செய்திகள் :

ஜனநாயகன்: `தணிக்கை வாரியம் காலாவதியானது' - இயக்குநர் ராம் கோபால் வர்மா காட்டம்!

post image

நடிகர் விஜய், நடிகைகள் பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ உள்ளிட்டோர் நடித்துள்ள ஜனநாயகன் படத்துக்கு தணிக்கை சான்றிதழ் வழங்க மறுத்து, அந்த படத்தை மறுஆய்வு குழுவுக்கு தணிக்கை வாரியம் பரிந்துரை செய்தது. இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில், அந்த படத்தை தயாரித்துள்ள கே.வி.என்.புரோடக்‌ஷன் நிறுவனம் வழக்கு தொடர்ந்தது.

நேற்று காலை திரைப்படத்துக்கு சென்சார் சான்றிதழ் வழங்க உத்தரவிட்ட தீர்ப்பை, நேற்று மாலை நீதிமன்ற அமர்வு நிறுத்தி வைத்திருக்கிறது. அதனால், யாரும் எதிர்பார்க்காத வகையில் பொங்கலுக்கு திரைப்படம் வெளியாக முடியாத சூழல் உருவாகியிருக்கிறது. இந்த நிலையில், இயக்குநரும், தயாரிப்பாளருமான ராம் கோபால் வர்மா தன் எக்ஸ் பக்கத்தில் நீண்டப் பதிவு ஒன்றை பதிவிட்டிருக்கிறார்.

ராம் கோபால் வர்மா - Ram Gopal Varma
ராம் கோபால் வர்மா - Ram Gopal Varma

முட்டாள்தனமானது

அதில்,``நடிகர் விஜய்யின் 'ஜனநாயகன்' திரைப்படத்திற்கு ஏற்பட்டுள்ள தணிக்கை சிக்கல்கள் குறித்து மட்டுமல்லாமல், ஒட்டுமொத்தமாகப் பார்த்தால், தணிக்கை வாரியம் இன்றும் தேவை என்று நினைப்பது உண்மையிலேயே முட்டாள்தனமானது.

தணிக்கை வாரியம் என்பது காலாவதியான ஒரு பழைய முறை. அது இன்று தேவையே இல்லை. ஆனாலும், 'இந்தக் காலத்துக்கு இது தேவையா?' என்று யாரும் கேள்வி கேட்கத் துணியாததாலேயே அது இன்னும் நீடிக்கிறது. இதற்குத் திரைத்துறையினரின் மெத்தனப் போக்குதான் மிக முக்கியமான காரணம்.

இன்று 12 வயது சிறுவன் ஒருவன் தனது அலைபேசியில் தீவிரவாதிகள் நடத்தும் கொடூரமான தாக்குதல்களைப் பார்க்க முடிகிறது. 9 வயது சிறுவன் ஆபாசப் பக்கங்களுக்குள் நுழைய முடிகிறது. ஓய்வு பெற்ற ஒருவர் தனது நேரத்தைக் கழிக்கத் தீவிரவாதப் பிரசாரங்கள், சதித் திட்டக் கோட்பாடுகள் (Conspiracy theories) போன்றவற்றை உலகெங்கிலும் இருந்து எவ்விதத் தடையுமின்றி, 'அல்காரிதம்' (Algorithm) உதவியுடன் பார்க்க முடிகிறது. இவை அனைத்தும் எவ்விதத் தணிக்கையும் இல்லாமல் உடனடியாகக் கிடைக்கின்றன.

சினிமா
சினிமா

அதே சமயம், செய்தி சேனல்கள் முதல் யூடியூபர்கள் வரை சமுதாயத்தின் அனைத்துத் தரப்பினரும் இன்று தகாத வார்த்தைகளைப் பேசுகிறார்கள். "சினிமா ஒரு வலிமையான ஊடகம்" என்ற பழைய நம்பிக்கையை நீங்கள் முன்வைத்தால், சினிமாவை விட சமூக ஊடகங்களுக்கு அதிக வீச்சு இருக்கிறது என்ற உண்மையைப் மறுக்க முடியாது. சமூக ஊடகம் அரசியல் வன்மம், மதவெறி, தனிமனிதத் தாக்குதல்கள் மற்றும் விவாதங்கள் என்ற பெயரில் நடைபெறும் தணிக்கையற்ற கூச்சல்களால் நிறைந்துள்ளது.

