`கை எப்படி குளர்ச்சியாக இருக்கு?' - ஆசிரியை சித்ரவதையால் மாணவி தற்கொலை; அடுத்தடு...
ஊட்டி: காட்டு மாடுகளைச் சுட்டு கொல்லும் கேரள வேட்டைக்கும்பல்; வேடிக்கை பார்க்கிறதா வனத்துறை?
கேரளா, கர்நாடகா மாநிலங்களை தமிழ்நாட்டுடன் இணைக்கும் முச்சந்திப்பு பகுதியில் அமைந்திருக்கிறது நீலகிரி மாவட்டம். வனங்கள் அடர்ந்த நீலகிரியில் சுற்றுலாப் பயணிகளைப் போல ஊடுருவும் வேட்டைக் கும்பல்கள் வனவிலங்குகளை வேட்டையாடி இறைச்சியைக் கடத்திச் செல்கின்றனர்.
அதிலும் குறிப்பாக கேரள மாநிலத்தைச் சேர்ந்த வேட்டைக் கும்பல்களின் வேட்டைக்களமாக நீலகிரி காடுகள் மாறி வருகிறது.
கடமான், காட்டு மாடு உள்ளிட்ட வனவிலங்குகள் மட்டுமின்றி தோடர் பழங்குடிகளின் வளர்ப்பு எருமைகளையும் கேரள கும்பல்கள் வேட்டையாடிச் செல்கின்றன.

தமிழ்நாடு வனத்துறை மற்றும் காவல்துறையின் அலட்சியம் காரணமாகவே கேரள வேட்டைக் கும்பல்களின் ஊடுருவல் அதிகரித்து வருவதாகவும் நடவடிக்கை என்கிற பெயரில் வேடிக்கை பார்ப்பதாகவும் வனவிலங்கு பாதுகாப்பு செயல்பாட்டாளர்கள் குற்றச்சாட்டை முன்வைத்து வருகின்றனர்.
இந்த நிலையில், நீலகிரி வனக்கோட்டத்திற்கு உட்பட்ட சில்ஹல்லா வனப்பகுதியில் காட்டு மாட்டைச் சுட்டு வீழ்த்திய கேரள வேட்டைக் கும்பலினர் வனத்துறையினரிடம் இருந்து தப்பித்து ஓடியுள்ளனர். பிடிபட்ட ஒருவரைக் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இது குறித்து தெரிவித்த வனத்துறையினர், "வன பணியாளர்கள் இரவு ரோந்தின்போது சந்தேகப்படும் படியான நபர்களின் நடமாட்டம் இருப்பதை அறிந்து நெருங்கும் வேளையில் தப்பி ஓடிவிட்டனர். நாங்கள் துரத்திச் சென்றதில் கேரள மாநிலம் வழிக்கடவு பகுதியைச் சேர்ந்த ரெஜி என்கிற ஒருவனைப் பிடித்தோம்.

காட்டு மாட்டை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றதை ஒப்புக் கொண்டான். இறந்து கிடந்த காட்டு மாட்டின் உடலில் பாய்ந்திருந்த இரண்டு தோட்டாக்களைக் கைப்பற்றி ஆய்வுக்கு அனுப்பியிருக்கிறோம். தப்பிய ஓடிய அவனின் கூட்டாளிகளைத் தேடி வருகிறோம். வனவிலங்கு வேட்டையைத் தடுக்க இரவு பகலாக ரோந்து மேற்கொண்டு வருகிறோம்" என்றனர்.


















