ஜோஹ்ரான் மம்தானியை வீழ்த்த ட்ரம்ப் செய்த உள்ளடி வேலை; படுதோல்வி அடைந்த ஆளும் குட...
ஜோஹ்ரான் மம்தானியை வீழ்த்த ட்ரம்ப் செய்த உள்ளடி வேலை; படுதோல்வி அடைந்த ஆளும் குடியரசுக் கட்சி!
உலக அளவில் ராணுவ பலம் மிக்க நாடு, பொருளாதார பலம் மிக்க நாடாக விளங்கும் அமெரிக்கா இனவெறிக்கும் பெயர்போனதுதான்.
அப்படியான அமெரிக்காவில் ஒரு இஸ்லாமியர் தேர்தலில் வெல்வது அவ்வளவு எளிதானதல்ல. அவர் இந்திய வம்சாவளியாக இருந்துவிட்டால் இன்னும் கடினம்.
கடந்த ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில்கூட ஜனநாயகக் கட்சியின் வேட்பாளராகக் கமலா ஹாரிஸ் நின்றபோது இந்திய வம்சாவளி அமெரிக்காவை ஆள்வதா என்றெல்லாம் வெளிப்படையாகப் பிரசாரம் நடந்தது.

இன்று அதே அமெரிக்காவில் ஒரு இஸ்லாமியராக, இந்திய வம்சாவளியாக நியூயார்க் மேயர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளராகக் களமிறங்கி போட்டியிட்டு வெற்றிபெற்று, நியூயார்க்கின் முதல் இஸ்லாமிய மேயர் என்ற வரலாற்றைப் படைத்திருக்கிறார் 34 வயது ஜோஹ்ரான் மம்தானி (Zohran Mamdani).
ஆனால், இந்த வெற்றி அவ்வளவு எளிதாக அவருக்கு கிடைத்திருக்காது என்பதை உங்களால் புரிந்துகொள்ள முடியம் என்றாலும், இதில் அதிபர் ட்ரம்ப் தனது சொந்தக் கட்சி வேட்பாளர் தோற்றாலும் பரவாயில்லை என ஆடிய ஆட்டம் வெளிவந்திருக்கிறது.
அமெரிக்காவில் அதிபர் தேர்தலாக இருந்தாலும், மேயர் தேர்தலாக இருந்தாலும் அது ஜனநாயகக் கட்சிக்கும், தற்போது ஆளுங்கட்சியாக இருக்கும் குடியரசுக் கட்சிக்கும்தான்.
அதனால், யாரை வேட்பாளராகக் களமிறக்க வேண்டும் என்பதற்கே முதலில் இந்த இரு கட்சிகளுக்குள்ளும் தேர்தல் நடக்கும். அப்படி இந்த நியூயார்க் மேயர் தேர்தலுக்கும் இந்த இரண்டு கட்சிகளுக்குள் தேர்தல் நடந்தது.
ஆளும் குடியரசுக் கட்சிக்குள் நடந்த தேர்தலில் கர்ட்டிஸ் ஸ்லிவா (Curtis Sliwa) என்பவர் வெற்றிபெற்று வேட்பாளர் ஆனார்.

மறுபக்கம், ஜனநாயகக் கட்சிக்குள் நடந்த தேர்தலில் ஜோஹ்ரான் மம்தானிக்கும், அதே கட்சியில் பெரும் செல்வாக்குமிக்க முன்னாள் நியூயார்க் மாகாண கவர்னர், முன்னாள் அட்டர்னி ஜெனரல், மிகப்பெரிய கோடீஸ்வரர் என்ற பல முகங்களைக் கொண்ட 67 வயது ஆண்ட்ரூ குவோமோவுக்கும் (Andrew Cuomo) இடையே போட்டி நிலவியது.
இறுதியில் ஜோஹ்ரான் மம்தானி வெற்றிபெற்று ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் ஆனார்.
ஆனால், இதை எதிர்பார்க்காத ஆண்ட்ரூ குவோமோ, தனது கட்சி இந்தத் தேர்தலில் தோற்று குடியரசுக் கட்சி வேட்பாளர்கூட மேயர் ஆகட்டும், எக்காரணம் கொண்டும் பிழைக்க வந்தவன் ஆளக்கூடாது அதிலும் இஸ்லாமியர் கூடாது என ஜனநாயகக் கட்சியின் வாக்குகளைப் பிரிக்கும் வண்ணம் சுயேச்சையாகத் தேர்தலில் போட்டியிட்டார்.
இந்தவொரு இன ஈர்ப்புப் போதாதா ட்ரம்பைக் கவர்வதற்கு. இதுதான் வாய்ப்பு என ஆண்ட்ரூ குவோமோவை தன்பக்கம் இழுத்துக்கொண்டார்.
ட்ரம்பின் இந்தத் தலையீட்டால், குடியரசுக் கட்சிக்குள் அக்கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளர் கர்ட்டிஸ் ஸ்லிவாவை விட, ஆண்ட்ரூ குவோமோவுக்கு ஆதரவு கூடியது.
இது வெளிப்படையாக வெளியில் தெரியவே, ஜனநாயகக் கட்சி வேட்பாளருக்கும், சுயேச்சை வேட்பாளருக்கும் தேர்தல் எனில் குடியரசுக் கட்சி எதற்கு தேர்தலில் நிற்கிறது பேசாமல் விலகிடலாம் என்று பேச்சு பரவின. அதுதான் இப்போது தேர்தல் முடிவுகளில் எதிரொலித்திருக்கிறது.

ட்ரம்பின் ஆளும் குடியரசுக் கட்சியின் வேட்பாளர் கர்ட்டிஸ் ஸ்லிவா வெறும் 7.1 சதவிகித வாக்குகள் பெற்று இரண்டாம் இடம்கூட பிடிக்க முடியாமல் மூன்றாம் இடத்துக்குத் தள்ளப்பட்டார்.
ட்ரம்பின் ஆதரவு பெற்ற சுயேச்சை வேட்பாளர் ஆண்ட்ரூ குவோமோ 41.59 சதவிகித வாக்குகள் பெற்று இரண்டாம் இடம் பிடித்தார்.
ஆண்ட்ரூ குவோமோவுக்கு விழுந்ததில் முக்கால்வாசி வாக்குகள் நியாயமாக கர்ட்டிஸ் ஸ்லிவாவுக்கு அதாவது குடியரசுக் கட்சிக்குச் செல்ல வேண்டிய வாக்குகள்.

ஆண்ட்ரூ குவோமோவால் எதிர்பார்த்தபடி ஜனநாயகக் கட்சியின் வாக்குகளைப் பிரிக்க முடியவில்லை. இதனால், ஜனநாயகக் கட்சியின் பெரும்பான்மையான வாக்குகளும், கூடுதலாக நடுநிலையான மக்களின் வாக்குகளும் சேர்த்து 50.30 சதவிகித வாக்குகளுடன் வெற்றிபெற்று சாதனை படைத்திருக்கிறார் ஜோஹ்ரான் மம்தானி.
ட்ரம்ப்பால், ஆளுங்கட்சியாக இருந்தும் மூன்றாம் இடத்துக்குச் சென்று பெரும் தோல்வியைச் சந்தித்திருக்கிறது குடியரசுக் கட்சி.
ஜோஹ்ரான் மம்தானியின் இந்த வெற்றி வெறுமனே தேர்தல் வெற்றி மட்டுமல்லாமல், இனவெறிக்கும் அதன் உருவமான ட்ரம்புக்கும் எதிரான வெற்றியாகப் பார்க்கப்படுகிறது.