நகைச்சுவை

இப்படியான ஒரு யதார்த்த நிலையில், படத்தில் வரும் ஒரு வார்த்தையை நீக்குவதாலோ, ஒரு காட்சியை வெட்டுவதாலோ அல்லது சிகரெட்டை மறைப்பதாலோ (Blur) சமுதாயத்தைப் பாதுகாத்துவிடலாம் என்று தணிக்கை வாரியம் நம்புவது ஒரு நகைச்சுவை.

தணிக்கை வாரியம் என்பது காட்சிகள் அரிதாகக் கிடைத்த, ஊடகங்கள் அரசின் கட்டுப்பாட்டில் இருந்த ஒரு காலத்தில் உருவானது. அப்போது திரையரங்குகளே மக்கள் கூடும் இடங்களாக இருந்தன. செய்தித்தாள்களுக்கு, தொலைக்காட்சிகளுக்கு ஆசிரியர்கள் இருந்தனர். அதனால் அப்போது 'கட்டுப்பாடு' என்பது அர்த்தமுள்ளதாக இருந்தது. ஆனால் இன்று, மக்கள் எதைப் பார்க்க வேண்டும் அல்லது பார்க்கக் கூடாது என்பதை எவராலும் தீர்மானிக்க முடியாத சூழலில், எந்த வடிவத்திலான கட்டுப்பாடும் சாத்தியமற்றது.

சென்சார் வேண்டுமா
சென்சார் வேண்டுமா

அறநெறி வேஷமிடும்

இக்காலத்தில், தணிக்கை என்பது காட்சிகளைத் தடுப்பதில்லை... அது பார்வையாளர்களை அவமதிப்பதாகவே இருக்கிறது. நம்மை யார் ஆள வேண்டும் என்று தீர்மானிக்கும் அறிவு நமக்கு இருப்பதாகக் கருதப்படுகிறது. ஆனால் எதைப் பார்க்க வேண்டும், எதைக் கேட்க வேண்டும் என்று தீர்மானிக்கும் அறிவு நமக்கு இல்லையா?

தணிக்கை வாரியம் இப்போது செய்வது 'பாதுகாப்பு' அல்ல, அது ஒரு நாடகம். சிந்தனைக்குப் பதில் கத்தரிக்கோலை வைத்துக்கொண்டு, 'பொறுப்பு' என்ற போர்வையில் அறநெறி வேஷமிடும் ஓர் அதிகாரச் சடங்கு இது.

சமூக ஊடகங்களில் கொடூரமான வன்முறைகளைத் தடையின்றிப் பார்க்கும் அதே சமுதாயம், ஒரு திரையரங்கில் ஒரு படைப்பாளி எதையேனும் காட்டினால் மட்டும் திடீரென "அக்கறை" கொள்கிறது. இந்த இரட்டை வேடம் மிகவும் ஆபத்தானது.

தணிக்கை முறை மக்களை எப்போதும் குழந்தைகளாகவே கருதுகிறது. இன்றைய குழந்தைகளுக்கு எவற்றையெல்லாம் பார்க்கும் வசதி இருக்கிறது என்பது கூட அவர்களுக்குத் தெரியவில்லையா?

சினிமா என்பது பாடம் நடத்தும் வகுப்பறை அல்ல. அது ஒரு கண்ணாடி, ஒரு பார்வை, ஒரு வெளிப்பாடு மற்றும் பொழுதுபோக்கிற்கான கருத்துப் பதிவு. அதிகாரிகளின் வேலை அதை வெட்டுவது அல்ல; குடிமக்கள் தங்களுக்கானதைச் சொந்தமாகத் தீர்மானிப்பார்கள் என்று அவர்களை நம்புவதுதான். இதுவே அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள பேச்சு மற்றும் கருத்துச் சுதந்திரத்தின் அடிப்படை.

ஜனநாயகன்
ஜனநாயகன்

"குழந்தைகள் அல்லது குழந்தைகள் போன்ற பெரியவர்களைப் பற்றிச் சிந்தியுங்கள்" என்பதுதான் உங்கள் வாதம் என்றால், தனிப்பட்ட ரசனைகளையே பொது ஒழுக்கம் என்று கருதும் சில குழுக்களின் கத்தரிக்கோல்களால் அவர்களைப் பாதுகாத்துவிட முடியாது என்பதைப் புரிந்துகொள்ளப் பெரிய அறிவு தேவையில்லை.

