு தற்போது இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
கடினமான தருணம்
இந்த இக்கட்டான காலத்தில் எங்களுடன் நின்ற ரசிகர்கள், விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் பிற பங்குதாரர்களிடம் நாங்கள் மனமார மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறோம். திட்டமிட்டபடி படத்தை உங்களிடம் கொண்டு சேர்க்க எங்களால் இயன்ற அனைத்து முயற்சிகளையும் எடுத்தோம், ஆனால் இந்தத் திடீர் மாற்றங்கள் எங்கள் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டவை.
பல ஆண்டுகால கடின உழைப்பையும், ஆன்மாவையும் இந்தப் படத்திற்காக அர்ப்பணித்த அனைவருக்கும் இது ஒரு உணர்ச்சிகரமான மற்றும் கடினமான தருணமாகும்.

எல்லாவற்றிற்கும் மேலாக, தளபதி விஜய் சார் தனது ரசிகர்களின் அன்பிற்கும், திரைத்துறையின் மதிப்பிற்கும் ஏற்ற ஒரு மிகச்சிறந்த விடைபெறலைப் பெறத் தகுதியானவர் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.
உங்களின் பொறுமையும், நம்பிக்கையும், அசைக்க முடியாத ஆதரவுமே எங்களுக்கு வலிமை அளிக்கிறது. நீதித்துறையின் மீது எங்களுக்கு முழு நம்பிக்கை உள்ளது. இப்படம் மிக விரைவில் உங்களை வந்தடையும் என்று நம்புகிறோம்." எனக் குறிப்பிட்டிருக்கிறார்.















