Bigg Boss Tamil 9: கடைசி வாரத்தில் வெளியேறிய வைல்டு கார்டு போட்டியாளர்!
ஜனநாயகன்: ``திரைப்பட வெளியீடுக்கு இடையூறு, ஜனநாயக படுகொலை" - கொதிக்கும் இயக்குநர் விக்ரமன்!
ஜனநாயகன் திரைப்படம் வெளியாவது தொடர்பான சிக்கல் நீடித்து வருகிறது. திடீரென உருவாக்கப்பட்ட சென்சார் பிரச்னையால் படம் வெளியாவது தாமதமாகிறது.
இந்த விவகாரம் தொடர்பாக ஜனநாயகன் திரைப்படத் தயாரிப்பாளரும், கே.வி.என் தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளருமான வெங்கட் கே.நாராயணா வெளியிட்ட வீடியோவில் கூட, ``அவர்கள் பரிந்துரைத்த மாற்றங்களைச் செய்து, படத்தை மீண்டும் சமர்ப்பித்தோம். எங்களது கடின உழைப்பை ரசிகர்களான உங்களுடன் பகிர்ந்து கொள்ளவும், படத்தை வெளியிடவும் நாங்கள் தயாராக இருப்பதாகவே நம்பினோம்.

இருப்பினும், முறையான சான்றிதழுக்காகத் தொடர்ந்து காத்திருந்தோம். இந்தத் திடீர் மாற்றங்கள் எங்கள் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டவை." என உருக்கமாகப் பேசியிருந்தார். அதைத் தொடர்ந்து திரைத்துறையினர் பலரும் கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், திரைத்துறையில் நடிகர் விஜய்க்கு பெரும் அங்கீகாரங்களைப் பெற்றுத் தரும்படியான படங்களை இயக்கிய பிரபல இயக்குநர் விக்ரமன் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.
அதில், ``ஜனநாயகன்" திரைப்படத்தின் வெளியீடுக்கு இடையூறாக இருப்பது ஜனநாயக படுகொலை. ஒட்டுமொத்த திரைத்துறையும். தமிழ் சினிமா ரசிகர்களும் இதற்கு எதிராக குரல் எழுப்ப வேண்டும்.
"ஆயிரம் கைகள் எதிர்த்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை. ஆணையிட்டே யார் தடுத்தாலும் அலைகடல் ஓய்வதில்லை" தாமதமாக வந்தாலும் மிகப்பெரிய வசூல் சாதனையை புரிந்து விஸ்வரூப வெற்றியடைய ஜனநாயகனுக்கு வாழ்த்துக்கள்." எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
