வயது வாரியாகப் பிரிப்பது (Age classification) அர்த்தமுள்ளது. படத்தின் உள்ளடக்கத்தைப் பற்றிய எச்சரிக்கை விடுப்பது அர்த்தமுள்ளது. ஆனால் தணிக்கை செய்வது அர்த்தமற்றது.

இன்று தணிக்கை வாரியத்தின் அவசியத்தை நியாயப்படுத்துவது என்பது, சுவர்களே இடிந்து உள்ளே இருப்பவை அனைவருக்கும் தெரிந்த பின்னரும், ஒரு கட்டிடத்திற்கு வாட்ச்மேன் வேண்டும் என்று அடம் பிடிப்பதற்குச் சமம்.

யாரும் கண்காணிக்காத, தணிக்கை செய்யாத பல தளங்களுக்கு உலகம் ஏற்கனவே மாறிவிட்டது. எனவே, 'தங்கள் தேவை முடிந்துவிட்டது' என்று ஒப்புக்கொள்ளும் தைரியம் அதிகாரிகளுக்கு இருக்கிறதா? அதைவிட முக்கியமாக, அதைத் தட்டிக்கேட்கும் துணிச்சல் நம் திரைத்துறைக்கு இருக்கிறதா என்பதுதான் வேதனையான கேள்வி.

எனவே, ஏதோ ஒரு படத்திற்குச் சிக்கல் வரும்போது மட்டும் இதைப் பற்றிப் பேசாமல், தணிக்கை வாரியத்தை உருவாக்கிய அந்தச் சிந்தனை முறைக்கு எதிராகவே நம் போராட்டம் இருக்க வேண்டும்." எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

பராசக்தி விமர்சனம்: மொழிப் போர் பின்னணியில் ஒரு கமெர்ஷியல் சினிமா; வென்றதா இந்த புறநானூற்றுப் படை?

1959-ம் ஆண்டு ரயில்வே பணிகளுக்கான தேர்வு அறிவிப்பு முழுக்க முழுக்க இந்தி மொழியிலேயே நாடு முழுவதும் வெளியிடப்படுகிறது. இந்த இந்தித் திணிப்புக்கு எதிராக செழியன் (சிவகார்த்திகேயன்) தலைமையில் இந்தி பேசாத ... மேலும் பார்க்க

ஜன நாயகன்: ``வேகமாக படரும் பேரச்சத்தை துடைத்தெறிய குரல்கொடுப்போம்" - இயக்குநர் மாரிசெல்வராஜ்

நடிகர் விஜய், நடிகைகள் பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ உள்ளிட்டோர் நடித்துள்ள ஜனநாயகன் படத்துக்கு தணிக்கை சான்றிதழ் வழங்க மறுத்து, அந்த படத்தை மறுஆய்வு குழுவுக்கு தணிக்கை வாரியம் பரிந்துரை செய்தது. இதை எதிர்... மேலும் பார்க்க

ஜனநாயகன்: ``திரைப்பட வெளியீடுக்கு இடையூறு, ஜனநாயக படுகொலை" - கொதிக்கும் இயக்குநர் விக்ரமன்!

ஜனநாயகன் திரைப்படம் வெளியாவது தொடர்பான சிக்கல் நீடித்து வருகிறது. திடீரென உருவாக்கப்பட்ட சென்சார் பிரச்னையால் படம் வெளியாவது தாமதமாகிறது. இந்த விவகாரம் தொடர்பாக ஜனநாயகன் திரைப்படத் தயாரிப்பாளரும், கே.... மேலும் பார்க்க

ஜனநாயகன்: ``சில உண்மைகளைச் சொல்ல விரும்புகிறோம்" - தயாரிப்பாளர் KVN கே.நாரயணா வெளியிட்ட வீடியோ

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் ஜனநாயகன் திரைப்படம் நேற்றே வெளியாக வேண்டியது. ஆனால், திடீரென உருவாக்கப்பட்ட சென்சார் பிரச்னையால், யாரும் எதிர்பார்க்காத வகையில் பொங்கலுக்கு திரைப்படம் வெளியாக ... மேலும் பார்க்க